கண்ணா! ஸனகருக்கு நீதானே உபதேசம் செய்திருக்க வேண்டும்? எப்போது செய்தாய்? என்று கேட்டார் உத்தவர்.
கண்ணன் உத்தவனின் ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்தான்.
ஹிரண்யகர்பனாகிய ப்ரும்மாவின் மனத்திலிருந்து ஸனகர் ஸனந்தனர், ஸநாதனர், ஸனத்குமாரர், ஆகியோர் தோன்றினர்.
நால்வரும் ஒரு சமயம் தந்தையான ப்ரும்மாவிடம் யோக சூட்சுமங்கள் பற்றிக் கேள்வி எழுப்பினார்கள்.
தந்தையே! மனம் இயல்பாகப் புலன் இன்பங்களில்தான் ஈடுபடுகிறது. அவற்றையேதான் சிந்திக்கிறது. ஆனால் அதே சமயம் முக்தியின் மீதும் ஆசை கொண்டுள்ளது. இந்நிலையை எப்படிக் கையாள்வது? புலன் இன்பங்களை வெல்லும் வழிதான் என்ன?
ப்ரும்மா அனைத்து தேவர்கட்கும் மேலானவர். ஆனாலும் அவர் கர்மங்களிலேயே மூழ்கியிருந்தார். அவரால் இக்கேள்வியின் உட்கருத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
அதனால் சற்று திகைத்தார். பின்னர் அதற்கு பதில் தேடி என்னை தியானம் செய்தார். நான் ஒரு பெரிய ஹம்ஸ வடிவம் எடுத்து அவர் அருகில் சென்றேன்.
என்னைப் பார்த்ததுமே அவர்கள் ஐவரும் வந்து என்னைப் பணிந்து தாங்கள் யார் என்று வினவினர்.
உண்மையான ஆன்ம வேட்கை கொண்ட அவர்களுக்கு நான் பதிலிறுக்கத் துவங்கினேன்.
தாங்கள் யார்? என்று கேட்டீர்கள். இந்தக் கேள்வி ஆத்மாவைப் பற்றியதா? என்றால் ஆத்மா என்பது இரண்டல்லவே. எப்போதும் ஒன்றே ஒன்றுதான்.
ஆத்மாக்கள் பல என்றானால் தான் நீங்கள், நான் என்றெல்லாம் பிரிக்க இயலும். ஆத்மாவைத் தவிர வேறொன்று இல்லாததால் இக்கேள்விக்கு பதில் கூற இயலாது.
பஞ்ச பூதங்கள் எல்லா உடல்களிலும் இருக்கின்றன. எனவே அவை அனைத்தும் சமம்மானவை. தாங்கள் யார் என்பவை வெற்றுச் சொற்களே தவிர, அவற்றிற்குப் பொருள் இல்லை.
மனம், வாக்கு, கண், மற்றும் பிற பொறிகளால் ஆகியவற்றால் எவையெல்லாம் உணரப்படுகின்றனவோ, பார்க்கப்படுகின்றனவோ, கேட்கப்படுகின்றனவோ அவை அனைத்தும் நான்தான். என்னைத்தவிர இங்கு வேறெதுவுமே இல்லை.
மனம் புலன் இன்பங்களில் மூழ்குவதால் குணத்தைப் பதிய வைத்துக் கொள்கிறது. குணங்களற்ற சித்தமாகவும் குணங்களாகவும் ஜீவன் இரு உடல்களைக் கொள்கிறது.
ஜீவன் ஆத்மஸ்வரூபம் என்பதை உணர்ந்தால் இவற்றைத் துறந்துவிடும்.
விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய மூன்றும் புத்தியின் செயல்கள். ஜீவன் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. அந்த நான்காவதான துரீய நிலையில்நின்று பரமாத்ம ஸ்வரூபத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும். பொருட்பற்று, மனம் இரண்டையும் உதறித்தள்ளவேண்டும். நான் எனது என்ற எண்ணங்கள்தாம் உண்மையை உணரத் தடையானவை. ஞானி அவ்வெண்ணங்களைத் துறந்து நான்காவது நிலையான நான் பரமாத்மாவின் வடிவம் என்பதில் உறுதிப்பாட்டுடன் நிற்கவேண்டும்.
பொருள்கள் பல என்பதை ஆத்மவிசாரத்தின் மூலம் விலக்காதவனுக்கு, ஞானத்தின் வாசல் திறவாது. ஆனால் ஞானிக்கும் உலக வாழ்வு நடக்கிறதே என்று வினவலாம். ஞானிக்கு இவ்வாழ்வு கனவு நிலை போன்றது. கனவு எப்படி விழிப்பில் நடப்பவைகளைப் பாதிக்காதோ அதுபோல் ஞானிக்கு இவ்வுலக வாழ்வு பாதிப்பதில்லை.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment