கண்ணன் தொடர்ந்து கூறலானான்.
உத்தவா! ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் புத்தியினுடையவை. ஆத்மாவினுடையவை அல்ல. ஸத்வ குணத்தினால் மற்ற இரு குணங்களையும் அழித்து விட வேண்டும். பின்னர் ஸத்வ குணம் முழுவதுமாக வியாபிக்கும் நிலையில் அதையும் கடந்து குணங்களற்று நிற்கவேண்டும்.
ஸத்வகுணம் அதிகரிக்கும்போது பக்தி வளரும். ஸாத்வீகப் பொருள்களை ஏற்பதால் ஸத்வகுணமும் தர்ம சிந்தனையும் வளரும்.
சாஸ்திரம், நீர், சந்ததி, வாழும் தேசம், காலம், கர்மா, பிறப்பு, தியானம், மந்திரம், கர்ம வாசனை ஆகிய பத்தும் குணங்கள் அமையக் காரணிகளாகின்றன.
சுலபமாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனில்,
எவைகளைப் பற்றி சான்றோர் புகழ்கிறார்களோ அவை ஸாத்வீகம் எனவும், எவற்றைத் தள்ளுகிறார்களோ அவை ராஜஸம் எனவும், எவற்றை இழித்துப் பேசுகிறார்களோ அவற்றை தாமஸம் எனவும் கொள்ளலாம்.
மூங்கில் காட்டில், மூங்கில்கள் உராய்வதாலேயே நெருப்பு உண்டாகும். அது காட்டையே அழித்துவிடும். அதுபோல் குணக் கலவைகளினால் தோன்றிய இவ்வுடலைக் கொண்டு விசாரம் செய்து ஞானம் பெற்றதும் அந்த ஞானாக்னியாலேயே அழிந்துபோகும்.
உத்தவன் இடை மறித்தான்.
கண்ணா! புலன்களால் நுகரப்படும் விஷயங்கள் தீமை விளைவிக்கும் என்பதை அறியாத மனிதர்களே இல்லை எனலாம். தீய செயல்களைச் செய்யும்போதே அதைத் தீமை என்று அறிந்தேதான் இருக்கிறார்கள். இருப்பினும் அந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து, நாய், கழுதை, மற்றும் ஆடு போல துன்பத்தைத் தாங்கிக்கொண்டு புலன் இன்பத்திலேயே குறியாக இருக்கிறார்களே. அதன் காரணம் என்ன?
கண்ணன் உத்தவனை வாஞ்சையுடன் பார்த்தான்.
உத்தவா! நான், எனது என்ற அஹங்காரம்தான் காரணம். மனம் ஸாத்வீக அஹங்காரத்திலிருந்துதான் தோன்றுகிறது. ஆனால் நான், எனது என்று பற்று கொண்டு மெல்ல மெல்ல ரஜோகுணம் தோன்றி முழுதுமாக ஆக்ரமிக்கிறது.
ரஜோகுணத்தினால் சங்கல்பங்கள் தோன்றுகின்றன. விருப்பு, வெறுப்புகள் பெருகி, தீய குணமும் வளர்கிறது.
அது தாங்கமுடியாத அளவு பெருகும்போது காம சிந்தனை ஆக்ரமிக்கும். அதிலிருந்து விடுபடுவது மிகக் கடினம். காமவயப்பட்ட மனிதனால் எந்தப் புலனையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க இயலாது. அதற்குத் தீனி போடுவதற்காகப் பல்வேறு காரியங்களைச் செய்து மேலும் மேலும் மாட்டிக்கொள்கிறான். அவற்றின் விளைவு துன்பம்தான் என்று அவன் நன்கறிந்தபோதிலும் அவனால் நிறுத்த இயலாது.
மெய்யறிவு பெற்றவர்களும் கூட சில சமயம் ரஜோ குணத்தினால் தடுமாறுவார்கள். ஆனால், ஞானத்தின் பயனாக பெருமுயற்சி எடுத்து மனத்தைத் திருப்பி மீண்டுவிடுவார்கள்.
ஆன்மீகத்தில் முன்னேற வேண்டுமானால் சோர்வில்லாத பயிற்சியும் முயற்சியும் செய்து மனத்தை என்னிடம் வைக்கவேண்டும். அலுப்பின்றிச் செய்யப்படும் முயற்சியால் ஆசனமும் சுவாசமும் வசப்படும். இவற்றால் மனம் மற்ற விஷயங்களிலிருந்து விடுபடுவது சுலபம். இந்த யோகம் ஸனகரால் உபதேசிக்கப்பட்டதாகும்.
உத்தவர் அடுத்த கேள்விக்குத் தயாரானார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment