கண்ணன் கூறியதைக் கேட்ட உத்தவன் மீண்டும் கேட்டார்.
நீங்கள்தான் பரப்ப்ரும்மம். உங்கள் சொந்த சங்கல்பத்தின்படி உருவம் ஏற்றிருக்கிறீர்கள்.சாதுக்களின் லட்சணம் என்ன? பக்தி செய்யும் முறை என்ன? உங்களையே நம்பியிருக்கும் எனக்கு விளக்குங்கள் என்றான்.
கண்ணன் உத்தவனைக் கருணையுடன் பார்த்தான்.
உத்தம பக்தன் எல்லா உயிர்களிடத்தும் கருணை உள்ளவன். நன்றி மறவாதவன். உடலுக்கேற்படும் துன்பங்களை லட்சியம் செய்ய மாட்டான்.
உண்மையே பேசுவான். தூய்மையான உள்ளத்துடன் அனைவரிடத்தும் சமமாகப் பழகுவான். அனைவர்க்கும் உதவி செய்வான். தனிப்பட்ட விருப்பங்கள் அற்றவன். மிகவும் மென்மையானவன். செல்வத்தில் ஆசையற்றவன். அளவாக உண்பவன். எப்போதும் மன அமைதியோடு இருப்பவன். நிலையான எண்ணம் கொண்டவன். என்னை எப்போதும் நம்புபவன். அவனிடம் மனத் தடுமாற்றம் இருக்காது.
ஆறு பகைவர் எனப்படும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யங்கள் அற்றவன். இழிவுகளைப் பொருட்படுத்தாதவன். பிறரை மனமார வாழ்த்துபவன். தெள்ளிய ஞானம் உடையவன்.
நலம் விளைவிக்கும் நற்செயல்களைக் கூட பக்திக்குத் தடையாக இருப்பின் தியாகம் செய்துவிடுவான்.
என்னைப் பற்றி அறிந்தோ அறியாவிட்டாலுமோ கூட முழு மனத்துடன் என்னை நம்பி பக்தி செலுத்துவான். என் உருவச் சிலைகள், என் பக்தர்கள் ஆகியவற்றைக் காண்பதில் பேராந்தம் கொள்வான்.
- வழிபாடு, துதித்தல், வணங்குதல்,
- என் லீலைகளையும் குணங்களையும் சிரத்தையாகக் கேட்டல், பாடுதல், என்னை எப்போதும் நினைத்தல்,
- தான் உள்பட எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் செய்தல்.
- என் அவதாரங்களையும் லீலைகளையும் பேசி பேசி மகிழ்தல்,
- என் அவதார தினங்களைக் கொண்டாடுதல்,
- இசை, நாட்டியம், வாத்யங்கள், ஆகியவற்றைத் தனியாகவும், கோஷ்டியாகவும் வீட்டிலும் கோவில்களிலும் பாடி உற்சவங்கள் நடத்துதல்,
- ஆண்டுதோறும் தீர்த்த யாத்திரை,
- தலங்களுக்குச் செல்லுதல்,
- என் தொடர்புடைய விரதங்களை அனுஷ்டிப்பது,
- என் அர்ச்சாமூர்த்தி களை நிறுவுதல்,
- தோட்டம், சோலைகள், மைதானம், நகரம், கோவில் ஆகியவற்றைக் கட்டுதல்,
- முதலிய பொதுச் சேவைகளைத் தனியாகவோ கூட்டாகவோ செய்தல்,
- ஒரு அடிமை போல் கோவில் சேவகம் செய்தல்,
- கர்வமில்லாமல் இருத்தல்,
- எவரையும் ஏமாற்றாமல் இருந்த்தல்,
- தான் செய்த நற்காரியங்களைப் பறை சாற்றாமை,
- தனக்கு மிகவும் பிடித்ததை எனக்கு அர்ப்பணம் செய்தல்,
ஆகியவை மிகுந்த பலனைத் தரக்கூடியவை.
சூரியன், அக்னி, ப்ராமணன், பசு, வைஷ்ணவன், ஆகாயம், வாயு, தண்ணீர், பூமி மற்றும் எல்லா ப்ராணிகள் ஆகியவற்றில் என்னை உருவகமாக எண்ணி வழிபடலாம்.
மூன்று வேத மந்திரங்களால் சூரியனை நானாக வழிபடவேண்டும். அந்தணர்க்கு விருந்தளிப்பதும், அக்னியில் ஆஹூதி கொடுப்பதும், பசுவுக்குப் புல்லைக் கொடுப்பதும் என்னைப் பூஜிப்பதே ஆகும்.
என் அடியார்களை சகோதரர் போல் நேசிக்கவேண்டும். தியானத்தின் மூலம் மனம் எனும் ஆகாயத்திலும், ப்ராணன் என்ற வாயுவிலும் தண்ணீரிலும் என்னை ஆராதிக்கலாம். பூக்களால் வழிபடுவது சிறந்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment