கண்ணன் மேலும் கூறலானன்.
உத்தவா! இவ்வுடல் தெய்வாதீனமாகக் கிடைக்கிறது. முன் வினைப் பயனுக்கேற்ப குணங்கள் தூண்டுவதால் செயல் புரிகிறது. அறிவற்றவன் எல்லாவற்றையும் தானே செய்வதாக எண்ணுகிறான்.
இவ்வுலகின் அனைத்து நியமங்களையும் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் ஞானி அவற்றில் ஒட்டுவதில்லை. ஆகாயம், பூமி, சூரியன் போல் அவனும் சாட்சியாக நிற்கிறான்.
கனவிலிருந்து விழிப்பவன் போல் ஞானியின் எல்லா மயக்கங்களும் விலகிவிடுகின்றன. யாருடைய புலன், புத்தி, மனம் ஆகியவை முழுமையடைந்து கட்டுப்பாடுகளிலிருந்து விலகுகிறதோ, உலகாயத கர்மத் தளைகள் அகன்றனவோ, அவன் ஒரு உடலில் இருந்தாலும் குணங்களற்றவனாக விளங்குகிறான்.
யாராவது துன்பம் இழைத்தாலும், கௌரவம் அளித்தாலும் அவை அவனைப் பாதிப்பதில்லை.
அவதூறுகள், புகழுரைகள் எதையும் அவன் பொருட்படுத்தமாட்டான்.
அப்படிப் பேசுகிறவர்கள் மீதும் விருப்போ வெறுப்போ இன்றி சமத்ருஷ்டியுடன் இருப்பான். எதையும் பேசாமல், செய்யாமல் நினைக்காமல் ஜடம் போல் சுற்றுவான்.
எவ்வளவு உயர்ந்த கல்வி கற்றாலும் ப்ரும்மத்தை அறியவில்லை எனில் அவை வீண். கற்கும் வித்தை அனைத்தும் தன்னை உணர்த்தவேண்டும்.
இவ்வுலகைப் படைத்து காத்து அழித்துப் பல லீலைகள் செய்யும் என்னைக் கூறாத உரைகள் பயனற்றவை. அவை பிறவிச் சுழலில் அழுத்தக்கூடியவை.
என்னிடமே மனத்தை முழுமையாக அர்ப்பணித்து மற்ற செயல் சிந்தனைகளிலிருந்து விடுபடவேண்டும். மனம் ஒருமைப்படவில்லை எனில், செய்யும் அனைத்து செயல்களின் பலன்களையும் எனக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
என் கதைகளை அடிக்கடி கேட்கவேண்டும். என் அவதார தினங்களைக் கொண்டாடி உற்சவங்கள் செய்யவேண்டும்.
என்னையே புகலாகக் கொண்டு என் பொருட்டே அனைத்து செயல்களையும் செய்பவன் என்னிடம் அசைக்க முடியாத பக்தியைப் பெறுகிறான். நல்லோர் சங்கத்தினால் பக்தி உண்டாகும். அவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும்.
இவ்வாறு நடப்பவர் விரைவில் என்னையே அடைகிறார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment