#ச்ருதி_கீதை
வேதங்கள் ப்ரும்மத்தைத்தான் குறிப்பிடுகின்றன என்று முன்னால் கூறப்பட்டது. ஒரு இடத்தில் அனைத்து சராசரங்களுக்கும் தலைவன் இந்திரன் என்கிறது. ஒரு இடத்தில் அக்னியை உலகைக் காப்பவன் என்கிறது.
இவ்வாறு பல தேவதைகளை வர்ணிக்கும் வேதங்கள், ப்ரும்மம் ஒன்றே என்று கூறுகின்றன.
இது எப்படிப் பொருந்தும் என்று பரீக்ஷித் நினைக்கக்கூடும் என்பதால் அந்தக் கேள்விக்கு மீண்டும் விளக்கமாகப் பதில் கூறினார் ஸ்ரீ சுகர்.
ச்ருதிகள் இறைவனை எழுப்புமாறு கூறுகின்றன. இந்திராதி தேவர்களைப் பற்றிய வர்ணனை உண்மைதான். ஆனாலும், ரிஷிகள் இங்கு காண்பது அனைத்தையுமே ப்ரும்மம் என்று தான் எண்ணுகிறார்கள்.
இப்போது காணும் உலகம் ப்ரளயத்தின்போது அழிந்தாலும் ப்ரும்மமான தாங்கள் இருக்கிறீர்கள். இந்த ஜகத் தங்களிடமிருந்தே தோன்றி வளர்ந்து தம்மிடமே ஐக்கியமாகிறது. கடைசியில் மிஞ்சுவது ப்ரும்மமாகிய தாங்களே.
குடம், மடக்கு போன்றவை மண்ணைக்கொண்டு செய்யப்பட்டாலும், மக்கி மண்ணாகவே ஆகின்றன.
குடமாவதற்கு முன்பாகவும் உடைந்து அழிந்த பின்பும் அது மண்ணே. குடம் என்று சொன்னாலும் அது மண்ணை வர்ணிப்பதே ஆகும்.
ப்ரும்மம் மாறுபாடு உடையதா என்றால் அதுதான் இல்லை. இந்தப் பிரபஞ்சம் தங்களிடமிருந்து தோன்றுவதுபோல் காணப்பட்டாலும் அனைத்தும் தாங்களே. இந்திராதி தேவர்களை வர்ணிப்பதும், தங்களை வர்ணிப்பதே ஆகும்.
மாயையினால் இவ்வுலகில் ஒவ்வொரு கணமும் மாற்றங்கள் நிகழ்கின்றன. முனிவர்களோ வாக்கினாலும் மனத்தினாலும் மாறாத ப்ரும்மமான தங்களையே எண்ணுகின்றனர்.
கல், மண், கட்டில் எங்கு கால் வைத்தாலும் அது பூமியில் கால் வைப்பதே ஆகும். ஏனெனில் அவை அனைத்தும் பூமியின் வடிவங்களே. எனவே வேதங்களாகிய நாங்கள் எதை வர்ணித்தாலும் அது தங்களைப் பற்றியதே.
வேதங்களாகிய நாங்கள் தங்கள் கல்யாண குணங்களையே வர்ணிப்பதால், சான்றோர்கள் தங்களது மங்கலமான குணங்களைக் காதுகளால் பருகி, வாயால் மற்றவர்க்குச் சொல்லி, உள்ளத்தில் இருத்தி, அன்பை வளர்க்கிறார்கள். தங்கள் மேலுள்ள மேலான அன்பால் இவ்வுலகியலிலிருந்து விடுபடுகிறார்கள்.
மானுட உடல் பெற்ற ஒருவன் அப்பிறவியிலேயே ப்ரும்மமாகிய தங்களை உணர்வானாகில் அவனது பிறவி பயனுற்றதாகும். இல்லையேல் பிறவி வீணாகும்.
(பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
- திருக்குறள்)
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment