#ச்ருதி_கீதை
ஜய ஜய என்று துவங்கும் உபநிஷத், ஸனகர் முதலியவர்களால் முடிவு செய்யப்பட்டு அனைவராலும் ஏற்கப்பட்டது. அதை நம்பிக்கையுடன் ஏற்பவன் எல்லா தளைகளினின்றும் விடுபடுகிறான்.
இதன் விளக்கமாக பகவான் நாராயணர், நாரத மஹரிஷிக்குச் சொன்ன கதையை உனக்குச் சொல்லுகிறேன். என்றார் ஸ்ரீ சுகர்.
நாரதர் ஒரு சமயம் பத்ரியிலுள்ள நாராயண ரிஷியைக் காணச் சென்றார். அவர் இந்தக் கல்பத்தின் துவக்கத்திலிருந்து உலக நன்மைக்காகத் தவம் செய்து வருகிறார்.
பரீக்ஷீத்! அந்த நாராயணரின் ஆசிரமத்தில் அவர் பல ரிஷிகள் புடைசூழ அமர்ந்திருக்கும் சமயம் நாரதர் அங்கே சென்று நீ இப்போது என்னிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார்.
நாராயணர் கூறத் துவங்கினார்.
நாரதரே! முன்பொரு சமயம் ஜனலோகத்தில் ஸனகாதியர் நால்வரும் ப்ரும்ம ஸத்ரம் நடத்தினார்கள்.
அப்போது நீங்கள் ஸ்வேத தீபத்திற்கு அநிருத்தனைக் காணச் சென்றிருந்தீர்கள். அப்போது ப்ரும்மத்தைப் பற்றிய விவாதம் நிகழ்ந்தது.
ஸனகாதியர் நால்வருமே கல்வி, கேள்வி, ஒழுக்கம், தவம் ஆகியவற்றில் சிறந்தவர்கள். என்றாலும் அவர்கள் ஸனந்தனரை ப்ரும்மத்தை வேதம் எவ்வாறு விளக்குகிறது என்று கேட்டனர்.
ஸனந்தனர் கூறிய பதில் ச்ருதி கீதை என்று போற்றப்படுகிறது.
ப்ரளய சமயத்தில் பரமாத்மாவான ஆதிபுருஷன் அனைத்துலகையும் தனக்குள் லயமாக்கிக்கொண்டு தன் அனைத்து சக்திகளையும் அடக்கி யோக நித்ரை செய்து கொண்டிருந்தார். ப்ரளய காலம் முடிந்து படைப்பு துவங்கும் காலம் வந்தது. அப்போது அவரது மூச்சுக்காற்றாக வேதங்கள் அவரிடமிருந்தே வெளிவந்தன.
அயர்ந்து உறங்குகின்ற அரசனை வந்திகள் துதிபாடி எழுப்புவதுபோல் வேதங்கள் அவரைத் துதி செய்யலாயின.
அகில உலகங்களையும் வெற்றிகொண்டவரே! இயற்கையிலேயே அனைத்து செல்வங்களையும் பெற்றவரே! அனைத்துயிர்களையும் கட்டுப்படுத்தும் மாயையை அழித்தருள வேண்டும்.
இந்த மாயை ஜீவன்களின் உண்மை நிலையை மறக்கடிக்கிறது. ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களை ஏற்கிறது. ஜீவன்களின் சாதனை, அறிவு, செயல் ஆகியவற்றைத் தூண்டுபவர் அந்தர்யாமியாக உறையும் தாங்களே. தாங்கள் சில சமயம் மாயையை ஏற்று இவ்வுலகமாக விளங்குகிறீர்கள். சில சமயம் ஸத் சித் ஆனந்த ஸ்வரூபமாகத் தனித்து நிற்கிறீர்கள். ஸங்கல்ப மாத்திரத்தில் உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரிகிறீர்கள். உலகின் நலனுக்காக திருவவதாரங்களும் செய்கிறீர்கள். தங்களை வர்ணிக்கும் திறனோ, துதிக்கும் வல்லமையோ எங்களுக்கில்லை.
இதன் பொருளாவது ஒரு அரசனை சாமான்யன் அரசவையில் சென்று காண இயலாமல் போகலாம். ஆனால் அரசனே நகர்வலம் வரும்போது காண இயலும். ஆனால் அப்போது அரசன் மாறுவேடத்திலிருந்தால் சாமான்யனால் அறிய இயலாது. ஆனால் அவன் கண்டது அரசனைத்தானே. உண்மை அறியாதவர்கள் வேதத்தின் கூற்றை மறுக்கலாம். உணர்ந்தவர் அனைவரும் நிர்குணம்தான் ஸகுணமும் என்ற கூற்றை ஒப்புக்கொள்வார்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment