நரகாசுரன் சிறைப்பிடித்த இளவரசிகள் பதினாறாயிரம் பேரையும் கண்ணன் மணந்துகொண்டதைப் பார்த்து நாரதருக்கு அவன் எப்படி குடும்பம் நடத்துகிறான் என்று பார்க்க ஆர்வம் மேலிட்டது.
ஒரு மனைவியுடன் குடும்பம் நடத்தவே சாமான்ய மக்கள் திணறிக்கொண்டிருக்க, கண்ணன் எப்படி இவ்வளவு பேரை சமாளிக்கிறான் என்று எண்ணினார் போலும்.
திரிலோக சஞ்சாரியான நாரதரால் எவ்விடத்திலும் மூன்று நாழிகைகளுக்கு மேல் நிற்க இயலாது என்று தக்ஷன் சாபமளித்திருந்தான். ஆனால், பகவான் விளங்கும் துவாரகையில் சாபம் பலிக்காது என்பதால் நாரதர் அங்கு தங்கி கண்ணனின் இல்லற வாழ்க்கையை கவனிக்க விரும்பினார்.
மரங்களும் சோலைகளும் பூத்துக் குலுங்கும் துவாரகைக்கு வந்தார் நாரதர்.
எத்தனை மனைவியரோ அத்தனை வடிவம் கொண்டு மிக அழகாக கண்ணனின் இல்லற வாழ்வு நடந்து கொண்டிருந்தது.
அத்தனை மாளிகைகளும் ஸ்படிகத்தாலும், சந்திரகாந்தக் கற்களாலும் கட்டப்பட்டவை. அவற்றில் மரகதப் பச்சைக் கற்கள் பதிக்கப்பட்டு ஒளிவீசின.
ராஜவீதிகள், நாற்சந்திகள், கடைவீதிகள், யானை,குதிரை லாயங்கள், சபைகள், கோவில்கள் ஆகியவை நிறைந்து காணப்பட்டது துவாரகை. வீடுகள் அனைத்தும் நன்கு வாசல்மெழுகப்பெற்று, கோலமிடப்பட்டு, தீபங்கள் அலங்கரித்தன.
ஆங்காங்கே கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன.
கண்ணனின் வீடுகள் அனைத்தும் கண்ணனின் அந்தப்புரப் பகுதியில் இருந்தன.
அவற்றுள் ஒரு பெரிய மாளிகைக்குள் நுழைந்தார் நாரதர்.
பணிப்பெண்களும், பணியாளர்களும் மிக அழகாக அலங்கரித்துக் கொண்டு தமது பணியைச் செய்துகொண்டிருந்தனர்.
ஆங்காங்கே தீபங்கள் பிரகாசிக்க அகிற்புகையின் நறுமணம் மாளிகை முழுவதும் சூழ்ந்திருந்தது.
அந்த மாளிகையில் ஆயிரம் பணிப்பெண்களுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த கண்ணனுக்கு ருக்மிணி விசிறிக்கொண்டிருந்தாள்.
நாரதர் வந்திருப்பதை அறிந்த கண்ணன் சட்டென்று எழுந்து வந்து அவரை வணங்கினான்.
யாருடைய பாதத்திலிருந்து கங்கை பெருகுகிறதோ அந்த பகவான் நாரதருக்குப் பாதபூஜை செய்து நீரைத் தலையில் தெளித்துக்கொண்டான்.
அவரை நாவினிக்கப் பேசி வரவேற்று 'தமக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும்' என்று கேட்டான்.
பகவான் தாமே கேட்கும்போது விடலாமா..
குருமார்களில் தலைசிறந்தவரான நாரதர் உடனே,
மூன்று தாபங்களையும் போக்கவல்ல இறைவா! ப்ரும்மா முதலானவர்களும் தங்கள் திருவடிகளையே த்யானிக்கின்றனர். எனக்கும் எப்போதும் தங்களது திருவடியே நினைவில் நிற்கவேண்டும் என்று கேட்டார்.
பின்னர் சிறிதுநேரம் அளவளாவிவிட்டு அங்கிருந்து கிளம்பி அடுத்த மாளிகைக்குச் சென்றார்.
அங்கே தன் மனைவி மற்றும் உத்தவருடன் கண்ணன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தான். நாரதரைக் கண்டதும் விருட்டென்று எழுந்தோடி வந்தான். அவரை பக்தியுடன் வரவேற்று, ஆசனமளித்து பாதபூஜை செய்தான். அந்த நீரைத் தான் தலையில் தெளித்துக்கொண்டு மனைவிக்கும் உத்தவருக்கும் தெளித்தான்.
மஹரிஷியே! தாங்கள் எப்போது துவாரகை வந்தீர்? இங்கு வர இப்போதுதான் வழி தெரிந்ததா? நான் உங்களுக்கு என்ன சேவை செய்யவேண்டும்? என்று கேட்டான்.
நாரதர் சந்தர்ப்பத்தை விடாமல், இப்பிறவி உன் நினைவிலேயே பயனுள்ளதாகக் கழியவேண்டும் என்று கேட்டார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி அடுத்த வீட்டிற்குள் சென்றார் நாரதர். அங்கே கண்ணன் தன் சின்னஞ்சிறு குழந்தைகளை மடியில் அமர்த்திக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
நாரதரைக் கண்டதும் ஓடோடி வந்து அவரது பாதத்தில் விழுந்தான். குழந்தைகள் மனைவி அனைவரையும் நமஸ்காரம் செய்யச் சொன்னான். பின்னர் பாத பூஜை செய்தான்.
என்ன வேண்டும் என்று கேட்க, நாரதர் என்றும் உன் நினைவு வேண்டும் என்று வரம் கேட்டார்.
இப்படியாக நாரதர் ஒவ்வொரு வீடாகச் சென்றார். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கண்ணன். அக்னியில் ஹோமம் செய்துகொண்டு, சமாராதனை செய்துகொண்டு, உறங்கிக்கொண்டு, மந்திரிகளுடன் ஆலோசனை செய்துகொண்டு, புராணங்களைக் கேட்டுக்கொண்டு, மனைவியுடன் பேசிக்கொண்டு, பொருள் சேர்ப்பதைப்பற்றி யோசித்துக் கொண்டு, யானைப்படை குதிரைப்படை வீரர்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டு, பலராமனிடம் சமாதானம் பேசிக்கொண்டு, பெண்ணுக்கு திருமண விஷயமான ஆலோசனை செய்து கொண்டு, மருமகளை வரவேற்றுக்கொண்டு, குளம் வெட்ட மேற்பார்வை செய்துகொண்டு, வேட்டைக்குக் கிளம்பிக்கொண்டு, மாறுவேடம் பூண்டு நகரசோதனைக்குக் கிளம்பிக்கொண்டு, என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட நாரதருக்கு மயக்கமே வந்துவிட்டது.
மிகவும் பிரமித்துப்போன அவர், 'இறைவா! தங்கள் யோகமாயையின் மகிமையை இன்று கண்டேன். தங்களது லீலைகளை ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சென்று பாடுவேன். அதற்கு அனுமதி தாருங்கள்.'
என்று கேட்டார்.
கண்ணன் அதற்கு மிக அழகாக பதிலுரைத்தான்.
தேவரிஷியே! தர்மத்தை உபதேசிப்பவன், செய்பவன், பலனைக் கொடுப்பவன் அனைத்தும் நானே. நான் புகட்டும் தர்மத்தை நடத்திக் காட்ட வேண்டாமா. அதற்காகவே அத்தனை விதமான தர்ம காரியங்களையும் இல்லற வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டு செய்துகாட்டுகிறேன். என் யோகமாயையைக் கண்டு அஞ்சாதீர்.
என்றான்.
இல்லறத்தார்க்குரிய அனைத்துக் கடைமைகளையும் கண்ணன் தனித்தனி உருவெடுத்து செய்து கொண்டிருந்ததைக் கண்டார் நாரதர். அத்தனை கண்ணனும் நாரதரைக் கண்டதும் வணங்கி வரவேற்று பாதபூஜை செய்ததைக் கண்டு அவனுக்கு அந்தணர்களிடத்திலும், பக்தர்களிடத்திலும் எவ்வளவு மரியாதையும் வாஞ்சையும் என்று புரிந்து கொண்டார்.
இதுவரை எந்த அவதாரத்திலும் தானே செய்திராத, வேறெவராலும் செய்ய இயலாத அற்புதமான பல லீலைகளைக் கண்ணன் செய்தான். அவையனைத்தையும் பாடுபவர், பாடிக் கேட்பவர், அவர்கள் இருவரையும் கண்டு மகிழ்பவர் ஆகிய அனைவரும் கண்ணன் மீது ஆழ்ந்த பக்தியைப் பெறுவர்.
என்று கூறினார் ஸ்ரீ சுகர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment