கௌரவர்கள் இழிவாகப் பேசியதைக் கேட்ட பலராமன் கடுங்கோபமுற்றபோதும் சிரித்துக் கொண்டே உத்தவனிடம் கூறினான்.
துஷ்டர்களுக்கு அமைதி பிடிக்காது. இவர்களுக்குத் தண்டனைதான் சிறந்தது.
கண்ணனும் மற்ற யாதவர்களும் யுத்தத்திற்குத்தான் கிளம்பினர். நான்தான் உறவுகளுக்குள் சண்டை வேண்டாம் என்று அமைதியை நாடி வந்தேன்.
இந்திரன் முதலான தேவர்களே உக்ரசேனரின் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றனர்.
பகவான் கண்ணனையும் ஏளனம் செய்கின்றனரே. தேவலோகம் சென்று பாரிஜாதத்தையே பெயர்த்துக் கொண்டு வந்தும் கண்ணனின் பராக்ரமம் இவர்களுக்குப் புரியவில்லை. கண்ணன் அரியணைக்குத் தகுதியற்றவனா என்ன? தேவர்களும் பணிந்தேத்தும் அவனுக்கு சிங்காசனம் ஒரு பொருட்டா?
இவர்களது பேச்சை இனியும் பொறுக்கமாட்டேன்.
என்று கூறிக்கொண்டு கலப்பையை ஏந்திக்கொண்டு வேகமாகச் சென்றான்.
கலப்பையின் நுனியால் ஹஸ்தினாபுர நகரக் கோட்டையைப் பற்றி இழுத்தான். அப்படியே நகரமே கலப்பையுடன் இழுபட்டது.
நகரத்தை இழுத்துக்கொண்டு போய் கங்கையில் தள்ள முற்பட்டான் பலராமன்.
பெரிய நிலநடுக்கம் வந்ததுபோல் ஹஸ்தினாபுரம் ஆடிற்று. அனைவரும் நிலைகொள்ளாமல் விழுந்தனர். அரண்மனைகள் தூண்கள், வீடுகள் அனைத்தும் விரிசல் கண்டு ஆடின.
கௌரவர்கள் அனைவரும் பயத்தால் நடுங்கிக்கொண்டு ஓடிவந்து பலராமனின் திருவடிகளில் விழுந்தனர்.
மூலப்பொருளே! உலகனைத்தையும் தாங்குகின்ற ஆதிசேஷனே! இவ்வுலகமே தங்கள் விளையாட்டுப் பொருளாகும். எங்கள் தவற்றைப் பொறுத்தருளுங்கள். இவ்வுலகைத் தலையில் தாங்குகிறீர். வயிற்றில் அடக்கிக்கொண்டு மாயையால் வெளியில் இரண்டாகத் தோன்றுகிறீர்.
தங்களது கோபம் உலகை நல்வழிப்படுத்தி வழிகாட்டுவதற்கே பயன்படவேண்டும். எங்களை அழிக்கவேண்டாம். உம்மைச் சரணடைந்தோம். காப்பாற்றுங்கள். என்று கதறினார்கள்.
பலராமன் அமையுற்று, பயப்படாதீர்கள் என்று அபயம் அளித்தான். பின்னர் ஹஸ்தினாபுரத்தை விட்டான்.
இப்போதும் கங்கைக்குத் தெற்கே உள்ள ஹஸ்தினாபுரத்தின் பகுதி மேலெழும்பி உயரமாகவும், வடக்குப் புறம் தாழ்ந்தும் காணப்படுகிறது.
துரியோதனன் தன் மகள் லக்ஷ்மணாவை சாம்பனுக்கு முறைப்படி திருமணம் செய்து கொடுத்தான். திருமணச்சீராக 60 வயதான 1200 யானைகள், பத்தாயிரம் குதிரைகள், ஆறாயிரம் தங்க ரதங்கள், தங்க நகைகள் அணிந்த ஆயிரம் பணிப்பெண்கள் ஆகியவற்றைக் கொடுத்தான்.
அனைத்தையும் பெற்றுக்கொண்டு மகன் சாம்பன், மற்றும் மருமகள் லக்ஷ்மணாவை அழைத்துக்கொண்டு பலராமன் துவாரகை திரும்பினான்.
கண்ணனிடமும், மற்ற உறவினர்களிடமும் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment