கன்று மேய்க்கக் காடு சென்றான் கண்ணன். அண்ணனும் அவனும் இணையாக நடந்துவர, மற்ற சிறுவர்களுக்குள் ஒரே போட்டி. யார் கண்ணனுக்கிணையாக நடப்பது என்று. கண்ணனுக்குத் தெரியாமல் ஒருவரை ஒருவர் முட்டித் தள்ளிக்கொண்டு கண்ணனுடன் சேர்ந்து நடந்தனர்.
லட்சக் கணக்கான கன்றுகள் முன்னே துள்ளிக் குதித்துக் கொண்டு செல்ல புழுதிப் படலம் கிளம்பியது. அதற்கு நடுவே கண்ணனின் முகம் திரையிட்டதுபோல் தெரிவதைக் காண கோபியர்கள் அனைவரும் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டிருந்தனர். இனி கண்ணனை மாலைதான் காணமுடியும் என்ற ஏக்கம் அவர்களிடம் தெரிந்தது.
அனைவரையும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே மிகவும் ஒயிலாக நடந்து சென்றான் கண்ணன்.
காட்டை அடைந்ததுதான் தாமதம். அங்கே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் சென்று அமர்ந்து கொண்டான்.
எல்லாக் கன்றுகளையும் அதைச் சுற்றியுள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு அனுப்பினார்கள் குழந்தைகள். பின்னர் அனைவரும் கண்ணனைச் சூழ்ந்து கொண்டனர். அன்னை போட்டுவிட்ட தங்க ஆபரணங்கள், மாலை, அனைத்தையும் கழற்றி ஒரு துணியில் சுற்றி ஆலமரத்தின் பொந்தினுள் வைத்தான் கண்ணன்.
உடனே குழந்தைகள் அவனது எண்ணப்போக்கைப் புரிந்து கொண்டனர். அங்குமிங்கும் ஓடிச்சென்று காட்டு மலர்களைப் பறித்துவந்தனர். என்னென்னமோ பூக்கள் மற்றும் இலைகள். அனைத்தையும் சேர்த்து ஒரு மாலை கட்டினர். அதைக் கண்ணனுக்குச் சூட்டினர். நிறைய வண்ணத் தாதுப்பொடிகள் ஆங்காங்கே பாறைகளில் இருந்தன. அவற்றைச் சேகரித்து வந்து கண்ணனின் கன்னங்களிலும், நெற்றியிலும் பூசி, அழகாகப் போட்டு வைத்தனர்.
ஒருவன் குன்றிமணிகளைப் பொறுக்கிக்கொண்டு வந்தான். அவற்றை அழகாக ஓட்டை போட்டு மாலையாகக் கோர்த்தான் இன்னொருவன். அந்த மாலையையும் கண்ணன் மிகவும் உகப்போடு சூடிக்கொண்டான்.
அவரவர் மனம் போல் கண்ணனுக்கு அலங்காரம் செய்துவிட அத்தனையும் தனக்கு அழகு செய்யும்படியாக ஏற்றான் கண்ணன். இடைச் சிறுவர்கள் பலராமனுக்கும் அவ்வாறே அலங்காரம் செய்துவிட்டனர்.
நண்பர்கள் எல்லோரும் சாதாரணமாக அலங்காரம் இல்லாமல் இருக்கும்போது தனக்கு மட்டும் பொன்னகை எதற்கு என்று ஸ்வாமி நினைத்தான் போலும். மேலும் அவர்களுக்கு கண்ணனை அலங்கரித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்திருக்க வேண்டும். அதைக் கண்ணன் நிறைவேற்றினான். எனவேதான் அவ்வளவு அழகாக அலங்கரித்தனர். மாலையானதும் அனைத்தையும் களைந்துவிட்டு, பொந்திலிருந்து நகைகளை எடுத்து யசோதை போட்டுவிடுவதைப் போலவே மீண்டும் சிறுவர்களே அணிவித்துவிடுவார்கள்.
தினசரி இதுவே வாடிக்கையாயிற்று.
வீட்டிலிருந்து கிளம்பும்போது ஸர்வ அலங்காரத்துடன் ராஜமன்னாராகக் கிளம்பும் கண்ணன் காட்டுக்குச் சென்றதும் சாதாரணப் பூக்களால் அலங்காரம் செய்துகொண்டு காட்டுமன்னாராக விளங்கத் துவங்கினான்.
அலங்காரங்கள் முடிந்ததும் வேறென்ன? விளையாட்டு த் தான். கண்ணனுடன் விளையாடக் கசக்குமா? எத்தனை எத்தனை விளையாட்டுக்கள்?
கண்ணாமூச்சி ரேரே என்று கண்ணைக் கட்டிக்கொண்டு தேடும் விளையாட்டு உண்மையில் கண்ணன் உம்மாச்சி ரேரே என்பதாகும்.
கோலி அடித்தல், கிட்டுப் புள், ஒளிந்து விளையாடுதல், ஓடித் தொடுதல், ஒரு பொருளைப் பகிர்ந்து தொடரோட்டம், கண்ணைக் கட்டி விளையாடுதல், ஒளிந்து விளையாடுதல், பச்சைக் குதிரை தாண்டுதல், இலக்கு வைத்துக்கொண்டு ஓடுதல், ஒருவர் மீது ஒருவர் ஏறி உருவம் போல் ஆக்குதல், தவளை ஓட்டம், காட்டிலுள்ள விலங்குகளைப் போல் குரலெழுப்புதல், அவைகளைப்போல் நடத்தல், ஓடுதல் இன்னும் ஆயிரமாயிரம் விளையாட்டுக்களை முதன் முதலில் விளையாடச் சொல்லிக் கொடுத்தவன் கண்ணனே.
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்பது இவைகளுக்கும் சேர்த்துத்தான் சொல்லப்படுகிறது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment