Thursday, December 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 374

கண்ணனும் பலராமனும் கன்று மேய்க்கும் பருவத்தை எட்டினர். கண்ணனைப் பாடசாலையில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும் என்று நந்தன் விரும்பினார். தான் படிக்கவில்லையென்றாலும் தன் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பது தந்தையின் இயல்பல்லவா? ஆனால், கண்ணனுக்கு பாடசாலையில் படிக்க விருப்பமில்லை. அதற்காகப் பிறகு காலத்தை ஒதுக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தான் போலும். கோகுலத்தில் இருக்கும் வரை கோகுலவாசிகளைக் கணமும் பிரியக்கூடாது என்பது அவனது எண்ணமாக இருக்கலாம். கண்ணனின்  பிடிவாதத்தினால் அவனைப் படிக்க அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டார் நந்தன்.

இதன் நடுவில் கண்ணனுக்கு ஒரு புல்லாங்குழல் கிடைத்துவிட்டது. அது வந்ததிலிருந்து உறங்கும் நேரம்கூடக் கீழே  வைக்க மாட்டான்.

எந்நேரமும் கண்ணனின் இடுப்பிலேயே அமர்ந்திருக்கும் புல்லாங்குழல், சில சமயம் முதுகு சொறியவும், சில‌சமயம் நண்பர்களை அழைக்கவும், சில நேரங்களில் பானையில் ஓட்டை போடவும் பயன்பட்டது.
அவ்வப்போது வாசிக்கவும் செய்வான். அதைக் கேட்கும் யசோதை இவன் நம்மோடுதானே எப்போதும்‌ இருக்கிறான்.  எப்போது இவ்வளவு அழகாகக் குழலிசைக்கக்  கற்றுக்கொண்டான் என்று அதிசயிப்பாள்.

கண்ணன் கன்று மேய்க்கவும், ப்ருந்தாவனத்தில் விளையாடவும் மிகவும் விரும்பினான். ஆனால், யசோதைக்கோ அவனை வனத்திற்கு அனுப்ப மனம் இசையவில்லை.

என்னென்னமோ காரணங்கள் சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் கண்ணனிடம் எடுபடவில்லை. கண்ணன் எல்லாவற்றிற்கும் தயாராக பதில் வைத்திருந்தான். அவனது பிடிவாதமே வென்றது.

 மேலும், இடையர்களுக்கு மாடு மேய்ப்பது குலத் தொழில். எல்லா வீட்டுக் குழந்தைகளும் கன்று மேய்க்கக் கிளம்பும்போது கண்ணனை மட்டும் அப்பருவத்தில் வீட்டில் அமர்த்துவது சரியில்லை என்பதால் நந்தன் அனுமதித்தார்.

கண்ணன் கோலாஹலமாகக் கிளம்பினான்.

அழகிய பட்டாடை, தலையில் மயில்பீலி வைத்த கிரீடம்,  முத்து மாலைகள், காதுகளில் குண்டலங்கள், கைகளில் கங்கணங்கள், இடுப்பில் கிண்கிணி, கால்களில் நூபுரம் என்று மிக அழகாகக் கண்ணனை அலங்கரித்தாள். 

கன்று மேய்க்கக் கானகம்  செல்வதற்கு, இத்தனை அலங்காரங்கள் தேவையில்லை என்று கண்ணன் மறுத்தபோதும் அவளது மனம் ஏற்கவில்லை. 

ஒரு குச்சியின் உச்சியில் தயிர்சாத மூட்டையைக் கட்டிக்கொண்டு, கொம்பு, குச்சி, வேல், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான்.‌

மறக்காமல் குழலையும் எடுத்து இடுப்பில்‌ செருகிக்கொண்டு கிளம்பினான் கண்ணன்.

கண்ணனுடன் பலராமனும் கிளம்பினான். 

வீட்டு வாசலில் கண்ணனை ஒத்த சிறுவர்கள் அவனுக்காக வந்து காத்திருக்க,

அவர்களோடெல்லாம் சேரக்கூடாது. 
வெய்யிலில் அலையக்கூடாது, 
கன்னா பின்னாவென்று விளையாடக்கூடாது.
 அடிபடும்படியான ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது.
யமுனையில் நீந்துகிறேன் என்று இறங்கக்கூடாது.
 உச்சி வேளையில் உணவை உண்டுவிடவேண்டும். 
மீதி வைக்காமல் சாப்பிடவேண்டும். 

கண்ணனின் காதில் அறிவுரைகளைப் பலமுறை  ஓதிக்கொண்டே இருந்தாள் யசோதை.

எல்லாவற்றிற்கும் பொறுமையாக ம்ம், சரிம்மா, நீ சொன்னபடி செய்யறேம்மா‌ என்று பதிலுரைத்தான் ஸ்வாமி. எப்படியாவது கிளம்பினால் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு. வாசல் வரை வந்து வழியனுப்பினாள் அன்னை.


கன்றுகள் அனைத்தையும் முன்னால் விட்டு, அவற்றின் பின்னால் கண்ணனும்‌ பலராமனும் செல்ல,‌ அவர்கள் இருவருடன் இணையாகவும், பின் தொடர்ந்தும் மற்ற குழந்தைகள் சென்றனர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment