முசுகுந்தர் கண்ணனை வணங்கினார்.
பரமனே! தங்கள் மாயையில் மயங்கி அனைத்துலகும் இன்பத்தில் நாட்டம் கொள்கின்றன. துன்பத்தின் வாயிலான சிற்றின்பங்களில் மூழ்குகின்றன.
அவற்றில் பற்றுக்கொள்பவர்கள் ஏமாறுகிறார்கள்.
இந்தக் கர்ம பூமியில் மனிதப்பிறவி கிடைப்பது துர்லபமாகும். இப்பிறவியையும் உமது திருவடியை வணங்காமல் வீணடிப்பவர்கள் புல் மேயச்சென்று பாழுங்கிணற்றில் விழுந்த பசுவைப் போன்றவர்கள்.
அரசனாயிருந்ததால் மிகவும் மதம் கொண்டிருந்தேன். இவ்வுடலையே ஆத்மா என்றெண்ணி மனைவி, மக்கள், பூமி என்று உழன்று என் காலம் முழுதும் பயனற்றுப் போனது.
பெருஞ்சேனையுடன் அகந்தை கொண்டு புவியைச் சுற்றி வந்தேன். இம்மாதிரி இன்பத்தில் உழல்பவர்களைக் காலதேவனான நீங்கள் பாம்பு எலியைப் பிடிப்பதுபோல் பற்றுகிறீர்கள்.
புல்லாய்ப் புழுவாய், மிருகமாய் ஆயிரமாயிரம் பிறவிகளுக்குப் பின் மனிதப் பிறவியடைந்தும் முக்திக்கு வழி தேடாதவன் தனக்குத் தானே பகைவனாகிறான்.
எதிர்ப்பவரே இன்றி நாற்றிசையிலும் வென்று, அனைவராலும் வணங்கப்பெற்று மமதை கொண்டு சுற்றினேன். ஆனால் பெண்களின் வீடுகளுக்குப் போனால் அவர்களுக்கு செல்லப் பிராணிபோல் இருந்தேன்.
இவையனைத்தும் வீண்செயலென்று உணர்ந்து பக்தி செய்தலே முக்திக்கு வழி. முக்தியடையும் காலம் வரும்போதுதான் ஒருவனுக்கு சான்றோர்களின் நல்லிணக்கம் வாய்க்கிறது.
தங்களை முழுமனத்துடன் போற்றுபவர்க்கு அனைத்து ஆசைகளும் விடுபடும். தங்கள் கருணையால் என் மனத்தில் ஆசைகள் அற்றுப்போயின.
எனக்குத் தமது திருவடி சேவை வேண்டும். அதைத் தவிர வேறு வரம் வேண்டாம். தங்களையே சரணடைந்தேன். என்னைக் காத்தருளுங்கள். என்றார்.
கண்ணன் அவரைப் பார்த்து,
பார் முழுதும் ஒரே குடையின் கீழ் ஆண்ட பேரரசர் தாங்கள். தூய எண்ணம்கொண்டவர். உமக்கு வரமருளுவதாக ஆசை காட்டியும் நீங்கள் மயங்கவில்லை. தங்களது மன உறுதி போற்றத் தக்கது. என்னிடம் பக்தி கொண்ட உங்கள் மனம் இனி உலகியல் இன்பங்களில் செல்லாது.
பக்தியில்லாமல் எந்த சாதனை செய்தாலும் மனம் அடங்காது. அது வாஸனைகளைக் கிளப்பிவிடும்.
நீங்கள் என்னையே தியானம் செய்துகொண்டு இப்பூவுலகில் விருப்பம்போல் சுற்றிவாருங்கள்.
நீங்கள் அறநெறியில் நின்றாலும் வேட்டை என்ற பெயரில் ஏராளமான விலங்குகளை வதைத்தீர். அவ்வினை தீர என்னை நோக்கித் தவமிருங்கள். அடுத்த பிறவியில் அத்தனை உயிரினங்களிடமும் அன்பு கொண்டவராய்ப் பிறந்து என்னையே அடைவீர். என்றான்.
அசுரர்களுக்கெல்லாம் முக்தியளித்த கண்ணன், இவரை அடுத்த பிறவியில் அடையலாம் என்கிறான். ஸ்வந்தந்த்ரனான அவனது திருவுளத்தை யாரே அறிவர்? முசுகுந்தரால் தவம் செய்ய இயலும். எனவே அவ்வாறு வரச் சொல்கிறான். எந்த சாதனையும் செய்ய இயலாதவர்க்கு தன் கருணையின் பலத்தால் அப்பிறவியிலேயே முக்தியளித்துவிடுகிறான்.
முசுகுந்தர் குகையிலிருந்து வெளியேறினார். மரங்கள்,மனிதர்கள், விலங்குகள் அனைத்தும் சிறியதாக இருப்பதால் கலியுகம் வரப்போகிறதென்று உணர்ந்து வடக்கே சென்று கந்தமாதன மலையை அடைந்தார்.
கண்ணனிடமே உள்ளத்தைப் பதித்தார். இன்ப துன்பங்கள் ஆகிய இரட்டைகளைப் பொறுத்துக்கொண்டு தவம் செய்யத் துவங்கினார்.
கண்ணன் குகையிலிருந்து கிளம்பி மதுராவின் கோட்டை வாயிலை அடைந்தான். காலயவனனின் மிலேச்சப் படையை அழித்து, அவர்களது செல்வத்தைத் துவாரகைக்கு எடுத்துக்கொண்டு கிளம்பும் சமயம் ஜராசந்தன் இருபத்து மூன்று அக்ஷௌஹிணி படையுடன் யுத்தத்திற்கு வந்து சேர்ந்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment