முசுகுந்தரின் முன்னால் வந்து நின்றான் கண்ணன். நீருண்ட மேகம் போல் கருநீலத் திருமேனி. வரிவரியாய் அசையும் மஞ்சள் பட்டாடை, மார்பில் ஸ்ரீ வத்ஸம், ஒளிமிக்க கௌஸ்துபமணி, நான்கு திருக்கரங்கள், வண்டுகள் சூழ் வைஜயந்தி மாலை, நிலவைப்போல் ஒளிவீசும் திருமுகம், காதுகளில் அசையும் மகரகுண்டலங்கள், கண்ணாடி போன்ற கன்னங்களில் அவற்றின் ப்ரதிபலிப்பு, அனைத்துலகத்தோரும் காணத் துடிக்கும் பேரழகு. கொவ்வைப்பழ இதழில் குமிழ் சிரிப்பு, இளமை ததும்பும் வயது, கம்பீரமான நடை, நிமிர்ந்த தோற்றம். அள்ளிக்கொள்ளத் தூண்டும்
அழகுருவைக் கண்ணெதிரே கண்டதும் முசுகுந்தர் திகைத்தார்.
தாங்கள் யார்? பயங்கரமான இந்தக் காட்டின் நடுவில் இருக்கும் மலைக் குகைக்குள் எப்படி வந்தீர்கள்? தங்கள் மென்மையான திருவடி நோகவில்லையா?
நீங்கள் சூரியனா? சந்திரனா? அக்னியா? தேவேந்திரனா? உங்கள் திருமேனி ஒளியால் இருண்ட இக்குகை பிரகாசமாகத் திகழ்கிறது. தங்களைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன். விருப்பமிருந்தால் கூறுங்கள். என்றார்.
பின்னர், ப்ரபோ! நான் இக்ஷ்வாகு வம்சத்தவரான மாந்தாதா மஹாராஜனின் மகன். என் பெயர் முசுகுந்தன் என்பது. வெகுநாள்கள் தொடர்ந்து விழித்திருந்த அயற்சியால் இங்கு வந்து உறங்கினேன். எவ்வளவு காலமாயிற்றென்று தெரியவில்லை. என்னை எழுப்பிய அவன் பஸ்மமாகிவிட்டான். உங்களை இப்போதுதான் பார்க்கிறேன். இவ்வளவு காலமாக இருட்டிலேயே இருந்ததால் தங்களது பேரொளி கண்ணைக் கூசுகிறது. தங்கள் திருமுகத்தைக் கூட சரியாகப் பார்க்க இயலவில்லை. என்றார்.
கலகலவென்று சிரித்த கண்ணன் இடிமுழக்கம் போன்ற குரலில் பேசினான்.
அன்பரே! எனது பிறப்பும், தொழிலும் எண்ணற்றவை. பல பிறவிகள் எடுத்தாவது பூமியிலுள்ள மணல்துகளை எண்ணலாம். எனது பெயர்களையும் பிறப்பையும் யாராலும் கணக்கிட இயலாது.
இருந்தபோதிலும் இப்பிறவியைப் பற்றி மட்டும் கூறுகிறேன்.
முன்பொரு சமயம் பூபாரம் தீர்க்கவேண்டி ப்ரும்மா என்னிடம் வேண்டினார். அதனால் நான் வசுதேவர் மற்றும் அவரது மனைவி தேவகிக்கு மகனாகப் பிறந்தேன். என்னை வாசுதேவன் என்றும் கண்ணன் என்றும் அழைப்பர்.
தீய எண்ணம் கொண்ட அசுரனான காலநேமியின் அவதாரம் கம்சன். அவனை நான் கொன்றேன். மற்றும் அவனால் அனுப்பப்பட்ட எண்ணற்ற அசுரர்களுக்கும் முக்தியளித்தேன். இப்போது காலயவனன் என்ற அசுரனும் தம்மால் கொல்லப்பட்டான்.
உமக்கு அருள் செய்யவே இங்கு வந்தேன். நீங்கள் முன்பொரு காலத்தில் என்னைப் பலமுறை பூஜை செய்திருக்கிறீர். அவற்றின் பயனாக உங்கள் முன் தோன்றினேன். என்ன வரம் வேண்டும்? கேளுங்கள் என்றான்.
கண்ணன் பேசுவதைக் கேட்டு வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணனே என்றுணர்ந்தார்.
வாழ்வில் ஒருமுறையேனும் மனப்பூர்வமாக கண்ணனைப் பூஜை செய்திருந்தாலும் போதும். அதற்கான பலனைக் கண்ணன் கொடுத்துவிடுகிறான். பக்தர்கள் விஷயத்தில் கடனாளியாக இருக்க அவன் விரும்புவதில்லை.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment