மறுநாள் காலை கண்ணனும் பலராமனும் நந்தனிடம் சென்றனர். தனுர்யாகத்தைக் காண மதுரா செல்வோம். என்று கூறினர். கண்ணனின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசியறியாத நந்தன் கம்சனின் கட்டளையைப் பற்றி ஒன்றும் பேசாமல் மதுரா கிளம்ப ஏற்பாடுகளைக் கவனிக்கத் துவங்கினார்.
கோபர்களை அழைத்து, பால், தயிர், வெண்ணெய் மற்றும் பரிசுப் பொருள்களை எடுத்துக்கொள்ளுங்கள். வண்டிகளைப் பூட்டுங்கள். நாளை காலை மதுராவிற்குச் செல்வோம். பரிசுகளை அரசனுக்கு அளிப்போம். தனுர்யாகம் நிகழப்போகிறது. அதைக் காணச் செல்வோம். என்று கூறினார்.
மேலும், தனுர்யாகம் காண்பதற்கு தன்னோடு மற்ற கோபர்களும் வரலாம் என்று அறிவிக்கச் சொல்லி காவல் அதிகாரி மூலம் ஊரில் தெரிவிக்கச் சொன்னார்.
இதற்கிடையில் யசோதைக்கு கண்ணனும் பலராமனும் போகப்போகிறார்கள் என்று தெரிந்துவிட்டது. வழக்கமாக நீங்கள் மட்டும்தானே அரசனைக் காணச் செல்வீர்கள்? இதென்ன புதுப் பழக்கம்? இப்போது ஏன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு போகிறீர்கள்? அக்ரூரர் ஏதாவது ரகசியச் செய்தி கொண்டுவந்திருக்கிறாரா? ஆண்களை மட்டும் அழைத்துச் செல்வானேன்?
துளைத்தெடுத்துவிட்டாள் நந்தனை.
குழந்தைகளை அழைத்துவரச் சொல்லி கம்சனின் ஆணை என்றதும் பயந்துபோனாள்.
எதற்காம்? ஏற்கனவே அவர்களுக்கு ஆபத்துக்கு மேல் ஆபத்தாக வந்துகொண்டிருக்கிறது. கம்சன் குழந்தைகளையெல்லாம் கொல்வான் என்று பேசிக்கொள்கிறார்கள். நம் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போவதாமே. உங்களுக்கு மூளை பிசகிவிட்டதா?
அவளது நிதானம் தவறியது.
நந்தன் கண்ணனைப் பார்க்க, கண்ணன் யசோதாவை சமாதானப் படுத்த ஆரம்பித்தான்.
அம்மா, தனுர்யாகம் ரொம்ப நல்லா இருக்கும்மா. சின்ன வயசிலேர்ந்து இந்தக் காட்டை விட்டு எங்கயும் போனதேல்ல மா. மதுரா நகரம் ரொம்ப அழகா இருக்குமாமே. ஒரே ஒருதரம் போய்ட்டு வரேம்மா. என்று கெஞ்சினான்.
அவனது முகத்தைப் பார்த்து விருப்பமே இல்லாமல் அரை மனதாக ஒப்புக்கொண்டாள் யசோதை.
இதற்குள் ஊர் முழுவதும் செய்தி பரவிவிட்டது. நிறைய கோபர்கள் மதுரா செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
அக்ரூரரின் ரதத்தைப் பார்த்து கண்ணன் அவருடன் போகப் போகிறான் என்ற செய்தி தீயைப் போல் பரவியது.
அத்தனை கோபிகளும் துக்கத்தில் ஆழ்ந்தனர். இதுநாள் வரை கண்ணன் ஒருநாள் கூட வெளியூர் சென்றதில்லை. இப்போது நகரத்திற்குப் போகப்போகிறானாமே.
அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இத்தனைக்கும் நிரந்தரமாகப் போகப்போகிறான் என்று தெரியாது. சில நாள்களுக்குப் போகிறான் என்பதாகவே நினைத்தனர். இருப்பினும் அந்தப் பிரிவைத் தாள இயலாமல் துடித்தனர்.
உள்ளம் வாடியதால், உணர்வற்றுப் போனார்கள். புற உலகும் தெரியவில்லை.
சிறிதும் இரக்கமில்லாமல் இந்த ப்ரும்மா இப்படிப் பண்ணுகிறாரே. குழந்தைகள் பொம்மைகளைச் சேர்த்தும் பிரித்தும் வைத்து விளையாடுவதுபோல் எங்களைக் கண்ணனுடன் சேர்த்தும் பிரித்தும் வைத்து விளையாடுகிறார்.
சுருண்ட கூந்தல், அழகிய கன்னங்கள், உயர்ந்த நாசி, மனத்தை ஊடுருவும் சிரிப்பு ஆகியவற்றைக் காட்டுவதுபோல் காட்டிவிட்டு உடனே அதை மறைக்கிறார்.
ப்ரும்மாவின் படைப்பின் திறமையை கண்ணனின் அவயவங்களில் கண்டோம். ஆனால் அக்ரூரன் என்று பெயர் வைத்துக்கொண்டு க்ரூரமாக எங்களிடமிருந்து கண்ணனைப் பிரிக்க ஏற்பாடுசெய்துவிட்டார்.
புதிதாக எதையாவது பார்த்தால் கண்ணன் பழையதை மறந்துவிடுவானே. நம் வீடு வாசல், உற்றார் உறவினர் அனைவரையும் விட்டு கண்ணனுக்கு சேவை செய்தாலும் புதிய ஆள்கள் வந்தால் அவர்கள் பின்னால் போவான். மதுரா நகரப் பெண்களுக்கு இனிமேல் இனிய பொழுதாக விடியும். கண்ணனின் தாமரை முகத்தை வண்டுகளைப்போல் பருகுவார்கள்.
கண்ணன் நல்லவன்தான். ஆனாலும் மதுராவின் அழகிய பெண்களைப் பார்த்த பின் நமது நினைவு அவனுக்கு வருமா?
இந்த அக்ரூரரைப் போல் கொடியவர் வேறெவருமில்லை.
அந்தோ! நந்த பவனத்தில் யசோதைகூடத் தடுக்கவில்லையே. நம்மிடம் போய் வருகிறேன் என்றுகூடச் சொல்லாமல் கிளம்புகிறானே.
அவனை விட்டு எப்படி இருப்போம்? நமக்கே இப்படி இருக்கிறதே. வயதானவர்கள் கண்ணனின் பிரிவை எப்படித் தாங்குவார்கள்?
கண்ணனுடனான இவ்வளவு நாள்களும் நொடிபோல் கழிந்தது. அவனில்லாத நாள்கள் யுகங்களைப்போல் நகராமல் நிற்குமே.
அழுதுகொண்டே கோபிகள் நந்தபவனத்தின் வாசலுக்கு வந்துவிட்டனர்.
வெட்கத்தை விட்டு கோவிந்தா! மாதவா! என்று கதறினார்கள்.
அதற்குள் அக்ரூரர் காலைக்கடன்களை முடித்து விட்டுக் கிளம்ப ஆயத்தமானார்.
குழந்தைகளை ரதத்திலேற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்டார்.
அழுதுபுரண்டுகொண்டிருக்கும் கோபியரைப் பார்த்துத் திகைத்தார். கண்ணன் அவர்களைப் பார்க்க, கோபிகள் அழுகையைச் சற்று நிறுத்திவிட்டு மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
வெகு சீக்கிரம் வந்துவிடுவேன் என்று அன்பொழுகக் கூறி, அனைவரின் கண்களையும் துடைத்துவிட்டான்.
அக்ரூரரிடம் கையைக் காட்ட, ரதம் கிளம்பிற்று.
வைத்த கண் வாங்காமல் தேரின் கொடி தெரியும் வரை, புழுதி மறையும் வரை சிலைபோல் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர் யசோதையும் மற்ற கோபிகளும். நந்தனும் மற்ற கோபர்களும் வண்டிகளில் ஏறிக்கொண்டு பின்தொடர்ந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment