கோபியரின் அழுகையைக் காணவொட்டாத கண்ணன், அக்ரூரரிடம் ரதத்தை வேகமாகச் செலுத்தும்படி கூறினான்.
காற்றாய்ச் செலுத்திய ரதத்தை காளிய மடுவின் அருகில் வந்ததும் நிறுத்தினார் அக்ரூரர்.
கண்ணா! மதிய வேளை வந்துவிட்டது. நான் யமுனையில் நீராடலாமா? நான் அப்படியே மாத்யாஹ்னிகம் முடித்து வரட்டுமா? என்றார்.
கண்ணனும் பலராமனும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.
சித்தப்பா நாங்கள் ரதத்திலேயே இருக்கிறோம். நீங்கள் போய் நீராடிவிட்டு அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வாருங்கள் என்றான் கண்ணன்.
சரி கண்ணா என்று சொல்லி நீரில் இறங்கினார் அக்ரூரர். நன்றாக நீரில் மூழ்கி, ஜபம் செய்தார். அப்போது நீருக்கடியில் பலராமனையும் கண்ணனையும் கண்டார்.
இருவரும் ரதத்தில் இருக்கிறேன் என்று சொன்னார்களே. எனக்கு முன்னால் இறங்கிவிட்டார்களா.. குழந்தைகள்தானே. தண்ணீரைப் பார்த்ததும் ஆசை வந்திருக்கும் என்று நினைத்தார். எதற்கும் மேலே ரதத்தில் பார்க்கலாம். என்று நீரை விட்டு தலையைத் தூக்கினார்.
ரதத்தில் கண்ணனும் பலராமனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
இவர் அவர்களைப் பார்ப்பது கண்டு,
என்ன சித்தப்பா, அனுஷ்டானமெல்லாம் முடிஞ்சதா? என்றான் பலராமன்.
நீரில் கிடைத்த காட்சி ப்ரமையா? என்று திகைத்துப்போய், மீண்டும் நீரில் மூழ்கினார்.
இப்போது நீருக்கடியில் சித்த சாரண கந்தர்வர்கள் தலைவணங்க, ஆயிரம் தலைகள் கொண்டு நீலப்பட்டாடை உடுத்தி, வெண்ணிற மேனியுடனும், ஆயிரம் படங்களுடனும் விளங்கும் ஆதிசேஷனைக் கண்டார்.
அவரது மடியில் நீலவண்ணனாக, மஞ்சள் பட்டாடையுடன், நான்கு திருக்கரங்களும், தாமரை போன்ற கண்களும் கொண்ட ஒரு சுந்தர புருஷனைக் கண்டார்.
கருணை பொங்கும் பார்வை அவரை என்னவோ செய்தது.அழகிய திருமுகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்றெண்ணியவருக்குச் சட்டென்று நினைவு வந்தது. ஆஹா.. கண்ணனின் முகம்.
பருத்த நீண்ட கைகள், பரந்த தோள்கள், விரிந்த திருமார்பு, மூன்று மடிப்புகளுள்ள திருவயிறு, அழகிய திருவுரு.
ரத்தினங்கள் பதித்த கிரீடம், தோள்வளைகள், முத்துஹாரங்கள், பொற்சிலம்புகள், காதுகளில் குண்டலங்கள், நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்ரம், கதை, பத்மம், மார்பில் ஸ்ரீ வத்ஸம், கௌஸ்துப மணி, கழுத்தில் வனமாலை.
ஸுநந்தன், நந்தன் முதலான சேவகர்கள், ஸனகாதி முனிவர்கள், ப்ரும்மா முதலிய தேவர்கள், பிரஜாபதிகள், பிரகலாதன், நாரதர், வசுக்கள், அனைவரும் சூழ்ந்து துதிக்கின்றனர்.
பன்னிரண்டு சக்திகளுக்குண்டான அதிதேவதைகள் சேவை செய்துகொண்டிருக்கிறார்கள்.
அனைத்தையும் கண்ட அக்ரூரர் தன்னிலை மறந்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment