Wednesday, October 10, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 119 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 63

துருவனைக் காண பகவான் ஆவல் கொண்டார். உடனே கருடன் மேலேறிப் புறப்பட்டார்.

கிளம்பும்போது நாரதர் துருவனிடம் தன்னை எப்படி வர்ணித்தாரோ அதே போல் தாம் இருக்கிறோமா என்று சரி பார்த்துக் கொண்டார். ஐந்து வயதுக் குழந்தையல்லவா? குரு எப்படிச் சொன்னாரோ அப்படியே தியானம் செய்கிறான். கோலத்தைச் சற்றே மாற்றினாலும், குழந்தைக்கு குரு சொன்னவர் இவர் இல்லையோ என்று சந்தேகம் வந்துவிடுமாம்.

மதுவனத்தை அடைந்து துருவனின் முன்பு போய் நின்றார்.
பகவானே எதிரில் வந்தபோதும் குழந்தை கண்களைத் திறக்கவில்லை.
காரணத்தை ஆராய்ந்தபோது, அவன் அந்தர்யாமியாக ஹ்ருதயத்தில் கண்சிமிட்டிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் தெரியும் பகவத் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார்.

உடனே ஹ்ருதயத்தில் தெரியும் ஸ்வரூபத்தை மறைக்க, சட்டென்று தன் தியான மூர்த்தி மறைந்ததுகண்டு திகைத்துப் பொய் விழிகளைத் திறந்தான் துருவன்.

ஹ்ருதயத்தினுள் தெரிந்த உருவம் குதித்து வெளியே வந்தாற்போல் இருந்தது. அந்த ஸ்வரூபத்தை திடீரென எதிரில் கண்டதும்‌ குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. வெகுநாள்களாக ஒரே நிலையில் இருந்ததால் சட்டென்று அவனது உடல் ஒத்துழைக்கவில்லை. இருப்பினும் தடுமாறிக்கொண்டு எழுந்து கோலைப்போல் பகவானின் திருவடிகளில்‌ விழுந்தான்.

பின்னர் கண்களால் அமுதுபோன்ற திருமேனியைக் குடித்துவிடுபவன் போலும், முத்தமழை பொழிபவன் போலும் அன்பு பொங்க பொங்கப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவன் தன்னைத் துதிக்க விரும்புவதையும், ஒன்றும் சொல்லத் தெரியாமல் திருதிருவென்று விழிப்பதையும் உணர்ந்த பகவான் வேதமே உருவான பாஞ்ச ஜன்யம் என்ற வெண் சங்கத்தினால் அவன் கன்னத்தைத் தொட்டார்.

அந்த நொடியிலேயே துருவனுக்கு தெய்வீகமான பேசும் திறன் ஏற்பட்டது.
பகவான் அவசரம்‌ அவசரமாக ஒரு குழந்தைக்கு அனுக்ரஹம்‌ செய்யக்‌ கிளம்பியதைப் பார்த்ததும், ஜகன் மாதாவான ஸ்ரீதேவிக்கு பொறுக்குமா?

ஐந்து மாதங்களாக ஒரு வேளை உணவுகூட இன்றி பட்டினி கிடக்கும் குழந்தையைப் பார்க்க வெறும் கையோடு கிளம்புகிறாரே என்று தவித்தாள்.

வெண்சங்கத்தை எடுத்து பாற்கடலிலிருந்து ஒரு சங்கு பாலை மொண்டு வைத்துவிட்டாள்.

சங்கத்தினால் பகவான் கன்னத்தைத் தொட்டதும், அவன் வாயில் அன்னை கொடுத்தனுப்பிய ஞானப்பால் வழிந்ததோ..

அப்படி ஒரு ஸ்துதி செய்திருக்கிறான் குழந்தை.

மேலும், பகவான் சங்கினால் துருவன் கன்னத்தைத் தடவியபோது, ஸுருசி கிள்ளிய கன்னத்தைத் தடவி சமாதானப் படுத்துவது போல் இருந்ததாம் குழந்தைக்கு.

அக்கணமே துருவனுக்கு ஞானம் சித்தித்தது. பகவானை இரு கரம் கூப்பி ஸ்துதி செய்யத் துவங்கினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment