Tuesday, October 9, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 118 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 62

நான்கு மாதங்களாக கடுந்தவம் இயற்றி வந்த துருவன், ஐந்தாம் மாதம் மூச்சையடக்கி, முற்றிலுமாக மனத்தை உள்முகமாய்த் திருப்பி, பகவானின் திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானம் செய்தான்.

மஹத் முதலிய தத்வங்களுக்கு ஆதாரமான மற்றும் ப்ரக்ருதி, புருஷன், இவைகளுக்குத் தலைவனுமான ப்ரும்ம ஸ்வரூபத்தை இவ்வாறு துருவன் தியானம் செய்தான். அப்போது அவனது தவத்தின் கடுமை தாங்காமல் மூவுலகங்களும்‌ நடுங்கின.

ராஜகுமாரனான துருவன் ஒற்றைக்காலில் நின்றுகொண்டு தவம்‌செய்தபோது, அவனுடைய கால் கட்டைவிரலால் அழுந்தப்பட்ட பூமி ஒரு பக்கமாகச் சாய்ந்தது. ஒரு பெரிய யானையைப் படகில் ஏற்றிச் சென்றால் படகு இடப்புறமும் வலப்புறமும் மாறிமாறிச் சாய்வதுபோலிருந்தது அது.

துருவனது ப்ராணன் வெளியிலுள்ள அனைத்து ப்ராணன்களிலும் வேறுபாடின்றி ஒன்றியதும், அவன் மூச்சை நிறுத்தியதால், அனைத்து உயிர்களுக்கும் ப்ராண வாயு இன்றி, மூச்சு தடைபட்டது.

ஆகவே, தேவர்கள் அனைவரும் பகவானை சரணடைந்தனர்.

பகவானே அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ப்ரபோ! எங்களைக் காக்கவேண்டும்.

பகவான் சொன்னார்.

தேவர்களே! பயம் வேண்டாம். உத்தானபாதனின் மகன் துருவன் மூச்சை நிறுத்தி, மனத்தை என்னிடமே ஒரு முகப்படுத்தித் தவம்‌ செய்கிறான்.

அதுசரி. நீங்கள் யாரேனும் தவம் செய்தால் அவர்களைச் சோதனை செய்து யாரேனும் தேவமாதர்களை வைத்தோ, அல்லது பல இயற்கை இடர்களை ஏற்படுத்தியோ கலைக்க முயற்சி செய்வீர்களே.

ஐந்து வயதுச் சிறுவன் ஐந்தே மாதங்களில் இவ்வளவு கடும் தவம் இயற்றியிருக்கிறானே. நீங்கள் அதைக் கலைக்க ஏதும் செய்யவில்லையா?

கேட்கும்போதே பகவானின் கண்களில் குறும்பும், பெருமிதமும் மிளிர்ந்தன.

தயங்கிக்கொண்டு தலையைக்‌குனிந்துகொண்டு பேசினான் தேவர் தலைவன்.

முயற்சி செய்தோம் இறைவா.. இடி, மின்னல், மழை, புயற்காற்று, தேவமாதர்கள், மற்ற அச்சுறுத்தும் மிருகங்களின் ஒலிகள் எதற்கும் அவனது தவம்‌ கலையவில்லை.

அதெப்படி அவனால் முடிந்தது?

தேவர் தலைவனே சொன்னான்.
தவம்‌செய்பவர்கள் நான் தவம்‌ இயற்றுகிறேன் என்ற எண்ணத்தோடேயே தவம்‌செய்வர்.

இவன் அப்படிச் செய்யவில்லையோ?
இல்லை ஸ்வாமி. இச்சிறுவன் தன் குருவான நாரதரின் வாக்குப்படி நான் செய்வேன். அவர் கருணையால் எனக்கு பகவத் தரிசனம் கிட்டும் என்ற நம்பிக்கையோடு செய்கிறான்.

அவனுக்குத் தான்தான் முயற்சி செய்கிறோம் என்ற எண்ணம் துளியும் இல்லை. அவனை நாரதரின் அருள் கவசம் போல் காக்கிறது. அதை உடைத்துக்கொண்டு எத்தளையும் அவனது அருகேகூடச் செல்வதில்லை. எனவே வெகு சீக்கிரம் தவம் கைக்கூடிவிட்டது.

தன் பக்தனின் பெருமையையும், நாரதரின் பெருமையையும் கேட்ட பகவானின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கலகலவென மாணிக்கப்பரல் சிதறியதுபோல் சிரித்தார்.

எனக்கே அவனைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நான் போய் அவனை தரிசனம் செய்து அவனது தவத்தைத் திருப்பி விடுகிறேன்.

நீங்கள் இருப்பிடம்‌ செல்லுங்கள்.
என்றார்.

குருவருள் ஒருவரைக் காக்குமானால் அவர்க்கு எப்போதும் யாரும் தீங்கிழைக்கவே இயலாது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment