கோகுலம் இருக்கும் திசையில் தீய சகுனங்கள் தென்படுகின்றன என்ற வசுதேவரின் சொற்களைக் கேட்டு நந்தன் மிகவும் கவலை கொண்டார்.
வசுதேவர் அனைத்து சாஸ்திரங்களும் கற்றவர். ஸத்யமே மூச்சாகக் கொண்டவர். அவரது வாக்கு பிறழ்வதே இல்லை. எனவே, ஏதேனும் ஆபத்து வந்திருக்குமோ என்று அஞ்சினார்.
அவரது உள்ளத்தின் வேகத்திற்கு மாட்டு வண்டியால் ஈடு கொடுக்க முடியவில்லை. மனத்தினால் பகவானைச் சரணடைந்து பிரார்த்தனை செய்யத் துவங்கினார்.
நந்தன் மதுராவிற்குக் கிளம்பியதும் கோகுலத்தில் என்ன நடந்தது?
பிறந்து பத்து நாள்களும் அதற்கு மேலும் ஆன குழந்தைகளைக் கொல்லும்படி கம்சன் உத்தரவிட்டிருந்தான் என்று பார்த்தோம். அவனது உத்தரவைச் சிரமேற்கொண்டு செயலாற்றக் கிளம்பினாள் ஒருத்தி.
பூதனை என்பது அவள் பெயர். சின்னஞ்சிறு குழந்தைகளைக் கொல்வதே அவளது வேலை.
இவ்விடத்தில் ஸ்ரீ சுகர் அழகாக நாம மகிமையை எடுத்துச் சொல்கிறார்.
அரக்கர்கள் எங்கிருப்பார்கள் என்றால், அவர்களை அழிக்கும் ஹரியின் நாமம் ஒலிக்காத இடத்தில் என்கிறார்.
இறை நாமம் ஒலிக்காத வீட்டுக் குழந்தைகளையெல்லாம் பூதனை சுலபமாகக் கொன்று கொண்டே வந்தாளாம். கிராமம் கிராமமாகச் சுற்றியவள், நந்தகோகுலத்திற்கும் வந்துவிட்டாள்.
ஊருக்குள் வரும்போதே அவ்வூரின் குழந்தைகளைப் பற்றி விசாரித்துக் கொண்டாள்.
கோகுலத்தின் அரசன் வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றறிந்ததால், அதற்கேற்ப தன்னை அலங்கரித்துக் கொண்டாள். விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் அணிந்து, மல்லிகைப்பூக்களைச் சூடி, சுருண்ட முன்னெற்றி முடி தவழ, தன்னை ஒரு தேவ மகளைப்போல் உருமாற்றிக்கொண்டு, கைவளை குலுங்க, சலங்கைகள் இசைக்க, அசைந்து அசைந்து கோகுலத்தின் தெருக்களில் நடந்தாள்.
அவளைக் கண்ட கோபியர், வானுலகிலிருந்து தன் நாயகனைக் காணத் திருமகளே வந்தனளோ என்று அதிசயித்தனர்.
நந்தபவனத்தின் வாயிலில் அவள் தயங்கி நின்றதைக் கண்ட காவலர்கள், ஏதோ பெரிய இடத்துப் பெண் என்றெண்ணி அவளை உள்ளே செல்லும்படி அனுமதித்தனர்.
கோபியர் அவளை தேவமகளென்று முடிவே செய்துவிட்டனர். எனவே தங்கள் இளவரசனை வாழ்த்திச் செல்லும்படி அவர்களே அழைத்தனர்.
நந்த பவனத்தின் செல்வச் செழிப்பு நிறைந்த அரண்மனையின் உள்ளே சென்றாள் பூதனா. உள்ளே வரவேற்பறையில் நடுநாயகமாக ஒரு அழகிய தொட்டிலில் குட்டி இறைவன் இமை மூடி அறிதுயில் கொண்டிருந்தான்.
யசோதை அப்போது உள்ளே சென்றிருந்தாள்.
நீறு பூத்த நெருப்பைப்போல் மகிமையை மறைத்து அழகை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டு உறங்கும் குழந்தையை அள்ளி எடுத்தாள் அரக்கி.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment