Wednesday, November 13, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 349

எட்டு மாதத்தில் பிறந்தபோதும், பிறந்தவுடனேயே நான்கு மாதக் குழந்தைபோல் இருந்தான் ஸ்வாமி.

காதுவரை நீண்ட விழிகள் பரபரவென்று இங்குமங்கும் அலைவது, தாமரைக்குள் வண்டு சுற்றுவதுபோலிருந்தது.

தலைமுழுவதும் சுருள் சுருளான அடர்த்தியான கேசம். உருண்டு திரண்டு நீருண்ட மேகம்போல் கறுத்த திருமேனி.

குண்டுக் கன்னங்கள், வில் போன்று வளைந்த புருவங்கள், எள்ளுப்பூ போன்ற சிறிய மூக்கு, கொவ்வைப் பழம்போன்ற அதரங்கள், தாமரை போன்ற முகம், தாமரை போன்ற கரங்கள், தாமரை போன்ற பாதம், தாமரை விளைந்த திருவயிறு, மொத்தத்தில் தாமரை பூத்த காடு என்று வர்ணிக்கிறார் ஆழ்வார்.

கோபிகள் அனைவரும் தங்க நிறத்தில் மின்னுபவர்கள். ஒவ்வொருத்தியும் இன்று நன்றாக அலங்கரித்துக்கொண்டு வந்திருந்தாள். நான் தூக்கறேன், என் கிட்ட குடு, என்று குழந்தையை மாற்றி மாற்றித் தூக்க, அவர்களின் தாமரை போன்ற கரங்களில் இந்தக் கருவண்டு சுற்றி சுற்றி வந்தது.

யசோதைக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆளே தேவைப்படவில்லை. காரணம் ஒரு கோபியும் வீட்டுக்குப் போனாளில்லை. போனாலும் எதையாவது சாக்கு சொல்லிக்கொண்டு திரும்பி வந்து விடுவார்கள்.

எந்நேரமும் ஸ்வாமியைச் சுற்றி கோபியர் கூட்டம். அனைவரும் அவனது நாமாவளிகளை மாற்றி மாற்றிப் பாடுவதும், ஸ்வாமியின் புகழைப் பேசுவதும், அழகை ரசிப்பதுமாகப் பொழுது ஓடிக் கொண்டிருந்தது.

பகவான் வாசம் செய்வதால், நந்த கோகுலம், செல்வங்கள் அனைத்தும் பெருக திருமகள் வாசம் செய்யும் இடமாயிற்று.

இதன் நடுவில் நந்தகோபர் கம்சனுக்குக் கப்பம் கட்டுவதற்காக மதுராவிற்குச் சென்றார்.

தன் உயிர் நண்பனான நந்தன் வந்திருப்பதை அறிந்தார் வசுதேவர். அவரைக் காண தங்குமிடம் சென்றார்.

தன்னைத் தேடி வந்த வசுதேவரைக் கண்டதும், நந்தன் அன்பும், மகிழ்ச்சியும் போங்க நெகிழ்ந்துபோய், ஓடிவந்து கட்டிக்கொண்டார்.

வசுதேவரின் உள்ளம் அவரது புதல்வர்களைப் பற்றி அறியத் துடியாய்த் துடித்தது.

ஒருவாறு பேச்சைத் துவங்கினார். இவ்வளவு வயதான காலத்தில், இனி குழந்தை பிறக்காது என்றே நீங்கள் அவநம்பிக்கை கொண்ட நேரத்தில் உங்களுக்குக் குழந்தை பிறந்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. இது தெய்வச் செயலே ஆகும்.

இந்த சம்சாரத்தின் பிறவிச் சுழலில் மறுஜென்மம் கண்டதுபோல் உங்களை எப்படியோ கண்டுவிட்டேன்.

நீங்கள் வசிக்கும் இடம் பாதுகாப்பானதா? பசுக்களுக்கு ஏற்றதாய் இருக்கிறதா?
என் மனைவி ரோஹிணியைத் தங்கள் மகளைப்போல் சீராட்டுகிறீர்கள் என்றறிந்தேன். என் மகன் எப்படி இருக்கிறான்?

படபடப்பினால் பல கேள்விகளை அடுக்கினார் வசுதேவர். அவருக்கு நம் ஸ்வாமியைப் பற்றி அறிந்துகொள்ள நெஞ்சம் துடித்தது. இருந்தும் நேரிடையாகக் கேட்க முடியாமல் தவித்தார்.

நந்தன் சிரித்துக்கொண்டே பதிலுரைக்கத் துவங்கினார்.

அனைவரும் நலமாய் இருக்கின்றனர். உங்கள் மகன் ஆரோக்யமாக துறுதுறுவென்று விளையாடுகிறான். அவனுக்கு விளையாடக் கிடைத்தாற்போல் என் மகன் வந்துவிட்டான். இரு குழந்தைகளும் நன்றாக இருக்கின்றன.

உங்கள் துக்கங்களை மறந்து நீங்கள் என்னைக் காண வந்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்தனை குழந்தைகளையும் இழந்தபின், கடைசியாகப் பிறந்த பெண் குழந்தையும் வானுலகம் சென்றுவிட்டதென்று கேள்வியுற்று மிகவும் வருந்தினேன். இன்ப துன்பங்களுக்கு விதியே காரணம். உங்களைப் போன்ற விவேகம் நிறைந்தவர்கள் எதற்கும் கலங்குவதில்லை. என்றார்.

வசுதேவருக்கு வேண்டிய செய்தி கிடைத்துவிட்டது. நந்தனிடம், உங்கள் வேலைகள் முடிந்துவிட்டன அல்லவா? இனி, இங்கு ஒரு கணம்கூட தாமதிக்காமல் புறப்படுங்கள். கோகுலம் இருக்கும் திசையில் தீய சகுனங்கள் காணப்படுகின்றன. பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் சரியாக இருந்தாலும், நீங்கள் அங்கு உடனே செல்லுங்கள். என் மனம் எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. என்றார்.

நந்தன், வசுதேவரை வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு, உடனே வண்டிகளைக் கட்டிக்கொண்டு கோகுலம் புறப்பட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment