Saturday, September 21, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 333

கம்சன்தான் முட்டாளாயிற்றே. நாரதர் சொன்னதைக்‌கேட்டபோதும் அப்போதைக்கு அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
அவர் புறப்பட்டுச் சென்றதும் அதே அரசவையில் தனிமையில் வெகுநேரம் அமர்ந்திருந்தான்.

பயந்தவனுக்குத் தனிமையே எமன். மனத்தில் எழும் விதம் விதமான சந்தேகங்களை தனிமை பூதக் கண்ணாடி வைத்துப் பெரிய காட்சியாகக் காட்டும்.

விளையாட்டாக நாற்காலிகளை எண்ணத் துவங்கினான். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நாற்காலிகளிலிருந்து எண்ண எண்ண ஒவ்வொரு முறையும் எட்டாவது நாற்காலியும் வெவ்வேறாக வந்தது.

தேவர்கள் அனைவரும் பகவத் கைங்கர்யத்திற்காகப் பிறந்திருக்கிறார்கள் என்ற‌ நாரதரின் கூற்று நினைவுக்கு வர, தன்னைப் பற்றித்தான் சொன்னார் என்று உறைத்தது.

உடனே, காவலர்களை அழைத்து தேவகியையும் வசுதேவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டான். நேராக சிறைக்குச் சென்று, அந்தப் பச்சிளங்குழந்தையை தேவகியிடமிருந்து கதறக் கதற பிடுங்கினான்.

அங்கிருந்த பெரிய கல்லில் குழந்தையின் கால்களைப் பிடித்து தேங்காய் உடைப்பதுபோல் மடேரென்று அடித்தான்.
அன்று தேவகியின் அலறலில் பிரபஞ்சமே ஸ்தம்பித்துப் போனது.

இதையெல்லாம்‌ கேள்விப்பட்டு கம்சனின் தந்தையும் அரசருமான உக்ரசேனர் கம்சனைக் கண்டிக்கத் தலைப்பட்டார்.

கம்சனுடைய ஆதரவாளர்கள் அனைவரும் அசுரர்களே. அவர்களின் துணையுடன் தந்தையையும் சிறையிலிட்டான் கம்சன்.

தனக்குத்தானே பட்டாபிஷேகம் செய்துகொண்டு மதுராவின் அரசனாக அரியணை ஏறினான்.

ஏற்கனவே மந்திரி சபையில் இருந்த மதியூகிகள் அனைவரையும் நீக்கிவிட்டு, அசுரப் படையை மந்திரிகளாக நியமித்தான்.

ஒவ்வொருவரும் மக்களைத் துன்புறுத்துவதில் வல்லவர்.
வருடத்திற்கொன்றாக வசுதேவருக்கு மேலும் ஐந்து குழந்தைகள் பிறந்தன. அவர்களின் பெயர்களாவன, ஸுஷேணன், பத்ரஸேனன், ருஜு, ஸம்மர்தனன், பத்ரன் ஆகியன.

'மக்கள் அறுவரைக் கல்லிடை மோதி' என்று குறிப்பிடுகிறார் ஆழ்வார். ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடனேயே கம்சனுக்குத் தெரிவிக்கப்படும். உடனடியாக சிறைச்சாலைக்கு வந்து முதல் குழந்தையைக் கொன்றதுபோலவே, ஒவ்வொரு குழந்தையையும் கல்லில் அடித்துக் கொன்றான் அந்தக் கல்நெஞ்சக்காரன்.

பகவத் கைங்கர்யத்தில் சிறந்தவர் ஆதிசேஷன். இராமாவதாரத்தில் பகவானுக்கு இளவலாகப் பிறந்ததால் அவருக்கு பகவானுக்கு சேவை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள்‌ கிடைத்தன. வைகுண்டத்தில் இருந்தால் ஒரே ஒரு கைங்கர்யம்தான்.

பூமியில் பகவானின் அவதார காலத்தில் அவருடன் பிறந்தால், எத்தனை எத்தனை கைங்கர்யங்கள்?

ஏவல்‌ செய்யலாம், கால் பிடித்துவிடலாம், விசிறலாம், சமைத்துக் கொடுக்கலாம், பரிமாறலாம், அனுஷ்டானத்திற்கு உதவலாம், நிழல் போல் எங்கு சென்றாலும் அவரது அழகை ரசித்துக்கொண்டே உடன் செல்லலாம், அவர் பேசப் பேச குரலினிமையில் மயங்கலாம், இன்னும்‌ எவ்வளவோ.‌ ஆதிசேஷனோ லக்ஷ்மணனாகப் பிறந்து அத்தனையும் செய்து இப்போது நன்றாக ருசி கண்டுவிட்டார்.

எனவே பகவான் அவதாரம் செய்யப்போகிறார் என்றதும், பூமிக்கு ஓடிவந்து தேவகியின் கர்பத்தில் அமர்ந்து விட்டார். ஆனால், ஆர்வமிகுதியால், முந்தி வந்ததால், பகவானின் அண்ணனாக அமையும் பேறு பெற்றார்.

உலகைத் தாங்கும் ஸங்கர்ஷணனை வயிற்றில் தாங்கும் பேறு பெற்ற தேவகி இரண்டாவது சூரியன்போல் ஜொலித்தாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment