முதன் முதலில் பிறந்த பச்சிளங்குழந்தையை, அதன் முகத்தைக் கூடப் பாராமல், தூக்கிக்கொண்டுபோய்க் கம்சனிடம் கொடுக்கத் துணிந்தார் வசுதேவர்.
கம்சன் அவரை நன்கறிந்தவன் ஆனாலும், இச்செயலால் ஒரு கணம் அசந்து போய்விட்டான். மிகவும் மகிழ்ந்தான்.
அவனது மனம்கூட சற்றே இளகியது.
இந்தக் குழந்தையால் எனக்கு ஆபத்தில்லை வசுதேவரே. எட்டாவது குழந்தையால்தானே மரணம். நீங்கள் இதை எடுத்துச் செல்லலாம். என்று கூறினான்.
நல்லது என்று கூறிவிட்டு வசுதேவர் மீண்டும் பிள்ளையை எடுத்துக்கொண்டு திரும்பினார்.
புண்ணியச் செயலோ, பாவச் செயலோ ஒரேயடியாகச் சேர்ந்து கனிந்தால்தான் அது பலன் தரும் வேளை வரும். கம்சன் ஏற்கனவே பல பாவச் செயல்களைச் செய்தவன் ஆனாலும், பகவான் கையால் வதம் ஆகும் அளவிற்கு பாவங்கள் சேரவில்லை போலும்.
அவன் பாவச் செயல்களைச் செய்ய தாமதித்தால், பகவானின் அவதாரவேளையும் தள்ளிப்போகும்.
வெகு சீக்கிரமே பகவான் அவதரிக்க வேண்டும் என்று விரும்பிய நாரதர், கம்சனைச் சற்று தூண்டிவிட எண்ணினார்.
அப்போதுதான் பகவான் சீக்கிரமாக அவதாரம் செய்வார் என்பதால் அப்படிச் செய்தார்.
சாதுக்கள் உலக நன்மைக்காகவும், பகவானுக்காகவும் எத்தகைய செயலை வேண்டுமானாலும் செய்வர். தம்மைத் தாழ்த்திக்கொண்டு பிறரை உயர்த்துவதில் சாதுக்களுக்கும் பகவானுக்கும் ஓயாத போட்டி நிலவுகிறது.
அம்பரீஷனின் சரித்திரத்திலும், துர்வாசர் கோபப்பட்டு ஆபிசாரத்தை ஏவுகிறார். அம்பரீஷனின் பெருமையை வானளாவ உயர்த்துவதற்காக அப்படிச் செய்தார். அதை நன்கு உணர்த்தவே ஸ்ரீசுகர் அவரது வருகைக் காட்சியில் ஸாக்ஷாத் பகவான் துர்வாஸ: என்கிறார். அவர் ஞானி, பரமேஸ்வரனின் அம்சம். அவருக்குத் தெரியாதா என்ன? அம்பரீஷனைப் பற்றி? ஈரேழு பதின்னான்கு லோகங்களிலும் அம்பரீஷனின் புகழை நிலைக்கச் செய்யவே அத்தகைய காரியத்தைச் செய்தார். அது தகாத காரியம்போல் தெரிந்தாலும், உலகனைத்திற்கும் அம்பரீஷனின் பக்தி புலனாயிற்றே. ஸ்ரீ சுதர்சனத்தின் மஹிமையும் புலனாயிற்று.
இப்போது நாரதர் கம்சனின் அவைக்குச் சென்றார்.
அசுர சபையானாலும், தேவ சபையானாலும்
அவருக்கு மட்டும் வரவேற்பு உண்டு.
அசுர சபையானாலும், தேவ சபையானாலும்
அவருக்கு மட்டும் வரவேற்பு உண்டு.
ஹரி நாமம் சொன்னால் தண்டனை கொடுக்கும் ஹிரண்யகசிபுவின் சபையில்கூட நாராயண நாமத்தை வீணையில் மீட்டிக்கொண்டு நாரதர் செல்ல, அவன் அவரது இசையை ரசிக்கிறான் என்னும்போது கம்சன் எம்மாத்திரம்?
நாரதருக்கு முறையான வரவேற்பு கொடுத்து, ஆசனமளித்தான் கம்சன்.
என்ன கம்சா? கவலையாக இருக்கிறாய்?
மரண பயம்தான் ஸ்வாமி. உங்களுக்குத் தெரியாதா?
அசரீரி தேவகியின் எட்டாவது குழந்தையால் மரணம் என்று சொல்லிற்று.
முதல் குழந்தை பிறந்துவிட்டது போலிருக்கிறதே.
ஆம் மஹரிஷி. அதனால் எனக்கு ஆபத்தில்லையே. வசுதேவர் கொண்டு வந்தார்தான். ஆனால், நான் போகட்டும் என்று அனுப்பிவிட்டேன்.
ஓ.. அப்படியா..
தேவர்கள் எல்லாரும் பூமியில் பிறந்திருக்கிறார்கள் கம்சா. அதிருக்கட்டும்?
அதோ இங்கிருக்கும் நாற்காலிகளில் எது எட்டாவது நாற்காலி? சொல் பார்க்கலாம்.
இதென்ன கேள்வி ஸ்வாமி?
சும்மா சொல்லேன் பார்க்கலாம்.
இதுதான் மஹரிஷி. என்று கம்சன் ஒன்றைக் காட்ட,
இந்தப் பக்கத்திலிருந்து எண்ணினால்?
அதோ அது.. என்று இன்னொன்றைக் காட்டினான் கம்சன்.
தேவர்களின் கணக்கு விநோதமானது கம்சா. புத்தியுடன் பிழைத்துக்கொள்
என்று கூறிவிட்டு
நாராயண நாமத்தை கர்ஜித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் நாரதர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment