Tuesday, October 16, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 123 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 67

துருவன் யக்ஷர்களைக் கொன்று குவிப்பதுகண்டு, அவனது பாட்டனாரான ஸ்வாயம்புவ மனு அவ்விடம் வந்தார்.

குழந்தாய்! கட்டுக்கடங்காத இக்கோபத்தை விட்டுவிடு. கோபத்தால் மனிதன் பாவத்தைச் செய்து நரகம் அடைகிறான். நீ உன் கோபத்தினால் குற்றமற்ற யக்ஷர்களைக் கொன்று குவித்திருக்கிறாய் பார்.

குழந்தாய்! உனக்கு உன் சகோதரன் மீது மிகுந்த அன்புள்ளது நியாயம் தான். அவனது மரணத்திற்கு வருத்தமடைந்து யாரோ ஒரு யக்ஷன் செய்த குற்றத்திற்காக குற்றமற்ற மற்ற யக்ஷர்களைக் கொன்றுவிட்டாய் பார்.

ஜடமான இவ்வுடலையே ஆத்மா என்றெண்ணி ஒரு விலங்கு மற்ற விலங்குகளைத் துன்புறுத்திக்‌ கொல்வதுபோல் மற்ற ஜீவன்களைக்‌ கொல்வது பகவானையே சேவித்து வரும் சான்றோர்களுக்கு அழகல்ல.

பகவான் நாராயணனை ஆராதிப்பது எளிதான செயலன்று. நீயோ சின்னஞ்சிறு வயதிலேயே அவரை ஆர் ஆராதித்து துருவ பதத்தைப் பெற்றாய்.

இதன் காரணம் என்ன தெரியுமா?

சகல ஜீவன்களுக்கும் ஆதாரம்‌ பகவான். அவரே எல்லா ஜீவன்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற எண்ணத்துடன் நீ ஆராதித்ததுதான்.

உன்னைத் தன் உயர்ந்த அடியவனாக பகவான் ஏற்றுக்கொண்டுள்ளார். பகவானின் அடியார்களும் உன்னை அப்படியே கொண்டாடுகின்றனர். எல்லா ஸாதுக்களுக்கும் நீயே வழிகாட்டி. அப்படி இருக்க இச்செயல் உனக்குத் தகாது.

தன்னைவிட மூத்தோரிடம் விநயமாகவும், இளையவர்களிடம் பொறுமையாகவும், சமமானவர்களிடம் நட்பு மற்றும் அனைவரிடமும் அன்புடனும்‌ இருப்பவனிடமே பகவான் மகிழ்ச்சி கொள்கிறார்.

பகவானின் மாயை எனும் சக்தியால் படைத்த்ல் காத்தல் அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்கிறார். பகவான் அச்செயல்களுக்கு நிமித்த காரணமாகிறார். அவரைக் காரணமாகக் கொண்டே ப்ரபஞ்சம் இயங்குகிறது.

ஸத்வம், தமஸ், ரஜஸ் என்ற முக்குண மாறுபாட்டிற்கு ஏற்ப செயல்கள் நடைபெறுகின்றன.

பகவான் காலஸ்வரூபர். அழிவற்றவர். நீக்கமற நிறைந்தவர். அவர் இப்ப்ரபஞ்சத்தை முடித்து வைக்கிறார். அவரே அனைத்தையும் முதலில் படைப்பவர். அவர்தான் ஒரு ஜீவனிடமிருந்து மற்றொரு ஜீவனைப் படைக்கிறார். அவரே உலகை வ்ருத்தி செய்கிறார். இறக்கவேண்டியவர்களை மரணதேவனைக் கொண்டு இறக்கச் செய்வதும் அவரே.

காற்று வேகமாக வீசும்போது புழுதி பறப்பதுபோல் அனைத்து ஜீவன்களும் முன்வினைக்கேற்ப காலத்தினால் அடித்துச் செல்லப்படுகின்றன.

இன்னும் பலவாறு பகவானின் பெருமைகளை துருவனுக்கு எடுத்துச் சொன்னார் ஸ்வாயம்புவ மனு.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment