Monday, October 15, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 122 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 66

ராஜரிஷியான உத்தானபாதன் தன் புதல்வன் துருவனின் பெருமைகளை ஏற்கனவே நாரதர் சொல்லக் கேட்டிருக்கிறான். இப்போது அவனது பண்புகளை நேரில் கண்டு மிகவும் வியந்தான்.

துருவனுக்குத் தகுந்த வயது வந்ததும், சபையோரின் ஆலோசனையின் பேரில் பூமண்டலம் முழுவதிற்கும் அரசனாக பட்டாபிஷேகம்‌ செய்வித்து மகனை அழகு பார்த்தான்.

தனக்கு வயோதிகம் வந்துவிட்டதை உணர்ந்து நற்கதி அடையவேண்டித் தவம் செய்யக் காட்டுக்குக் கிளம்பினான் உத்தானபாதன்.

துருவன் சிம்சுமாரன் என்ற ப்ரஜாபதியின் மகளான ப்ரமியை மணந்துகொண்டான். அவளுக்கு கல்பன், வத்ஸன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

பின்னர் வாயுவின் புதல்வியான இளை என்பவளை மணந்தான். அவளுக்கு உத்கலன் என்ற மகனும், மிக அழகான ஒரு மகளும் பிறந்தனர்.

உத்தமன் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு நாள் மலைப்பகுதியில் வேட்டையாடுகையில் ஒரு வலிமை மிக்க யக்ஷனால் கொல்லப்பட்டான். அவன் தாய் ஸுருசியும் மரணமடைந்தாள்.

தம்பியின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த துருவன் அவன் கொல்லப்பட்டதை அறிந்து துடித்துப்போனான்.

மிகுந்த துயருடனும், கோபத்துடனும், உயர்ந்த தேரில் ஏறிக்கொண்டு யக்ஷர்களின் உலகமான அளகாபுரிக்குச் சென்றான். சிவ பார்ஷர்கள் சூழ்ந்த இமயமலையின் வடக்கே அளகாபுரி இருந்தது.

அளகாபுரியின் வாசலில் நின்றுகொண்டு எண்டிசைகளும்‌ நடுங்கும்படி‌ சங்கநாதம்‌ செய்தான். அதைக்கேட்டு யக்ஷமகளிர் மிகவும்‌அஞ்சினர்.

யக்ஷர்கள் ஆயுதங்களோடு சண்டைக்கு வந்தனர்.
எதிர்ப்பட்ட ஒவ்வொரு யக்ஷனையும் மும்மூன்று பாணங்களால் அடித்தான் துருவன். யக்ஷர்களுக்கு அடிபட்டபோதிலும், தனி ஒருவனாக வந்து சண்டையிடும் துருவனின் திறமையையும் வலிமையையும் கண்டு வியந்து பாராட்டினர்.

ஆனாலும் சீற்றத்துடன் ஆக்ரோஷமாகப்‌போர் செய்தனர்.

ஒரு லட்சத்து முப்பதாயிரம் யக்ஷர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் துருவன் மீது ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தினர்.

பெருத்த மழையில் மறைந்த மலைபோல் துருவன் அம்பு மழையால் மறைக்கப்பட்டான். அப்போது விண்ணிலிருந்து தேவர்கள் ஹா ஹா என்று திகைத்தனர்.

துருவன் மறைந்தான் என்றெண்ணி யக்ஷர்கள் மகிழ்ந்து கூச்சலிடும்‌ நேரம் பனி மூட்டத்திலிருந்து சூரியன் வருவதுபோல் வெளிவந்தான் துருவன்.

தன் வில்லில் நாணொலி எழுப்பினான். அந்த ஒலி பகைவரைக் குலை நடுங்கச் செய்தது. அடுத்து துருவன் எய்த அம்புமழை யக்ஷர்கள் மார்புகளில்‌ பாய்ந்தன.

பல்லாயிரக் கணக்கான யக்ஷர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களது உடல் துண்டுகளால் போர்க்களம் நிறைந்து காணப்பட்டது.

இறந்தவர் போக
மீதமுள்ள யக்ஷர்கள்‌ சிங்கத்திடம் சிக்கிய யானைகளாய்ச் சிதறுண்டு ஓடினர்.

தன்னை எதிர்ப்பவர் எவருமில்லை என்றறிந்ததும் அளகாபுரிக்குள் நுழையலாம் என்று நினைத்த துருவன் யக்ஷர்கள் மாய யுத்தம் செய்வார்கள் என்று சந்தேகம்‌ கொண்டு சற்று தாமதித்தான்.

அவன் நினைத்தது போலவே சற்று நேரத்தில் வானிலிருந்து எலும்புகளும், குருதியும், மலமும் சீழுமாகப் பொழியத் துவங்கியது. விண்ணிலிருந்து கல்மழையும் பல ஆயுதங்களும் விழுந்தன.

அந்தரத்தில் ஒரு பெரிய மலை தோன்றியது. பயங்கரமாக சத்தமிட்டுக்கொண்டு யானைகளும் புலிகளும் சிங்கங்களும் பாய்ந்தோடி வந்தன. ஊழிக்காலம் வந்ததோ என்றெண்ணுமாறு கடலலைகள் பொங்கி எழுந்தன.

அசுர மாயை துருவன்‌மேல் ஏவப்பட்டதைக் கண்டு முனிவர்கள் அனைவரும் துருவனின் க்ஷேமத்திற்காக ப்ரார்த்தனை செய்தனர்.

முனிவர்களின் ப்ரார்த்தனையைச் செவியுற்ற துருவன் ஆசமனம் செய்து தூய்மை பெற்று நாராயணாஸ்திரத்தைத் தொடுத்தான். அந்த அஸ்திரத்தால்‌ மாயை முழுவதும் ஒரு கணத்தில் மறைந்தது.

இன்னும் பல யக்ஷர்கள் துருவனை எதிர்க்க ஓடிவர அத்தனை பேரையும் பல்வேறு ஆயுதங்களால் வீழ்த்தினான் துருவன்.

ஒரு குற்றமும் புரியாத யக்ஷர்கள் வீணாக எதிர்ப்பதையும், துருவன் அவர்களைக் கொல்வதையும் கண்ட ஸ்வாயம்புவமனு கருணையினால் அவ்விடம் வந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment