Thursday, October 4, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 114 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 58



அரண்மனையில் ஸுருசியால் அவமானப்படுத்தப்பட்ட துருவன் கோபத்தையும் அழுகையையும் அடக்கிக்கொண்டு வேகமாக வீட்டை அடைந்தான்.

பள்ளிக்குச் சென்ற மற்ற குழந்தைகள் வீட்டிற்குத் திரும்பிய வண்ணம் இருக்க, துருவனைக் காணாமல் அவனை எதிர்நோக்கி வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள் ஸுநீதி.

அவ்வளவு நேரமாக அடக்கி வைத்துக் கொண்டிருந்த உணர்வுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து  தாயைக் கண்டதும்  பீறிட்டு அழுகையாய் வெடித்தது.

பள்ளிக்கிச் சென்ற குழந்தை தன்னைக்‌ கட்டிக்கொண்டு வாய்விட்டு கேவிக் கேவி அழுவதைக் கண்டதும் ஸுநீதி துடித்துப்போனாள்.

என்னாச்சு துருவா?
ஏதாவது அடி பட்டுக்கொண்டாயா?
வலிக்கிறதா?
ஏதேனும்‌சண்டையா?
யாராவது ஏதாவது சொன்னார்களா?

குழந்தையை அள்ளிக்கொண்டு உள்ளே சென்று முகத்தைத் துடைத்து முத்தமிட்டு வரிசையாய்க்‌ கேள்வி மேல் கேள்வி கேட்டாள். 
எதற்கும் பதில் இல்லை.

சேடிப்பெண்ணை நோக்க, அவர்களுக்குத் தெரியாத விவரமா? அரண்மனையிலிருந்து துருவன் வீடுவரும்‌ முன்னர் செய்தி காற்றாய்ப்‌ பரவியிருந்தது.

சேடிப்பெண்‌ தயங்கி தயங்கிச் சொன்னாள்.

சின்ன ராஜா அரண்மனைக்குப்‌ போனார்மா..

என்ன அரண்மனைக்கா?
யார் சொன்னது இவனுக்கு?

தெரியாதும்மா..

அங்க என்ன நடந்தது?

சேடிப்பெண்‌ ஒரு விவரம்‌கூட விடாமல்‌ நேரில்‌ கண்டவள்‌ போல் அனைத்தையும்‌ ஒப்பித்தாள்.

ஸுநீதி மிகவும் ஸாது. அவளது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

அவளது தாமரைக்கண்களில் கண்ணீர் அருவியாய் ஓடியது.

ஐந்தே வயதான குழந்தையிடம், காட்டுக்குப்போ, தவம் செய்து என் மகனாகப் பிறக்கும் வரம் வாங்கி வா என்று ஒருத்தி சொல்வாளா?

அவள்‌மகனாகப் பிறக்கவேண்டும் என்றால் இறந்தால்தானே பிறக்கமுடியும்? 

ஐந்து வயதிலேயே இவ்வளவு துவேஷமா?

 நாளை வளர்ந்தால் பட்டத்திற்குப் போட்டியாகிவிடுவான் என்று ஆளை வைத்துக்‌கொல்லவும் தயங்கமாட்டார்களே.

 ஆட்சியில் இருப்பவர்களிடம் எல்லா பலமும் உண்டு.

சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவளாய்க் கண்களைத் துடைத்துக்கொண்டு  குழந்தையின் முகத்தைப் பார்த்தாள்.

பிறகு சொன்னாள்.

உன் சிற்றன்னை சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள் துருவா.

பாவியான என் வயிற்றில் பிறந்ததால்தான் உனக்கு இவ்வளவு கஷ்டம். நமக்கு எப்போதும் பகவான்தான் அரண். 

திட்டுவது போல் சொல்லியிருந்தாலும் சிற்றன்னை சொன்னதில் உண்மை இருக்கிறது.

 மறந்தும் பிறர்க்குத் தீங்கு நினையாதே. மற்றவர்க்கு நாம் நினைக்கும் தீங்கு உண்மையில் நம்மையே அடைகிறது.

உன் தாத்தா ஸ்வாயம்புவ மனு ஏராளமாகத் தவமியற்றி பகவானை ப்ரீதி செய்திருக்கிறார். உன் தாத்தாவின் அப்பாவான ப்ரும்மாவும் பல்லாயிரம்‌ வருடங்கள் தவமியற்றித்தான் ப்ரும்ம பதவியை அடைந்தார். 

நீ காட்டுக்குச் சென்று தவமியற்று. பகவான் உனக்கு எப்போதும் துணையிருப்பார்.

குழந்தையைக் கட்டியணைத்து உச்சிமோந்து, திலகமிட்டாள்.

கண்ணைத் துடைத்துக்கொண்டு தாயை வணங்கிவிட்டு தீரனாகக் கிளம்பினான் துருவன்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment