Tuesday, October 2, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் -112 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 56


அரசனான உத்தானபாதன் அலட்சியம் செய்ததால் குழந்தை  துருவனோடு தனியாக வசித்து வந்தாள் அவனது மூத்த மனைவி ஸுநீதி.

குழந்தை அரச வம்சத்தினருக்கான  பாடசாலையில்‌ சேர்க்கப்பட்டான். ஒருநாள் பள்ளியில் ஏதோ விழாவில்‌ பங்கேற்பதற்காக குழந்தைகளை வெகுவாக அலங்கரித்து, பெற்றோரே அழைத்து வந்து பள்ளியில் விட்ட வண்ணம்‌ இருந்தனர்.

குழந்தை துருவனையும் அழகாக வெண்பட்டுடுத்திவிட்டு, பட்டுச் சட்டை போட்டுவிட்டு,  முத்து மாலைகள்‌ அணிவித்து, கங்கணங்கள் போட்டு, காதுகளில்‌ குண்டலங்கள் அணிவித்து, நெற்றியில் அழகாக திலகம்‌ இட்டு,  தலையில் ஒரு மயில்பீலி வைத்து அலங்கரித்து பள்ளியில் கொண்டு விட்டள் ஸுநீதி.  குழந்தையோ, அல்லது நடமாடும் தெய்வம்தானோ என்னும்படி அழகும் தேஜஸுமாய் ஜ்வலித்தான் துருவன்.

சற்று முன்னமே வந்துவிட்டதால், வேடிக்கை பார்க்கத் துவங்கினான். 

அவனது நண்பர்கள் ஒவ்வொருவரையும்‌ ஆணும் பெண்ணுமாய்  இருவர் அழைத்துவந்து பள்ளியில் விட்டனர். அவர்கள் தங்கள் குழந்தை பள்ளியினுள்‌ செல்லும் வரை பார்த்துக் கொண்டே நிற்பதையும் கையசைத்து புன்னகையுடன் விடை‌பெறுவதையும்‌ கண்டான். 

அநேகமாக எல்லாக் குழந்தைகளுடனும்‌ இருவர் வந்தனர். 
மெதுவாகத் தன் தோழர்களை அழைத்துக்‌ கேட்டான்.

வீரசிம்மா, உன்னை இரண்டுபேர் பள்ளிக்கு கொண்டுவந்து விட்டார்களே.. அவர்கள்‌ யார்?

அவன் சொன்னான்.
என் அம்மா அப்பா..

இன்னொருவனைக்‌ கேட்டான் துருவன்.

உன்னைக் கொண்டு வந்து விட்ட இருவர் யார்?

என் அம்மா அப்பா.

இப்படியாக துருவன் வகுப்புத்தோழர் அனைவரையும்‌ கேட்க, எல்லாக் குழந்தைகளும் துருவன்‌ கேட்கும் கேள்வி வித்தியாசமாகப் பட்டதால்‌ அவனைச் சூழ்ந்துகொண்டன.

என்னாச்சு துருவா?

ஒன்றுமில்லை என்றவன் 
தயங்கி தயங்கிக் கேட்டான். 

எல்லாருக்குமே அம்மா அப்பா என்று இரண்டு பேர் இருப்பார்களா? அல்லது யாருக்காவது ஒருவர் மட்டும்‌ இருப்பாரா?

ஒரு குழந்தை சொன்னது..

துருவா .. எல்லாருக்கும் அம்மா அப்பா உண்டு.

எனக்கு அம்மா மட்டும் தானே இருக்காங்க..

அட.. இதானா..
உனக்கும் அப்பா இருக்கார் துருவா..

எனக்கு அப்பாவா?
யாரது?

ஊருக்கே தெரியுமே.. உனக்குத் தெரியாதா?

தெரியாதே.. யாரடா அது? தயவு செய்து சொல்லுங்களேன்.

ஒரு குழந்தை சொன்னான்.

என்னுடைய அப்பா கஜானா அதிகாரி. இவனுடைய அப்பா சேனாதிபதி. இவ்வளவு ஏன்? எங்க எல்லாருடைய அப்பாவும் உன் அப்பாகிட்டதான் கைகட்டி வேலை பார்க்கறாங்க. உன் அப்பாதான் துருவா இந்த நாட்டின் ராஜா..

துருவனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இதுவரை அம்மா சொன்னதே இல்லையே..

நிஜம்மாவா? அவர் எங்கே இருப்பார்? உங்களுக்குத் தெரியுமா? 

ஒரு குழந்தை துருவனை கையைப் பிடித்திழுத்துக்கொண்டு பாடசாலை வாயிலுக்குப் போனான். 

அதோ அங்கே தெரியறதே!
பெரிய கோட்டை.
அதுக்குள்ள அரண்மனை..
மேலே கொடி பறக்கறது பார்த்தாயா? அதுதான் உன் அப்பா வசிக்கும் அரண்மனை..

பல்வேறு விதமான உணர்ச்சிகள் துருவனைத் தாக்க, அவனுக்கு தான் அப்பாவை உடனே பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

அந்தக் குழந்தையின் கையை உதறிவிட்டு அரண்மனையை நோக்கி சிட்டாய்ப் பறந்தான்.

கோட்டை வாயிலை அடைந்ததும் காவலாளிகளைப் பார்த்து தயங்கி நின்றான்.

காவலாளிகள் துருவனைப் பார்த்ததும் புரிந்து கொண்டனர்.

டேய்.. அந்தம்மா பையன்..

இளவரசர் டா..

இவரை உள்ள விட்டா சின்னம்மா நம்மளை வேலையை விட்டுத் தூக்கிடுவாங்களே..

யார் கண்டது? இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். என்ன இருந்தாலும்‌ இவர்தான் மூத்த இளவரசர்.  நாளைக்கு ராஜா மனசு மாறி இவர் சின்ன ராஜாவா வந்து உள்ள உட்கார்ந்தா அப்பவும் நமக்கு வேலை காலி..

இப்ப என்ன பண்றது?

பேசாம வழக்கமா பண்றதைப் பண்ணுவோம்..

சரி சரி..

காவலாளிகள் அவரவர் இடத்தில் சென்று நின்று கொண்டே உறங்குவதைப் போல் நடிக்கத் துவங்கினர்.

தன்னை அவர்கள்‌ தடுக்கவில்லை என்றுணர்ந்த துருவன் உள்ளே ஓடினான். 
எல்லா வாயிலிலும்‌ இவ்வாறே ஆயிற்று.

அந்த காவலாளிங்கல்லாம்‌ உள்ள விட்டுட்டாங்க. நமக்கேன் வம்பு 

என்பதாக எந்த வாயிற்காலனும் துருவனைத் தடுக்க முயலவில்லை.

நேராக சபா மண்டபத்தை அடைந்தான் துருவன்

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment