மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்.
ப்ரும்மாவின் புதல்வர்களான ஸனகாதிகள், நாரதர், ரிபு, ஹம்ஸர், ஆருணி, யதி முதலியவர்கள் ப்ரும்மசர்ய விரதத்தை ஏற்றனர். ப்ரும்மாவின் மற்றொரு பிள்ளையான அதர்மனின் மனைவி ம்ருஷா. அவர்களுக்கு தம்பன், மாயை என்ற இரட்டையர் பிறந்தனர். தென்மேற்கு திசையின் அதிபதியான நிர்ருதி அவர்களை வாரிசாக ஏற்றார். அவர்கள்மூலம் லோபன், நிக்ருதி (கபடத்தனம்) ஆகியோர் பிறந்தனர். அவர்களின் சந்ததி கலி (கலகம்), துக்ருதி(கெட்ட சொல்). அவர்களின் சந்ததி பயம், ம்ருத்யு. அவர்களின் குழந்தைகள் நிரயன் (நரகம்), யாதனா (நரகத்தை அனுபவிக்கும் உடல்) ஆகியோர்.
விதுரா!
இதுவரை ப்ரபஞ்ச நாசத்திற்குக் காரணமான அதர்மனது வம்சம் சொல்லப்பட்டது. புனிதமான இக்கதையை உட்பொருளுணர்ந்து மூன்றுமுறை கேட்பவரின் பாவங்கள் முற்றிலுமாய் அழியும்.
இதுவரை ப்ரபஞ்ச நாசத்திற்குக் காரணமான அதர்மனது வம்சம் சொல்லப்பட்டது. புனிதமான இக்கதையை உட்பொருளுணர்ந்து மூன்றுமுறை கேட்பவரின் பாவங்கள் முற்றிலுமாய் அழியும்.
இப்போது ஸ்ரீ ஹரியின் அம்சமான ப்ரும்மதேவரின் அம்சமாகத் தோன்றிய ஸ்வாயம்புவ மனுவின் வம்சக் கதையைத் தொடர்வேன்.
மஹாராணி சதரூபைக்கு ப்ரியவிரதன், உத்தானபாதன் என்ற இரண்டு மகன்கள்.
அவர்களுள் உத்தானபாதனைப் பற்றிச் சொல்கிறேன் என்றார் மைத்ரேயர்.
மூத்தவனான ப்ரியவிரதன் இருக்க இளையவன் உத்தானபாதன் கதையை எதற்காக வியாஸர் முதலில் வைத்தார் என்று தோன்றலாம்.
உத்தானபாதனின் மகனான துருவனின் சரித்ரம் அத்தகையது.
ஐந்தே வயதில் தூய்மையான பக்தியால் இறைவனை தரிசிக்கும் பாக்யம் பெற்றவன்.
இன்னொரு முக்கியமான காரணம் என்னவெனில் துருவனின் கதை என்பது அவனது குருவான நாரதரின் பெருமைகளை நிரூபிக்கும் கதையாகும். ஸ்ரீமத் பாகவதம் எழுதத் தூண்டி தனக்கு அருள் செய்த குருவான நாரதரின் பெருமையை முதலில் சொல்ல அவர் மனம் துடித்தது.
நாரதரின் கதையை ஆரம்பத்திலேயே பார்த்தோம். அவரும் ஐந்து வயதில் ஆதரவற்ற நிலையில் ஸாதுக்களின் காரணமற்ற கருணையால் இறையை உணர்ந்தவர்.
அவருடைய சரித்ரத்தை ஒத்தாற்போலவே துருவனும் தன் ஐந்து வயதில், ஆதரவுகளற்ற சமயத்தில் குருவின் கருணையால் இறையை உணர்ந்தான்.
தன்னைப்போலவே இக்குழந்தை கஷ்டப்படுகிறானே என்று நினைத்த நாரதரும் அவன் பால் கருணையைக் கொட்டி கொட்டி அனுக்ரஹம் செய்த கதை. அதை நினைத்ததும் துருவனின் கதையை வியாசர் முதலில் சொல்ல விழைந்தார் போலும்.
உத்தானபாதனுக்கு இரு மனைவியர். மூத்தவள் ஸுநீதி. இளையவள் ஸுருசி.
அழகுடனும், அனைத்து நற்பண்புகளுடனும் விளங்கினாள் ஸுநீதி. இருப்பினும் ஸுருசியின் பேரழகில் மயங்கிய உத்தானபாதன் அவளது கைப்பாவையாக மாறிப்போனான்.
புலன்களின் ருசிக்கு அடிமைப்பட்டால் நீதி தன்னால் விலகிப்போகும்.
முதலில் தனக்கு அரண்மனை வாசம் கிடைத்தால் போதும் என்று நினைத்த ஸுருசி, பின்னர் பட்டமஹிஷியாக ஆசைப்பட, அதற்கும் இணங்கினான் உத்தானபாதன். ஸுநீதியின் அமைதி ஸுருசிக்கு இன்னும் தைரியத்தை ஊட்ட, அவளது நற்பண்புகளையும் அமைதியையும் கண்டு பொறாமை கொண்டு அலட்சியம் செய்யத் துவங்கினாள் ஸுருசி.
உலகையே ஆளும் ஸார்வபௌமனான உத்தானபாதன் ஸுருசியை மகிழ்விக்க தன் பங்கிற்கு ஸுநீதியை அவமதித்தான்.
இதற்கிடையில் ஸுநீதிக்கு துருவன் என்ற குழந்தையும், ஸுருசிக்கு உத்தமன் என்ற குழந்தையும் பிறந்தன.
நாளுக்கு நாள் சபையோர், பணியாட்கள், சிலசமயம் மக்கள் மத்தியிலும் ஸுநீதிக்கு அவமரியாதைகள் நிகழ்ந்தன. எல்லோரும் மூத்த ராணி பாவம் என்று வம்பு பேசத் துவங்கினர்.
தனக்கு ஏற்பட்ட அவமானங்களைப் பொறுத்தாலும், இந்தச் சூழ்நிலையில் குழந்தை வளர்ந்தால் அதன் மனநிலை பாதிக்கப்படும் என்று தவித்தாள் ஸுநீதி.
அரசனுக்குரிய எத்தனையோ மாளிகைகளில் அரண்மனையை விட்டுத் தள்ளி இருந்த எளிமையான ஒரு மாளிகையைத் தேர்ந்தெடுத்து குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் முன்னரே அங்கு சென்று வசிக்கத் துவங்கினாள்.
தானாகவே தொல்லை விட்டது என்றெண்ணிய அரசன், அவளுக்கான மானியங்களுக்கு ஏற்பாடு செய்து, சில பணியாளர்களையும் நியமித்தான். அதோடு மூத்த மனைவியையும் தன்குழந்தையையும் மறந்தே போனான்.
அத்தனை விதமான நற்பண்புகளையும், தன் நடத்தை மூலமாகவும், இதிஹாஸ புராணக் கதைகள் மூலமாகவும் துருவனுக்கு ஊட்டிய ஸுநீதி, அவனிடம் தந்தையைப் பற்றி மூச்சுகூட விடவில்லை. அடிக்கடி வீட்டில் ஸத்சங்கங்கள் ஏற்பாடு செய்வாள்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குழந்தை வளர்ந்தது.
பொதுவாக ஒரு செடியோ மரமோ இலை விட்டு, மொட்டுக்கட்டி, பூத்தபிறகே அதன் நறுமணத்தை வெளிப்படுத்தும். ஆனால், துளசியோ முளைத்து முதல் இலை விடும்போதே வாசனையுடன் திகழும்.
அதுபோல், ஒருவர் பெரிய மஹாத்மாவாக வரப்போகிறார் என்றால் அவரது இளமைப் பருவத்திலேயே, இறைவனைக் காணும் முன்பே, அனிச்சை செயல்கள் மூலம் அவரது மேன்மை வெளிப்பட்டுவிடும்.
துருவனது முகமும், கண்களும், ஸாமுத்ரிகா லக்ஷணமும், அவன்து குணவைபவங்களும் ஆளுமையும், ஈர்ப்புத்தன்மையும், தேஜஸும் அவனை மஹாத்மாவாக விளங்கப்போகிறவன் என்று பறை சாற்றின.
ஐந்து வயதானதும் த்ருவன் க்ஷத்ரியர்களுக்கான பாடசாலையில் சேர்க்கப்பட்டான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment