தங்கமீனுருவில் வந்த பகவான், மெய்யறிவு வேண்டி நின்ற ஸத்யவிரதனுக்கு ஞானோபதேசம் செய்தார்.
மன்னன், ஸப்தரிஷிகளுடன் அப்படகிலேயே அமர்ந்து ஜீவாத்ம தத்துவத்தையும், ஆன்மதத்துவத்தையும் ஐயமறக் கேட்டறிந்தான்.
பகவானுடன் பேசிக்கொண்டிருந்த ஸத்யவிரதனுக்கும், ரிஷிகளுக்கும் பிரளயத்தின் கொடுமைகள் எதுவும் தெரியவில்லை.
ஊழிக்காற்றையும், படகு அலைக்கழிவதையும், இருளையும், பகவானின் துணையுடன் எளிதாகக் கடந்தனர். அவர் வாலை ஆட்டி ஆட்டி பிரளய நீரில் இங்குமங்கும் அலைவதும், நீரைக் கிழித்துக்கொண்டு முன்னேறுவதும் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.
அங்குமிங்கும் திரும்பும் போதும் தன் மூக்கில் கட்டப்பட்ட படகு கவிழாமல் திரும்புகிறதா என்று தாயன்புடன் கவனமாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டார் மத்ஸ்யமூர்த்தி. சில சமயம் வாலால் நீரை அடித்தார். படகிலுள்ளோர் மீது சாரலாக விழுந்தது.
பேசும்போது, அவர்களுக்குக் கேட்கவேண்டும் என்பதற்காக பின்னோக்கியே சுற்றினார்.
தன் அழகையெல்லாம் வாரியிறைத்துக்கொண்டு பிரளய நீரைப் புனிதமாக்கினார் மத்ஸ்யமூர்த்தி.
பிரளயம் முடியும் காலம் வந்தது. பகவானுடனேயே இருந்ததால் ஆயிரம் வருடங்கள் கொண்ட பிரளயகாலம் ஒரு கணத்தில் முடிவதுபோல் இருந்தது ஸத்யவிரதனுக்கு.
பிரும்மாவின் உறக்கம் கலைந்தது. அவர் எழுந்ததும் பகவான் நாராயணர் ஹயக்ரீவன் என்ற அசுரனைக் கொன்று அவன் திருடிக்கொண்டுபோன வேதத்தைக் கைப்பற்றி பிரும்மாவிடம் அளித்தார்.
பிரளய நீர் மெதுவாக வற்றி நிலம் தெரியத்துவங்கியதும், ஸத்யவிரதனையும், ரிஷிகளையும் வாழ்த்திவிட்டு மத்ஸ்யமூர்த்தி மறைந்தார்.
பகவானின் மூலமாக பரோக்ஷம் (கண்களுக்குப் புலனாவது), அபரோக்ஷம் (கண்களுக்குப் புலனாகாதது) ஆகிவற்றையும், ஞானம், விஞ்ஞானம் ஆகியவற்றின் அறிவையும் பெற்றிருந்த ஸத்யவிரதனை பிரும்மா இந்த ஏழாவது மன்வந்தரத்தின் அதிபதியாக்கினார். அவன் வைவஸ்வத மனு எனும் பெயர் பெற்றான்.
மத்ஸ்யாவதார பகவான், மற்றும் ஸத்யவிரதனின் உரையாடலைக் கேட்பவர் அனைத்துப் பாவங்களிலினின்றும் விடுபடுகிறார்.
அவரது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன. முக்தி கிடைக்கிறது.
அவரது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன. முக்தி கிடைக்கிறது.
மாயையால் மத்ஸ்யாவதாரம் பூண்ட பகவானை வணங்குவோம்.
எட்டாவது ஸ்கந்தம் முற்றிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment