ஸத்யவிரதன் செடி மரங்களின் விதைகளோடும், மூலிகைகளோடும், ஜீவன்களின் ஸூக்ஷ்ம சரீரத்துடனும், ப்ரளய நீரில் தன்னருகில் வந்த படகில் ஏறினான். அவ்வமயம் ஸப்தரிஷிகளும் வந்தனர்.
அனைவரையும் ஏற்றிக்கொண்டு அப்படகு பிரளய நீரில் சுற்றலாயிற்று.
எங்கெங்கு காணினும் நீர், நீர், நீர் மட்டுமே. இருள் சூழ்ந்து அநீர்ப்பரப்பைக் கண்டால் மனத்தில் அச்சம் எழும். தன்னொளியால் ப்ரகாசிக்கும் ஸப்தரிஷிகள், ஸத்யவிரதனிடம் கூறினர்.
ஸத்யவிரதா! நம்மைக் காப்பதாக இறைவன் உன்னிடம் மீனுருவில் வந்து நேரில் கூறினான் அல்லவா? அச்சம் விட்டு, இறைவனின் திருவடியை தியானம் செய். அன்பே உருவான இறைவன் நம்மை நிச்சயம் காப்பார் என்றனர்.
அனைவரும் இறைவனை தியானம் செய்யலானார். அப்போது தங்கநிறம் கொண்ட மிகப் பெரிய மீன் அங்கே வந்தது. இலட்சம் யோஜனை தூரம் அளவுள்ள அந்தத் தங்கமீனின் மூக்கில் ஒற்றைக் கொம்பு இருந்தது.
தன் முன் மீனுருவில் தோன்றிய பகவானைக் கண்டு ஸத்யவிரதன் மிகவும் மகிழ்ந்தான். பகவானின் கட்டளையின்படி, தன் தோணியை வாசுகிப் பாம்பின் உதவியுடன் பகவானது கொம்பில் கட்டினான். பின்னர் கைகூப்பித் துதிக்கலானான்.
பகவானே!
ஜீவன்கள் தொன்றுதொட்டு வரும் அறியாமையால் துன்பங்களை அனுபவிக்கின்றன. தங்களைச் சரணடைந்தவர் ஒருவரும் வீண்போவதில்லை.
ஜீவன்கள் தொன்றுதொட்டு வரும் அறியாமையால் துன்பங்களை அனுபவிக்கின்றன. தங்களைச் சரணடைந்தவர் ஒருவரும் வீண்போவதில்லை.
அஹங்காரத்தை அழித்து, முக்தியை வழங்கும் குரு தாங்களே.
நான் நன்மை தீமைகளை அறியாத அஞ்ஞானியாவேன். கர்மத்தளைகளால் கட்டப்பட்டிருக்கிறேன். குருவின் சேவையாலேயே அஞ்ஞானம் நீங்கும். எனது குருநாதர் தாங்களே. என் அறியாமையை விலக்குங்கள்.
நெருப்பில் காய்ச்சிப் புடம் போட்டதும் வெள்ளி, தங்கம் ஆகியவை ஒளிரும். ஜீவாத்மா தங்களை வணங்குவதால் அழுக்கு நீங்கித் தூய்மை பெறுகிறான். தாங்கள் அழிவற்றவர். மாறுதலற்றவர். ஸகல குருக்களுக்கும் குருவானவர். தாங்கள்தான் எங்களுக்கும் குருவாக இருக்கவேண்டும்.
எல்லாதேவதைகளும், குருமார்களும் ஒன்றாய்ச் சேர்ந்து அருள் செய்தாலும் தங்களது அருளில் பதினாயிரத்தில் ஒரு பங்குகூடச் செய்ய இயலாது. ஸர்வேஸ்வரனான தங்களைச் சரணமடைந்தேன்.
அஞ்ஞானிகள் செய்யும் உபதேசத்தால் அஞ்ஞானமே வளரும். எனவே அவர்களைச் சரணடைபவர்கள் மென்மேலும் ஸம்சாரத்தில் உழல்கிறார்கள்.
பொய்யறிவால் ஸம்சாரத்தைத் தாண்ட இயலுமா?
தாங்கள் எல்லா ஜீவன்களையும் நேசிக்கும் நண்பன். அன்பு நிறைந்த இறைவன். அஞ்ஞான இருளகற்றும் ஆசார்யன். எல்லையற்ற ஞானஸ்வரூபன். வேண்டுவோர் வேண்டியதை அளிப்பவர். மக்களின் இதயகமலத்திலேயே அந்தர்யாமியாக வசிக்கும் தங்களை அஞ்ஞானம் மறைப்பதால் அறியமுடிவதில்லை.
தேவர்கள் கொண்டாடும் தேவதேவன். பரம்பொருள். உண்மையறிவைப் பெறவே நான் தங்களிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன். ஆன்மதத்துவத்தை தங்கள் திருவாக்கால் எடுத்துரைத்து என் அஹங்காரத்தை நீக்கி உண்மையான ஆன்ம ஸ்வரூபத்தை ஓளிவீசச் செய்யுங்கள் என்றான்.
எவ்வளவு அழகான பிரார்த்தனை!
பகவான் ஸத்யவிரதனின் வேண்டுகோளுக்கிணங்கி அவனுக்கு ஆன்ம தத்துவத்தை உபதேசித்தார். ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் அடங்கிய மிகச் சிறந்த புராணத்தையும் உபதேசம் செய்தார். அதுவே மத்ஸ்யபுராணம் எனப்படுகிறது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment