பொற்றேரில் ஏறிக்கொண்ட பலி அக்னிபோல் ஒளிர்ந்தான். பெருவலி படைத்த தானவத்தலைவர்கள் பலர், தத்தம் படையுடன் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.
அனைத்து சேனைகளையும் அணிவகுத்துக்கொண்டு இந்திர பட்டணமான அமராவதி நோக்கி கிளம்பினான்.
அமராவதி பட்டணத்தின் அழகு சொல்லவும் கூடுமோ..
தகதகவென்று ஜொலிக்கும் அப்பட்டணத்தினுள் தீய எண்ணத்துடன் எவராலும் நுழைய இயலாது.
தகதகவென்று ஜொலிக்கும் அப்பட்டணத்தினுள் தீய எண்ணத்துடன் எவராலும் நுழைய இயலாது.
பலி அமராவதியை நாற்புறமும் முற்றுகையிட்டான்.
பலியின் ஆயுதங்களைக் கண்டு பயந்துபோன இந்திரன் தேவர்கள் புடைசூழ குரு பகவானிடம் சென்று முறையிட்டான்.
பலியைக் கண்ட குரு பேசலானார்.
தேவேந்திரா, இவனது தேஜஸும், ஆயுதங்களும் வேதம் ஓதும் ப்ருகு வம்சத்து அந்தணர்களின் ஆசீர்வாதத்தினால் கிடைத்துள்ளன. அவர்கள் தங்கள் தவ வலிமையை அனைத்தையும் ஒன்று திரட்டி இவனுக்கு அளித்துள்ளனர்.
ஸர்வசக்தனான பகவான் ஒருவனைத் தவிர இவனை எதிர்க்க எவராலும் இயலாது. காலம் அனைத்தையும் கனிய வைக்கும். இப்போது இவனுக்குப் பொற்காலமாகும். இவனது தீய காலத்தை எதிர் நோக்குங்கள். அதுவரை விண்ணுலகைத் துறந்து எங்காவது மறைந்து வாழுங்கள்.
இவன் என்றாவது ஒருநாள் அந்தணர்களை உதாசீனப்படுத்துவானாகில் அப்போது சுற்றம் சூழ அழிவான், என்றார்.
தங்கள் நன்மையில் பெரிதும் கருத்துள்ள குருவின் சொற்களுக்கிணங்கி தேவர்கள் அனைவரும் மாறுவேடத்தில் அமராவதியை விட்டுச் சென்றனர்.
தேவர்கள் சென்றதும் பலி அமராவதியைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டான்.
தங்கள் சீடனான பலியிடம் அதீத அன்பு கொண்ட ப்ருகு வம்சத்து அந்தணர்கள் பலிக்கு இந்திர பதவி நிலைக்க வேண்டி நூறு அசுவமேத யாகங்களைச் செய்வித்தனர்.
அவ்வேள்விகளின் மகிமையால், பலியின் புகழ் மூவுலகங்களிலும் பரவியது. உயர்ந்த செல்வத்தை அடைந்த பலி முழுமை பெற்றதாக எண்ணி மகிழ்ந்து அனுபவிக்கலானான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment