Thursday, April 25, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 248

பரீக்ஷித், ஸ்ரீ சுகமுனியிடம், மன்வந்தரங்களும், அவர்களின் அதிபதிகளும் யாரால் நியமிக்கப்படுகின்றன என்று கேட்டான்.

ஸ்ரீ சுகர் கூறலானார்.
பரீக்ஷித்! மன்வந்தரங்கள், அவற்றின் அதிபதிகளான மனுக்கள் அனைவரும் ஸ்ரீமன் நாராயணனால் நியமிக்கப்படுகின்றனர்.

யக்ஞபுருஷன் பல அவதாரங்கள் ஏற்கிறார். அந்தர்யாமியாகவும் இருந்து தூண்டுகிறார். அதனாலேயே மனுக்கள் உலகத்தை முறையாக நடத்துகின்றனர்.

நான்கு யுகங்களின் முடிவில், வேதம் மறைந்தது போலாகும்போது, ஸப்தரிஷிகளும் தங்கள் தவ வலிமையால் வேதத்தை நினைவில் பெற்று வெளிக்கொணர்கின்றனர். அவற்றாலேயே அறநெறிகள் அறியப்படுகின்றன. மனுக்கள் அனைவரும் பகவானின் கட்டளைப்படி மிகவும் கவனமாக தர்மநெறிகளைக் காப்பாற்றுகிறார்கள். அவர்களது புதல்வர்களும் தந்தையின் வழியில் தர்மத்தைக் காக்கிறார்கள். பஞ்சமஹாயக்ஞங்கள் முதலிய கர்மாக்களால் ரிஷிகள், தேவர்கள், பித்ருக்கள், பூதங்கள் ஆகியோர் அவியுணவைப் பெறுகின்றனர்.

பகவான் அந்தந்த மன்வந்தரங்களில் ஸனகாதிகளின் உருவில் தத்வ ஞானத்தையும், யாக்ஞவல்க்யர் போன்றோரின் உருவில் கர்ம நெறிகளையும், தத்தாத்ரேயர் முதலிய யோகேஸ்வரர்களின் உருவமேற்று யோகமார்கத்தையும் உபதேசிக்கிறார்.

காலத்திற்கேற்றபடி, முக்குணங்களை ஏற்று பகவான் ப்ரஜாபதிகளின் உருவில் அவதரித்து படைக்கும் தொழிலைச் செய்கிறார். அரசனின் உருவில் திருடர்களை அடக்குகிறார். காலனின் உருக்கொண்டு அனைத்தையும் அழிக்கிறார்.

மாயை பற்பல திருமேனிகள் தாங்கி ஜீவனின் புத்தியை மோகத்தில் ஆழ்த்துகிறது. எனவே பகவானின் உண்மை ஸ்வரூபத்தை ஜீவனால் அறியமுடிவதில்லை.

இதுவரை, மஹாகல்பம், அவாந்தர கல்பம் ஆகியவற்றின் கால அளவைக் கூறினேன். ஒவ்வொரு அவாந்தர கல்பத்திற்கும் பதினான்கு மன்வந்தரங்கள் உண்டு.
என்றார்.

பரீக்ஷித் மீண்டும் கேட்டான்.
மஹரிஷியே! இவ்வளவு பெரிய ப்ரபஞ்சத்தின் நியாமகனாக இருக்கும் பகவான், ஏன் பலிச் சக்ரவர்த்தியிடம் ஏழைபோல் யாசித்தார்? தான் வேண்டியதனைத்தையும் பெற்றபின்னும் ஏன் பலியைக் கட்டிப்போட்டார்? பரிபூரணனான பகவானின் இச்செயல் புரியவில்லையே. இதை விளக்குங்கள். என்றான்.

ஸ்ரீ சுகர் அரசன் கூர்ந்து கவனித்துக் கதை கேட்பதை எண்ணி மகிழ்ந்தார். பின்னர் கூறலானார்.

அரசனே! இந்திரன் தேவாசுர யுத்தத்தில் பலியைத் தோற்கடித்து அவனது செல்வத்தையும் உயிரையும் பறித்தான். அப்போது ஸஞ்ஜீவனி வித்யையால் சுக்ராசார்யார் அவனைப் பிழைக்கச் செய்தார். அதனால் பலி, தன் உடைமைகள் அனைத்தையும் குருவின் காலடியிலும், ப்ருகு வம்சத்து அந்தணர்களுக்கும் ஸமர்ப்பித்து, உடல், பொருள், உயிர் ஆகியவற்றைக் கொண்டு அவருக்குத் தொண்டு புரியலானான்.

இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த அந்தணர்கள் பலிக்கு ஸாம்ராஜ்ய பட்டாபிஷேக முறைப்படி பட்டாபிஷேகம் செய்வித்து, விஸ்வஜித் என்னும் வேள்வியையும் செய்வித்தனர்.

பலி முறை வழுவாது வேள்வியைச் செய்து அவியுணவை இட்டு அக்னியை வழிபட்டதும், அவ்வேள்வித்தீயினின்று பொன்னாடைகளால் சூழப்பட்ட மிக அழகான தேரும், பச்சை நிறமுள்ள குதிரைகளும், சிங்கம் பொறித்த கொடியும் வெளிவந்தன.

மேலும் தங்கக்கம்பிகளால் சுற்றப்பட்ட தெய்வீக வில்லும், குறையாத அம்புகள் கொண்ட இரண்டு அம்பறாத்தூணிகளும் திவ்யமான கவசங்களும் வந்தன. பலியின் தாத்தாவான ப்ரஹலாதன் எப்போதும் வாடாத ஒரு மாலையையும், சுக்ராசார்யார் ஒரு வெண்சங்கையும் பலிக்குக் கொடுத்தனர்.

இவ்வாறு அந்தணர்களால் போர்த்தளவாடங்கள் அனைத்தையும் பெற்று அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு ப்ரஹலாதனை வணங்கிவிட்டுக் கிளம்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment