தக்ஷனின் அறுபது பெண்களில் பத்துபேரை தர்மதேவதைக்கும், பதிமூன்றுபேரை கச்யபருக்கும், இருபத்தேழு பெண்களை சந்திரனுக்கும், இரண்டு பெண்களை பூதங்களுக்கும், இருவரை ஆங்கீரஸ மஹரிஷிக்கும், க்ருசாஸ்வருக்கு இரு கன்னிகைகளையும், மீதமுள்ள நான்கு பேரை மீண்டும் கச்யபருக்கும் மணம் செய்து கொடுத்தான்.
தர்மதேவதையின் மனைவிகள் பானு, லம்பா, ககுப், ஜாமி, விஷ்வா, ஸாத்யா, மருத்வதி, வஸு, முஹூர்தா மற்றும் ஸங்கல்பா.
பானுவின் மகன் ரிஷபதேவர். அவரது மகன் இந்த்ரஸேனன். லம்பாவின் மகன் வித்யோதரன். அவனது மகன் மேககணன்.
ககுப் என்பவளின் மகன் சங்கடன். அவனது மகன் கீகடன். இவர்களின் புதல்வர்கள்தான் பூமியில் உள்ள மலைக்கோட்டை களின் அபிமானி தேவதைகள்.
ஜாமியின் மகன் ஸ்வர்கன். அவன் மகன் நந்தி. விஷ்வாவின் மகன் விச்வேதேவர்கள். அவர்களுக்கு மக்கட்பேறில்லை. ஸாத்யாவின் மகன் ஸாத்யர்கள். அவர்கள் மகன் அர்தஸித்தி.
மருத்வதியின் மகன்கள் மருத்வானும், ஜயந்தனும். ஜயந்தன் பகவானின் அம்சாவதாரம். அவனை உபேந்திரன் என்றும் அழைப்பர்.
முஹூர்த்தா என்பவளின் புதல்வர்கள் காலாபிமானி தேவதைகள். அவர்கள் தத்தம் முஹூர்த்தங்களில் ஜீவன்களுக்கு அந்தந்த காலத்தின் பயனை அளிப்பார்கள்.
ஸங்கல்பா என்பவளின் மகன் ஸங்கல்பன். அவனது மகன் காமன். வஸு என்பவளின் மகன்கள் அஷ்டவஸுக்கள். துரோணன், ப்ராணன், துருவன், அருக்கன், அக்னி, தோஷன், வஸு, விபாவஸு ஆகியோர்.
துரோணனின் மனைவி அபிமதி. அவளுக்கு மகிழ்ச்சி, துக்கம்,பயம் ஆகியவற்றின் அபிமான தேவதைகள் பிறந்தனர்.
ப்ராணனின் மனைவி ஊர்ஜவதி. அவர்களது மக்கள் ஸஹன், ஆயு, புரோஜவன் ஆகிய மூவருமாவர்.
துருனின் மனைவி தரணிக்கு நகரங்களின் அபிமான தேவதைகள் பிறந்தனர்.
அர்கனுடைய மனைவி வாஸனா. அவள் மகன் தர்ஷன் முதலிய பலர்.
அக்னி என்ற வஸுவின் மனைவி தாராவின் மற்றொரு பெயர் ஸ்வாஹா என்பது. அவளுக்கு த்ரவிணகன் முதலிய பலர் பிறந்தனர்.
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகனும் அக்னியின் அம்சமே. சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருக்கும் அக்னியிலிருந்து பிறந்ததால் அவருக்கு அக்னிபூ: என்ற பெயருண்டு.
வஸுவின் மகன் ஆங்கீரஸ். இவர்களது மகன் சிற்பக்கலையின் அதிபதியான விச்வகர்மா. அவர் மனைவி க்ருதி. இவளது மகன் சாக்ஷுஷ மனு.
விபாவஸுவின் மனைவி உஷா. அவர்களது மக்கள் வ்யுஷ்டன், ரோஷிஷன், ஆதபன் ஆகியோர். ஆதமனுக்கு பகற்பொழுதின் தேவதையான பஞ்சயாமன் பிறந்தான். அவனால்தான் அனைத்துக் காரியங்களும் ஒழுங்காக நடைபெறுகின்றன.
பூதனின் மனைவி ஸதரூபா. தக்ஷனின் மகளான இவள் கோடிக்கணக்கான ருத்ர கணங்களைப் படைத்தாள்.
அவர்களுள் ரைவதன், அஜன், பவன், பீமன், வாமன், உக்ரன், வ்ருஷாகபி, அஜைகபாதன், அஹிர்புத்னியன், பஹுரூபன், மஹான் ஆகிய பதினோரு பேரும் முக்கியமானவர்கள். அவர்களுள் மஹான் என்பவரை அனைவரும் தலைவராக ஏற்றனர்.
பூதனின் இரண்டாவது மனைவியான பூதைக்கு பல பூதங்களும், விநாயகர்களும் தோன்றினர்.
ஆங்கீரஸ் ப்ரஜாபதியின் முதல் மனைவி ஸ்வதா பித்ருகணங்களைப் படைத்தாள். இரண்டாவது மனைவி ஸதி என்பவள் அதர்வாங்கிரஸம் என்ற வேதப்பகுதியின் அபிமான தேவைதையைப் பெற்றாள்.
க்ருசாஸ்வனின் மனைவி அர்ச்சிஸ். அவள் தூம்ரகேசனைப் படைத்தாள். இரண்டாவது மனைவியான திஷ்ணாவுக்கு வேதசிரஸ், தேவலர், வயுனன், மனு ஆகிய நான்கு புதல்வர்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment