பரீக்ஷித் மூன்றாவது ஸ்கந்தத்தில் ஸ்வாம்புவ மன்வந்தரத்தில் சொல்லப்பட்ட தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், நாகங்கள், விலங்குகள் ஆகியவற்றின் ச்ருஷ்டியைப் பற்றி விவரமாகச் சொல்லும்படி கேட்டான்.
ஸ்ரீ சுகர் ப்ரசேதஸர்களையும், தக்ஷனின் பிறப்பையும், விவரமாகக் கூறினார்.
தக்ஷன் ச்ருஷ்டி செய்வதற்குமுன் புலன்களை அடக்கி பகவானை நோக்கித் தவம் செய்தான்.
பகவான் அவனது கடுந்தவத்திற்கு இரங்கி அவன் முன் தோன்றினார்.
தக்ஷன் பகவானைப் பலவாறு துதிக்க, பகவான் அவனுடைய பக்திக்கு மெச்சி, ஸ்வரூப ஞானத்தையும், படைக்கும் விதத்தையும் கூறி, திருமணம் செய்து, இல்லறமேற்று படைப்பைச் செய்து, சேவை செய்யும்படி கூறிவிட்டு மறைந்தார்.
பகவானின் சக்தியால் தக்ஷப்ராஜாபதி மிகுந்த சக்தியைப் பெற்றான். பஞ்சஜனன் என்பவனின் மகளான அஸிக்னீ என்பவளை மணந்து ஹர்யஸ்வர்கள் என்ற பதினாயிரம் பேரைத் தோற்றுவித்தான்.
அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான ஒழுக்கமும் செயலும் கொண்டவர்கள். தக்ஷன் அவர்களிடம் மக்கட்செல்வத்தைப் பெருக்கும்படி கட்டளையிட அவர்கள் மேற்குதிசை நோக்கிச் சென்றனர்.
அங்கே சிந்துநதியும், ஸமுத்ரமும் கலக்கும் இடத்தில் நாராயண ஸரஸ் என்ற புண்ய தீர்த்தம் உள்ளது. அதில் நீராடியதும் மனத்தூய்மை பெற்றனர். அவர்கள் மனம் நிவ்ருத்தி மார்கத்தில் திரும்புவதைக் கண்ட நாரதர் அவர்கள்முன் தோன்றினார். அவர்களுக்கு விடுகதை போல் ரகசியமாக ஞானத்தை போதித்தார்.
ஹர்யஸ்வர்கள் நாரதர் சொன்னதன் உட்பொருளை ஆராய்ந்து, இறைவன் ஒருவனே அனைத்தின் அந்தர்யாமி. அவனே அனைத்துப் பொருளின் உள்ளும் உறைகிறான் என்பதை உணர்ந்தனர்.
நாரதரின் தரிசனம் வீணாகுமா? அவர்கள் நான் எனது என்ற எண்ணத்தை விடுத்து, புலன்களை ஒடுக்கி ஹ்ருதயத்தில் பகவானை நிறுத்தி தவம் செய்யத் துவங்கினர்.
படைப்புத் தொழில் செய்ய ஏவப்பட்ட தன் மக்கள் முக்திநெறியைக் கைக்கொள்வது கண்டு மிகவும் வருந்தினான் தக்ஷன். அதற்குக் காரணம் நாரதர் என்றறிந்து அவர்மேல் மிகுந்த சினம் கொண்டான்.
நாரதரைப் பார்த்து தகாத சொற்களைப் பயன்படுத்தி கடுமையாக ஏசினான். பின்னர், நீ அனைத்து உலகங்களையும் சுற்றித் திரிவாய். உனக்கு எவ்வுலகிலும் நிரந்தரமாக நிலைத்து நிற்க இடம் கிடைக்காது போ என்று சாபமிட்டான்.
தக்ஷன் தந்த சாபத்தை நாரதர் சரி என்று ஏற்றார். பதில் சொல்லத் திறன் இருந்தும், பிறர் செய்யும் தீமையைப் பொறுப்பதே ஸாதுலக்ஷணமாகும்.
அதன் பின் ப்ரும்மதேவர் வந்து தக்ஷனை சமாதானப் படுத்தினார்.
தக்ஷனுக்கு மீண்டும் அறுபது பெண்மக்கள் பிறந்தனர். அவர்கள் தந்தையின்மீது மிகுந்த அன்பு பூண்டவர்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment