ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.
பரீக்ஷித்!
எண்ணெய், விளக்கு, திரி ஆகிய மூன்றுக்கும் தொடர்பு உள்ளவரைதான் தீபம் எரியும். அதுபோல உடலின் தொடர்பால் செய்யும் செயல், மனம், உடலில் தங்கும் ஆத்ம சைதன்யாம் ஆகிய மூன்றும் தொடர்பில் இருக்கும் வரை தான் பிறவிச் சுழல் இருக்கும். ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய மூன்று குணங்களின் மாறுபாடுகளாலேயே ஜீவனின் தோற்றம், அழிவு ஆகியவை ஏற்படுகின்றன.
விளக்கு அணைந்தாலும் ஒளி என்னும் தத்துவம் இருப்பதுபோல உடலின் தொடர்பு அறுந்தாலும் ஆன்மா ப்ரகாசமாகச் சுடர் விடுகிறது. அது காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குகிறது.
அரசே! நீ நன்கு விசாரம் செய்து சரீரம் வேறு. ஆத்மா வேறு என்பதை உணர்வாயாக. உள்ளத்தில் பகவானின் திருவடியைப் பிடித்துக்கொள்.
அந்தண சாபத்தின்படி தக்ஷகனால் உன்னைத் தீண்ட இயலாது. ஏனெனில் பரமாத்மாவோடு ஒன்றிவிட்ட ஜீவனுக் காலனால் பாதிக்க இயலாது. ஏன் அருகில்கூட வர முடியாது.
உன் நிஜ ஸ்வரூபத்தில் ஒன்றுவாயாக. ஆன்மா ஒன்றியபின், சரீரத்தைத் தக்ஷகன் கடிப்பதால் உனக்கு பாதிப்பு ஏற்படாது. உனக்கு இந்தப் ப்ரபஞ்சம் தெரியாது. உண்மைப்பொருள் மட்டுமே உனக்குத் தெரியும்.
நீ கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கூறிவிட்டேன் பரீக்ஷித். இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?
என்றார்.
பரீக்ஷித் ஸ்ரீ சுகரை வணங்கினான். என் மேல் தங்களுக்கு எவ்வளவு கருணை. பரமாத்மாவின் எண்ணற்ற லீலைகளைக் கூறி மெய்ஞானத்தைப் புகட்டினீர்கள். நான் தன்யனானேன். என் பிறவிப்பயன் எட்டப்பட்டது.
நானும் இங்குள்ள மற்றவர்களும் தாங்கள் கூறிய கதையமுதத்தை மனமாரப் பருகினோம். இந்த புராணம் முழுவதும் பகவானின் லீலைகளும் குணங்களும் நாம வைபவங்களுமே நிரம்பியுள்ளது.
அதனால்தான் சான்றோர்கள் இதில் மூழ்கித் திளைக்கின்றனர்.
நான் ப்ரும்மநிலையை அடைகிறேன். எனக்கு தக்ஷகனிடம் பயமில்லை. எனக்கு அனுமதி கொடுங்கள். நான் மௌனத்தை ஏற்று, புலன்களை அடக்கி, வாசனைகளை அழித்து, பரமாத்ம ஸ்வரூபத்தில் லயித்து ப்ராணனை விட்டு விடுகிறேன். எம் அறியாமை முற்றிலுமாய் அழிந்தது.
என்று கூறினான்.
பின்னர் ஸ்ரீசுகர் அவனை வாழ்த்திவிட்டு மற்ற முனிவர்களுடன் அவ்விடம் விட்டுக் கிளம்பினார்.
என்னதான் ப்ரும்மஸ்வரூபம் என்றாலும் தன் மனம் விரும்பிய சீடன் உடலை விட்டு நீங்குவதைக் காண அவர் மனம் பொறுக்கவில்லை போலும்.
அனைவரும் சென்றபின் பரிக்ஷித், கங்கைக் கரையில் கிழக்கு நுனியாகப் பரப்பிய தர்ப்பயின் மேல் வடக்கு நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்தான். பகவானிடம் சிந்தனையை ஒருமுகப்படுத்தினான். தியானத்தில் ஆழ்ந்து இரண்டற்ற நிலைக்குச் சென்றான். பிறகு சலனங்கள் அனைத்தையும் நிறுத்தி மூச்சையும் அடக்கினான். ஒரு கட்டை போல உணர்வுகள் அற்று அமர்ந்திருந்தான்.
ப்ரும்மமாகவே ஆகிவிட்டான்.
தூரத்தில் சமீக மஹரிஷியின் மகனான ச்ருங்கியின் சாபத்தின்படி தக்ஷகன் பரீக்ஷித்தைத் தீண்டுவதற்காக வந்து கொண்டிருந்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment