Thursday, June 10, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 646

மார்க்கண்டேயரைக் கண்டு ப்ரும்மா முதலான அனைவரும் வியந்தனர்.


டையறாத தவம், கர்மாக்கள் மற்றும் அனுஷ்டாங்களால் உள்ளத்தூய்மை பெற்று பகவான் நாராயணனை ஆராதிக்கத் துவங்கினார் மார்க்கண்டேயர்.


யோக சாதனைகளால் பகவத் ஸ்வரூபத்தில் நிலை பெற்று ஆறு மன்வந்தரங்களைக் கழித்தார்.
ஏழாவது மன்வந்தரத்தில் இந்திரனுக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. அவர் இந்திர பதவிக்கு ஆசைப்படுகிறாரோ என்றெண்ணி தவத்தைக் கெடுக்க முயற்சி செய்தான்.

மார்க்கண்டேயரின் தவத்தைக் கலைக்க கந்தர்வர்களையும், தேவமாதர்களையும் மன்மதனுடன் அனுப்பினான்.

மார்க்கண்டேயரின் ஆசிரமம் இமயத்திற்கு வடக்கே புஷ்பத்ரா நதிக்கரையில் சித்ரா என்ற பாறையின் அருகில் இருந்தது. இந்த தேவக்கூட்டம் முழுவதும் அங்கு வந்து இறங்கிற்று.

மிகவும் புனிதமான அந்த ஆசிரமத்தில் ஏராளமான முனிவர்கள் கூட்டம் கூட்டமாக வசித்தனர்.

தூய்மையான வற்றாத நீர்நிலைகளும், நாற்புறமும் சூழ்ந்த உயர்ந்த மரங்களும், வண்டுகள், பஞ்சம ஸ்வரத்தில் கூவும் குயிலினங்கள், தோகை விரித்தாடும் மயில்கள், ஏராளமான பறவைகள் என்று அந்த ஆசிரமம் மிகவும் அழகாக இருந்தது.

மன்மதன் அங்கு தன் வேலையைத் துவங்க அவ்விடம்‌ அதி சௌந்தர்யமாக மாறிற்று.

தவத்தில் அமர்ந்திருந்த மார்க்கண்டேயர் அக்னி பகவானே எதிர் வந்ததுபோல் மிகவும் ஒளியுடன் திகழ்ந்திருந்தார்.

கந்தர்வப் பெண்களும் மிக இனிமையாகப் பாடத் துவங்கினர்‌. வீணை, மிருதங்கம், தபேலா ஆகியவை முழங்கின.

அப்ஸரப்பெண்கள் பூப்பந்து விளையாடிக்கொண்டு முனிவர் முன் செல்ல, மன்மதன் மலர் அம்பை எய்தினான்.

ஆனால் அவரது ஒளியின் முன் அனைத்தும் வீணாயின. மலர் அம்பு கருகி விழுந்தது.

அனைவரும் பயந்துபோயினர். மார்க்கண்டேயர் கண்விழித்தால் சபிக்கக் கூடும் என்று கண் முன் நில்லாமல் ஓடிவிட்டனர்.

மன்மதனின் தோல்வியைக் கேட்டு இந்திரன் திகைத்துப்போனான்.
முனிவரோ நிஷ்டையின் மூலம் பகவானை மனத்தில் நிலையாக நிறுத்த முனைந்து கொண்டிருந்தார்.

அவர் மீது அதீத கருணை கொண்ட பகவான் நரன், நாராயணன் என்று இரண்டு உருவங்கள் எடுத்து ரிஷிகளாக அவர் முன் தோன்றினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாஸத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

No comments:

Post a Comment