புராண லக்ஷணங்கள் பத்து.
1. ஸர்கம்
உலகின் தோற்றம்
2. விஸர்கம்
ப்ரும்மாவின் படைப்பு
3. விருத்தி
பன்மடங்காதலும் செயற்பாடும்
4. ரக்ஷை
காத்தல்
5. மன்வந்தரங்கள்
பல மனுக்களின் காலம், ஆட்சி விவரம்,
6. வம்சம்
மனுக்களின் சந்ததி
7. வம்சானுசரிதம்
பின்வரும் பரம்பரை
8. ப்ரளயம்
ஸம்ஸ்தை
9. ஹேது
படைப்பின் காரணம்
10. அபாசிரயம்
பகவானே அனைத்தும் என்ற சரணாகதி.
மூலதத்வத்திலிருந்து குணம் கலக்கம் கொண்டு மஹத் தத்வம் தோன்றுகிறது. அதிலிருந்து ஸத்வம், தாமஸம், ராஜஸம், என்ற அஹங்காரங்கள் தோன்றின. அவற்றிலிருந்து பூதங்கள், அவற்றின் தன்மாத்திரைகள், ஐந்து இந்திரியங்கள், ஸ்தூலமான விஷயங்கள், அவற்றின் அபிமானி தேவதைகள் ஆகியன தோன்றின. படைப்பின் இவ்வரிசை ஸர்கம் ஆகும்.
பகவானின் அருளினால் இந்த தத்வங்கள் ஜீவன்களின் வாஸனைகளை (எண்ணப்படிவு) அடிப்படையாகக் கொண்டு ச்ருஷ்டியைத் துவங்கின.
இது விஸர்கம் ஆகும்.
அசையாத பொருள்களே அசையும் பொருள்களின் வாழ்வாதாரம்.
இது வ்ருத்தியாகும்.
பகவான் செய்த திருவிளையாடல்கள் அனைத்தும் ரக்ஷை எனப்படும்.
மனு, தேவர்கள், மனு புத்திரர்கள் தேவேந்திரன், ஸப்தரிஷிகள், அம்சாவதாரங்கள் இவர்கள் தம்முடைய அதிகாரங்களுக்கேற்றவாறு ஆறு மன்வந்தர காலங்களுக்குப் பொறுப்பேற்கின்றனர்.
ப்ரும்மாவிலிருந்து துவங்கும் பரம்பரை வம்சம் எனப்படும். அந்தப் பரம்பரையை உயர்த்திய ஸாதுக்களின் சரித்ரம் வம்சானுசரிதம் எனப்படும்.
இந்த ப்ரபஞ்சம் மாயையிலிருந்தே தோன்றியது. எனவே இதற்கு இயல்பாகவே அழிவு உண்டு. நைமித்திக ப்ரளயம், ப்ராக்ருதிக ப்ரளயம், நித்ய ப்ரளயம், ஆத்யந்திக ப்ரளயம் என நால்வகை ப்ரளயங்கள் உண்டு. இது ஸம்ஸ்தை எனப்படும்.
இந்த படைப்புகள் அனைத்திற்கும் காரணம் ஜீவனின் அஞ்ஞானமே. கர்ம வாசனைகளில் உழலும் ஜீவன் ஹேது எனப்படுகிறான்.
ஜீவனின் நிலைகள் ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (தூக்கம்) ஆகியவை. இவைகளின் தேவதைகள் விசுவன், தைஜஸன், ப்ராக்ஞன் ஆகியோர். இவர்களது உடல் மாயையால் ஆனது.
ஆனால் இந்த மாதிரியெல்லாம் குறிப்பிடப்படுவதும் ப்ரம்மமே ஆகும்.
இந்த மூன்று நிலைகளிலும் ஜீவனை சாக்ஷியாகப் பார்த்துக்கொண்டிருப்பது ப்ரும்மமே.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment