கண்ணனை அழைத்துச் செல்ல ப்ரும்மா, இந்திராதி தேவர்கள், மாமுனிவர்கள், ப்ரஜாபதிகள், பித்ருக்கள், சித்த, கந்தர்வ, வித்யாதர, நாக, சாரண, யக்ஷ, ராக்ஷஸ, அப்ஸரஸ்கள் அனைவரும் வந்தனர். அனைவரும் கண்ணனின் லீலைகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்தனர். அவர்களுடைய விமானங்களால் ஆகாயம் நிரம்பியது.
பின்னர் கண்ணன் ஆத்மாவைத் தன்னுள் நிலை நிறுத்தி கண்களை மூடிக்கொண்டான்.
மற்றவர்கள் விஷயத்தில் சரீரத்தை விட்டு ஆத்மா மட்டும் கிளம்பும். கண்ணன் தன் திவ்யமங்கள திருமேனியுடனேயே வைகுண்டம் எழுந்தருளினான்.
துந்துபி முழங்க, தேவர்கள் பூமாரி பொழிய, சத்யம், தர்மம், கீர்த்தி, ஸ்ரீதேவி ஆகிய தேவதைகளும் பூமியை விட்டு நீங்கி பகவானைப் பின் தொடர்ந்து சென்றன.
அனைவரும் பார்க்க பகவான் கிளம்பினான். ஆனால் அவன் பர்ந்தாமத்தை அடைந்ததை ப்ரும்மா உள்பட ஒருவரும் காண இயலவில்லை.
அனைவரும் பகவானின் மகிமைகளைப் பேசிக்கொண்டே தத்தம் இருப்பிடம் சென்றனர்.
ஹே! பரீக்ஷித்! ஒரு நடிகன் பல்வேறு வேஷங்களைப் போட்டுக் கொண்டாலும் அடிப்படை சுபாவத்தினின்று மாறாமல் இருப்பான். அதுபோல் பகவான் தான் செய்யும் அவதார, லீலைகளில் ஒன்றாமல், தனித்து நிற்கிறான். அனைத்துமே மாயையின் லீலை என்று உணர்வாயாக. ப்ரபஞ்சத்தைப் படைத்து தானே அதில் ப்ரவேசித்து இறுதியில் அதைத் தன்னுள் லயப்படுத்திக்கொள்கிறான்.
தனியொருவனாகவே இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்க வல்ல பகவான் தன் திவ்ய மங்கள திருமேனியை காப்பாற்றிவைக்க விரும்பவில்லை. ஞானிகளுக்கு முன்னுதாரணமாக இவ்வுடலின் மீது பற்றுக்கொள்ளக்கூடாது என்று நிரூபித்தான். காலையில் எழுந்ததும் இவ்வைபவத்தை நினைப்பவர் வைகுண்ட பதவியை அடைகிறார்.
தாருகன் துவாரகைக்கு வந்து உக்ரஸேனரை வணங்கி அழுதான். பின்னர் யதுகுலத்தினரின் அழிவைப் பற்றி விவரமாகக் கூறினான். அதைக் கேட்டதும் சபையில் அனைவரும் மூர்ச்சையாகி விழுந்தனர்.
தம் உறவினரின் சடலங்களைத் தேடிக்கொண்டு ஓடினார்கள். தேவகி, ரோஹிணி வசுதேவர் ஆகியோர் கண்ணனையும் பலராமனையும் காணாமல் மயக்கமடைந்தனர்.
மற்ற பெண்கள் தத்தம் கணவர்களின் உடல்களைத் தேடிக் கண்டுபிடித்து உடன்கட்டையேறினர். பலராமன், ப்ரத்யும்னன், மற்றும் பகவானின் குமாரர்களின் மனைவிகள் தத்தம் கணவரின் உடலை அணைத்துக்கொண்டு தீயில் புகுந்தனர். கண்ணனின் மனைவிகள் அனைவரும் கண்ணனை தியானம் செய்தவாறே அக்னியை மூட்டி அதில் புகுந்தனர்.
அர்ஜுனன் கண்ணனின் பிரிவால் நடுநடுங்கிப்போனான். கீதோபதேசத்தை எண்ணி அமைதியாக இருந்தான். குழந்தைகள் இல்லாத உறவினர் அனைவர்க்கும் நீர்க்கடன் செய்தான்.
அர்ஜுனன் அங்கிருந்து கிளம்பியதும் கண்ணனின் திருமாளிகையை மட்டும் விட்டுவிட்டு மீதி இருந்த துவாரகை முழுவதையும் கடல் ஆக்ரமித்தது.
பதினோறாவது ஸ்கந்தம் முற்றிற்று.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
மிகப் பிரமாதமாக பாகவதம் பற்றி எளிய நடையில் அடியோங்கள் தெரிந்துகொண்டோம். பன்னிரண்டாவது ஸ்கந்தம் இதில் வரவில்லையே?
ReplyDelete