கண்ணன் தொடர்ந்தான்.
அஞ்ஞானம் என்பது தோற்றமுதலே ஜீவனை ஆக்ரமிக்கிறது. ப்ரக்ருதியின் காரண காரிய வடிவமான இருபத்து நான்கு தத்துவங்களுடன் புருஷனும் பரமாத்மாவும் சேர்ந்து இருபத்தாறு தத்துவங்கள் ஆகின்றன.
புருஷன், ப்ரக்ருதி, மஹத் தத்வம், அஹங்காரம், ஆகாயம், வாயு, தேஜஸ், தண்ணீர், பூமி, கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம், ஞானேந்திரியங்களுடைய ஐந்து விஷயங்கள், ஆகியவற்றைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் அவரவர் யுக்திக்கு ஏற்ப எண்ணிக்கையை நிறுவுகின்றனர். அதனால் தத்துவ ஞானிகள் எந்தக் கொள்கையிலும் தவறு காணமாட்டார்கள்.
இன்னும் ப்ரக்ருதி, புருஷன் ஆகியவற்றின் ஜடத்தன்மை, மற்றும் உயிர்த்தனமை பற்றிய விளக்கங்களை உத்தவர் கேட்க அனைத்தையும் கண்ணன் பொறுமையாக விளக்கினான்.
அதன் பின் ஜீவன் எவ்வாறு ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுள் புகுகின்றது? அதன் சூட்சுமங்கள், லிங்க சரீரம், ஒவ்வொரு மனிதனின் ஆயுள் நிலைகள், சரீரத்தின் ஒன்பது நிலைகள், கர்பம் முதல் வயோதிகம் வரை ஜீவனின் சம்சாரச் சுழல், புத்தியின் குணங்கள், சாதாரண மனிதனின் இயல்பு, பக்தனின் இயல்பு ஆகியவற்றை விளக்கினான்.
பின்னர் அவந்தி தேசத்து பெருஞ்செல்வந்தனான அந்தணன் மிகவும் கஞ்சனாக இருந்து, அனைத்து செல்வங்களையும் இழந்த பின் விவேகம் வந்து பகவானை தியானிக்கத் துவங்கினான். அவன் மனம் திருந்தி பகவத் தியானத்தில் வைராக்யத்துடன் வாழத் துவங்கியதும் ஊர் மக்களும் சுற்றமும் அவனை எள்ளி நகையாடி, கட்டிப்போட்டு, துன்புறுத்தினர். அவர் அனைத்தையும் கர்மவினை என்பதாகச் சகித்துக்கொண்டு மிக உறுதியுடன் தன் வழியில் நின்றார்.
அவ்வப்போது அவர் கூறிவந்த கருத்துக்களின் தொகுப்பு பிக்ஷு கீதம் எனப்படுகிறது.
அதன் சாரம் பகவானின் திருவடிகளில் பக்தி செலுத்தினால் இந்த ஸம்சாரக் கடலை அநாயாசமாகத் தாண்டிவிடலாம் என்பதே.
அவர் கதையிலிருந்து நாம் அறியவேண்டிய விஷயம் யாதெனில் புத்தியை எப்படியாவது வசப்படுத்தி பகவானிடம் நிலை நிறுத்தவேண்டும் என்பதே.
அதன் பின் கபிலர் உபதேசித்த சாங்க்ய தத்துவம் முழுவதையும் உத்தவருக்கு விளக்கினான் கண்ணன். பின்னர் முக்குணங்களின் செயல்பாடுகளை ஏராளமான உதாரணங்களுடன் விளக்கினான்.
புரூரவஸ் என்ற இளாநந்தனின் கதையையும் அவன் ஞானம் பெற்ற வகையையும் விவரித்தான் கண்ணன்.
அதன் பின் கர்மகாண்டத்தில் கூறப்படும் க்ரியாயோகத்தைப் பற்றி விவரித்தான் கண்ணன். வைதீகம், தாந்த்ரீகம், மிஸ்ரம் ஆகிய உபாசனை முறைகளை விளக்கினான். பூஜை செய்யும் முறைகள், சங்கல்பம், விக்ரஹம் அல்லது மூர்த்தி பற்றிய விவரங்கள், தியானிக்கும் முறை, ரூப தியானம், மந்திரங்கள், நைவேத்ய முறைகள், ப்ரார்த்தனை, கோவில் எழுப்பும் முறைகள், உற்சவங்கள், தினசரி பூஜை, ஆகியவற்றையும் மிக விவரமாகக் கூறினான் கண்ணன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment