கண்ணன் உத்தவனிடம் தொடர்ந்து பேசலானான்.
உத்தவா! தத்தம் தகுதிக்கும், சக்திக்கும் ஏற்ப தர்மங்களைப் பின்பற்றுகிறார்கள். அதற்கு மாற்றாகச் செய்வது தோஷம். இந்த குண தோஷப் பிரிவினைகள் செய்பவனின் தகுதியை வைத்து நிர்ணயிக்கப்படுகிறதே தவிர செயலை வைத்து அல்ல.
சமமான பொருள்களிலும் குணம், தோஷம், சுத்தம், அசுத்தம், சுபம், அசுபம் ஆகியவை வகுக்கப்படுகின்றன. அந்தந்தப் பொருள்களைத் தேர்வு செய்து அதிலுள்ள குற்றங்களை கண்டறிவது தகுந்தது எது நிச்சயிக்கவே.
என் அருமை உத்தவா! விதிகள், மற்றும் விலக்குகளால் தர்மத்தைச் சரிவரச் செய்ய இயலும். சமூகம் சீர்படும். சொந்த வாழ்வும் அமைதி பெறும். மனிதன் கர்மவலையில் சிக்கிச் சீரழியாமல் காக்க கட்டுப்பாடுகள் பெரிதும் உதவும்.
வேகத்தடை இருப்பது வேகமாகச் செல்ல உதவும். கட்டுப்பாடு களுடன் கூடிய வாழ்க்கையால் மனத்தைத் தன் வசப்படுத்த இயலும். நானே மனு முதலியவர்களாகப் பிறந்து வாழ்க்கை முறைகளை எடுத்துக் காட்டினேன்.
ப்ரும்மா முதல் அனைத்துப் பொருள்களும் ஐம்பெரும்பூதங்களால் ஆனவை. அவற்றின் ஆத்மா நானே. எல்லாம் சமம் என்று சொன்னாலும் நடைமுறையில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருக்கின்றன. காரணம் கர்ம வாசனையினால் கட்டுப்பாட்டை இழக்கும் புலன்களை வசப்படுத்தி நால்வகை புருஷார்த்தங்களான தர்ம அர்த்த காம மோட்சத்தை அடையவேண்டுமென்பதே.
தேசம், காலம், பயன், பயனுறுபவன் ஆகியவற்றின் குணமும் குறைகளும் என்னால் விதிக்கப்பட்டுள்ளன. கர்மாக்களில் அலட்சிய எண்ணம் கூடாது. க்ருஷ்ணசாரம் என்ற மான் இல்லாத இடம், சாதுக்கள் இல்லாத இடம், உவர் நிலம், ஆகியவை அசுத்தமானவை. கர்மாவை நடத்த அனுகூலமாக இருப்பதும், அதற்கேற்ற பொருள்கள் கிடைக்கக்கூடியதுமான காலம் புனிதமானது. கர்மாவிற்கான பொருள்கள் கிடைக்காத காலம், தீட்டு முதலியவைகளால் கர்மா செய்ய இயலாத காலம் ஆகியவை அசுத்தமானவை.
பொருள்களின் சுத்தம் மற்றொரு பொருள், சொல், ஸம்ஸ்காரம், காலம், அளவு ஆகியவற்றால் உண்டாகும். நீர் விட்டுக் கழுவினால் சுத்தம். சிறுநீர் பட்டால் அசுத்தம் என்பது போல.
இயலுதல், இயலாமை, புத்தி மற்றும் வளத்திற்கேற்பவும் சுத்தம் அமைகிறது. தானியம், மரப்பாத்திரம், யானை தந்தம் போன்ற எலும்பு வகை, நூல், எண்ணெய், தேன், நெய், பொன், பாதரசம், தோல், மண்பாத்திரங்கள் அவ்வப்போது காலத்தாலும், காற்று, நீர், மண் ஆகியவற்றாலும் சுத்தமடைகின்றன.
ஸ்நானம், தவம், தவம், வயது, ஸம்ஸ்காரம், கர்மா, என்னை நினைப்பது ஆகியவற்றால் சித்த சுத்தி ஏற்படும். ஆசார்யரிடம் மந்திரோபதேசம் பெற்று இதயத்தில் நிறுத்தினால் மந்திரசக்தி ஏற்படும். மந்திரப்பயனை எனக்கு அர்ப்பணம் செய்தால் கர்ம சுத்தியாகும். தேசம், காலம், பொருள், வினையாற்றுவோன், மந்திரம், கர்மா ஆகிய ஆறும் சுத்தமாக இருப்பின் அது தர்மம். அசுத்தமானால் அதர்மம்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment