ஜீவன் சுதந்திரமானது அல்ல. அதற்கு சுதந்திரம் இருக்குமானால் துக்கத்தை விரும்புமா என்ன? ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் தலையீடு இல்லாமலேயே முன்கர்ம வினைப்பயனின்படி சுகமும் துக்கமும் ஏற்படுகிறது.
ஸத்வகுணம் அதிகமுள்ள தேவதைகளை ஆராதனை செய்வதால் மனிதனுக்கும் ஸத்வகுணம் அதிகமாகிறது. அவனுடைய புத்தி, குணங்களுக்கேற்பவே செயல்படுகிறது.
அனைத்துமே உடலுடன் ஜீவனைத் தொடர்பு படுத்துவதால் நிகழ்கிறது. எல்லா ஜீவன்களுமே கால வெள்ளத்தில் ஒவ்வொரு நாளும் தம் அழிவை நோக்கியே நகர்கின்றன.
உடல் எடுத்தவன் பெரிய அறிவாளியானாலும் சரி, முட்டாளாயினும் சரி. அவனுக்கு அகங்காரம் உள்ளவரை சுகமில்லை. மரணம் நிகழாமல் தடுக்க என்ன வழி என்று அவர்கள் ஆராய்வதில்லை.
தூக்கு தண்டனைக் கைதிக்கு எந்தப் பொருள்தான் சுகம் தரும்? அதுபோல் மரணம் தன்னை விழுங்கத் துரத்துகிறது என்று உணரும் ஞானிக்கு எப்பொருளும் சுகம் தராது.
இவ்வுலகைப் போலவே தேவலோகத்திலும் போட்டி, பொறாமை, சண்டை, வெறுப்பு ஆகியவை உள்ளன. புண்யபலனுக்கேற்ப அவர்களின் சுகமும் தேய்கிறது. சுவர்கத்திற்குப் போனாலும் ஆனந்தம் சாஸ்வதமில்லை.
நிறைய யாகங்கள் செய்பவன் தேவர்களைத் த்ருப்தி செய்து ஸ்வர்கம் செல்கிறான். அங்கு விருப்பம் போல் செல்லும் தேவவிமானத்தில் ஏறிக்கொண்டு தேவமாதர்களுடன் கூடிக் குலவுகிறான். இன்பமாகப் பொழுதைக் கழிக்கும் அவன் புண்யபலன் தேய்வதை அறிவதில்லை. புண்யபலன் முற்றுமாக அழிந்த நிலையில், காலம் அவனை மீண்டும் கீழே தள்ளுகிறது.
அதர்மங்கள் செய்பவன், பிறரைத் துன்புறுத்துபவன், தீய செயல்கள் செய்பவன் ஆகியோர் இருள் சூழ்ந்த கோரமான நரகங்களை அடைகின்றனர். பாவ கர்மாவின் பலன் தீரும் வரை நரகத்தில் துன்புறுத்தப்பட்டு, பிறகு கீழே தள்ளப்படுகிறார்கள்.
இருவருமே மீண்டும் புவியில் பிறந்து, அழியும் உடல் கொண்ட பிறவியை அடைகின்றனர்.
வெகு நீண்ட காலமான இரண்டு பரார்தம் ஆயுள் பெற்ற ப்ரும்மா முதல் அனைவரும் காலனான எனக்கு பயப்படுகிறார்கள்.
முக்குணங்களின் சேர்க்கையே கர்மா செய்யத் தூண்டுகிறது. அவை ஒருக்கும் வரை ஆத்மா பலவனாது என்றெண்ணத் தூண்டும்.
பரமாத்மாவான என்னை குணங்களுடன் தொடர்புள்ளவனாக எண்ணுவதால் காலம், ஆத்மா, ஆகமம் (விதிகள்) உலகம், இயற்கை, தர்மம் என்று பலவாறாக அழைக்கிறார்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment