கண்ணன் கூறியதைக் கேட்ட உத்தவர் அவனது எண்ணத்தை மாற்ற முடியாது என்று அறிந்துகொண்டார். இருப்பினும் கண்ணன் கிளம்புவதற்குள் அவன் வாயிலாக தத்துவ ஞானத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில் மேலும் கேட்டார்.
உத்தவர் பெரிய ரசிகர் ஆவார். கண்ணனிடம் ஏதாவது பேச்சு கொடுத்தால் அதற்கு விடை சொல்லும் விதமாக அவனது இதழ்கள் குவிந்து விரியும், அலையும் குழற்கற்றையை ஒயிலாக ஒதுக்குவான். கன்னத்தில் பளபளக்கும் அவனது குண்டலங்களின் ஒளியில் மின்னும் விழிகள் ஆகியவற்றை ரசிக்கலாம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம். ஏனெனில் உத்தவருக்கு ஏற்கனவே ப்ரேம பக்தியையும் ஞானத்தையும் உபதேசித்த கண்ணன் அவரைத் தன் ஆருயிர்த் தோழராக ஏற்று உள்ளத்தைப் பகிர்ந்திருந்தான். பல நேரங்களில் கண்ணனின் பார்வையை வைத்தே அவனது எண்ணத்தை அறிந்து அதைத் தானே சபையில் முன்மொழிவார் உத்தவர்.
அவரது எண்ணங்களை முழுதுமாக அறிந்திருந்த கண்ணன், அவரை முன்னிட்டுக்கொண்டு உலகோர்க்காக தத்துவ ஞானத்தை உபதேசிக்கிறான்.
உத்தவா! தத்துவஞானத்தை உணர்ந்த மனிதர்கள் விவேகத்துடன் தீய மனப்பாங்கிலிருந்து தாமே விலகிவிடுகிறார்கள்.
அவர்கள் தனக்குத்தானே ஆசார்யனாக இருந்துகொள்வார்கள். பிறர் வாழ்க்கையிலிருந்து கண்ட அனுபவம், அனுமானங்கள், தமது ப்ரத்யக்ஷ அனுபவம் ஆகியவற்றின் மூலம் தாமே மனத்தெளிவு பெற்றுவிடுகிறார்கள்.
ஸாங்க்யம், மற்றும் யோகம் ஆகியவற்றில் தேர்ந்த ஞானிகள் வாழும் காலத்திலேயே பேராற்றல் படைத்த என்னை நேராகவும், காணும் பொருள் அனைத்திலும் மற்றும் ஸகுண, நிர்குண, விராட் வடிவங்களிலும் காணவல்லவர்கள்.
ஒரு கால், இரு கால்கள், மூன்று, நான்கு கால்கள், ஏராளமான கால்கள் மற்றும் கால்களே இல்லாமல் என்னால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளிலும் மனிதன்தான் எனக்கு மிகவும் பிடித்தமானவன்.
எதற்கும் அகப்படாத என்னை மனிதனால் சுலபமாகப் பிடித்து விட முடியும். சாஸ்திரம், பிரமாணம், அனுமானம், ஆப்த வாக்கியம் (ஏற்கனவே கண்டவர்களின் வாக்கு) ஆகியவற்றின் மூலம் சுலபமாகக் கண்டறியலாம்.
முன்பொரு முறை தத்தாத்ரேயருக்கும் யது அரசனுக்கும் இடையே இது விஷயமாக ஒரு உரையாடல் நடந்தது.
எல்லா விதமான தர்மங்களையும் அறிந்த யது ஒரு முறை ஆடையின்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு வாலிப வயது அவதூத சன்யாசியைக் கண்டான். அவரைப் பார்த்து அவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று கேட்டான்.
ஓ! உத்தமரே! தாங்கள் எந்த கர்மாவும் செய்வதில்லை. அப்படியிருக்க தங்கள் முகத்தில் ஞான ஒளி வீசுகிறதே. பார்ப்பதற்குச் சிறுவனாகத் தென்படும் தாங்கள் சிறந்த அறிவு பெற்றது எங்ஙனம்?
செல்வம், புகழ், ஆயுள் ஆகியவற்றிற்காக தர்ம அதர்ம காரியங்களை மனிதர்கள் செய்கிறார்கள். எல்லா செயல்களையும் மிக எளிதாகச் செய்யக்கூடிய நீங்கள் ஏன் செயல்களற்று பித்தனைப்போலவும், சித்தம் கலங்கியவன் போலவும் திரிகிறீர்கள்?
எல்லா மனிதர்களும் காம க்ரோத லோப மோக மத மாத்ஸர்யங்களால் எரிக்கப்படுகிறார்கள். ஆனால் நீங்களோ கங்கா ப்ரவாஹத்தின் நடுவில் நிற்கும் யானையைப்போல் எதற்கும் கலங்காமல் அசைவற்று நிற்கிறீர்கள். உலகப்பொருள்களில் ஒட்டுதல் இன்றி ஆத்மாவிலேயே நிலைபெற்றிருப்பது தங்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது? என்று கேட்டார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment