கரபாஜனர் தொடர்ந்தார்.
கலியுகத்தில் இறைவனின் வண்ணம் கறுப்பு. தன்னொளி கொண்டு அனைவரையும் ஆகர்ஷிக்கிறார்.
அறிவாளிகள் இவர் பெயரைக் கீர்த்தனம் செய்து உய்கிறார்கள்.
இறைவனின் நாமங்களே அனைத்து பாபங்களையும் போக்கிவிடுகின்றன. அவருடைய திருவடித் தாமரைகளை இதயத்தில் தாங்குபவர்கள் எல்லாத் தீர்த்தங்களுக்கும் உறைவிடமாகிறார்கள். சரணாகதி செய்பவர்களின் இன்னல்கள் அனைத்தும் ஒழிகின்றன. சம்சாரக் கடலைத் தாண்டிவைக்கும் ஓடம் பகவானின் தாமரைப் பாதங்களே.
தர்மங்களின் கொள்கலனான பகவான் ராமனாக அவதாரம் செய்து அயோத்தியை உதறிவிட்டு பாதங்கள் நோக வனம் சென்றார். அந்தத் திருப்பாதங்களைப் போற்றியும் அவரது திருநாமத்தைச் சொல்லியுமே சுலபமாகக் கரையேறுகிறார்கள்.
இவ்வாறு அந்தந்த யுகங்களுக்கேற்ப மக்கள் இறைவனைப் போற்றுகிறார்கள்.
எல்லா விஷயங்களையும் அறிந்த பெரியோர் நன்கு ஆலோசித்துப் பார்த்து கலியுகத்தைத்தான் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் இறைவனை அடைய மிகச் சுலபமான வழியான நாம கீர்த்தனம் கலியுகத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஸம்சாரத்தில் உழல்பவர்க்கு இதைவிடப் பெரிய லாபம் உண்டோ? ஒரு மாபெரும் மரத்தைக் கறையான் அரிப்பதுபோல காது வழியாக உள்ளேசெல்லும் நாமம் ஒருவனின் பாவங்கள் முழுவதையும் அழித்துவிடுகிறது.
க்ருத யுகத்தில் பிறந்தவர்களெல்லாம்கூட இறைநாமத்திற்கு ஆசைப்பட்டு கலியுகத்தில் பிறக்க ஆசைப்படுகிறார்கள். எனவே கலியுகத்தில் இறை அடியார்கள் ஏராளமாகத் தோன்றுவார்கள்.
அதிலும் திராவிட தேசத்தில் பிறக்கும் அடியார்களின் எண்ணிக்கை மிக அதிகம். தாமிரபரணி, வைகை, பாலாறு, காவிரி முதலான நதிகளின் கரைகளில் பல இறையடியார் தோன்றுவர்.
பகவானை சரணடைந்துவிட்டவர் தேவ பித்ரு, ரிஷி ஆகிய மூவகைக் கடன்களிலிருந்தும் விடுபடுகிறார். அதிதி பூஜை, பூதபலி ஆகிய சடங்குகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். பகவான் ஒருவனுக்கே அடிமைகளாக ஆகிறார்கள். எல்லா விதமான கர்மவாசனை மற்ரூம் கர்மத்தளைகளிலிருந்தும் தப்பித்துவிடுகிறார்கள்.
எப்போதும் ஹரிநாமம் சொல்லும் அடியார் ஏதேனும் பிழை செய்தாலும்கூட, உள்ளிருக்கும் இறைவன் அவரை அச்செயலிலிருந்து காத்து பாவத்தை அழித்து விடுகிறார்.
நிமிச்சக்கரவர்த்திக்கு நவயோகிககளால் உபதேசிக்கப்பட்ட அனைத்தையும் நாரதர் வசுதேவருக்குக் கூறி முடித்தார்.
நிமி எல்லா யோகிகளையும் வணங்கி அனைவரையும் கௌரவித்தார்.
அதன் பின் அனைவரும் பார்க்கும்போதே யோகிகள் மறைந்துபோனார்கள். நிமி அவர்கள் கூறிய வழியைப் பின்பற்றி நற்கதியடைந்தான்.
நீங்களும் இதே வழியைக் கடைப்பிடித்து நற்கதியடையப்போகிறீர்கள். பகவான் நாராயணனே உமக்கு மகனாகப் பிறந்திருக்கிறார். உங்கள் இருவருடைய புகழும் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கப் போகிறது.
வாத்ஸல்ய பக்தியினால் நீங்கள் மனத்தூய்மை பெற்றிருக்கிறீர்.
சிசுபாலன், பௌண்ட்ரகன், தந்தவக்த்ரன், சால்வன் முதலியோர் பகையினால் நிற்றல், நடத்தல், உண்ணல், என்று எதைச் செய்தாலும் கண்ணனையே எண்ணிச் செய்தனர். அவர்களுக்கே சாரூப்ய முக்தி கிடைத்ததே. உங்களைப்போல் ஆசையுடன் பூஜை செய்பவர்க்கு முக்தி கிடைப்பதில் என்ன சந்தேகம்?
அகில லொஇகத்திற்கும் ஆதாரமான கண்ணனை உங்கள் பிள்ளை என்று சாதாரணமாக எண்ணாதீர்கள்.
அவன் அசுரர்களை அழித்து, நல்லோரைக் காத்து மண்ணுலகத்தின் பாரத்தை நீக்க வந்தவன். என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாரதர் முகமாக நவயோகிகளின் உபதேசங்கள் அனைத்தையும் கேட்ட தேவகிக்கும் வசுதேவருக்கும் ஞானம் பிறந்தது.
இவற்றை மனத்தை ஒருமுகப்படுத்திக் கேட்பவர் அனைவர்க்கும் சோகமோகங்கள் அகன்று பரப்ப்ரும்மம் வசமாகும்
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment