நிமிச் சக்ரவர்த்தி அடுத்த கேள்வியைக் கேட்டார்.
யோகீஸ்வரர்களே!
பகவானை வழிபடாதவர்கள் பெரும்பாலும் புலனடக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களது கதி என்ன?
இக்கேள்விக்கு சமஸர் பதிலுரைத்தார்.
குணங்கள் மற்றும் கர்மங்களுக்கேற்ப விராட் புருஷனின் வடிவம் மற்றும் அங்கங்கள் இருக்கின்றன.
அந்தந்த அங்கங்களிலிருந்து தோன்றும் ஜீவன்கள் அவற்றிற்கேற்ற கர்மம் அமைகிறது.
எவர் அவரை அவமதிக்கிறார்களோ அவர்கள் தம் நிலையிலிருந்து இழிவு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு அர்ப்பணிப்புடன் கூட கர்மா வாய்ப்பதில்லை. வினைப்பயனின் வயப்பட்டு பிறவிச் சுழலில் மாட்டுகிறார்கள்.
அத்தகைய அனைவரும் உய்யும் வழி ஒன்றே. உம்மைப்போல் ஸத்சங்கத்தில் ஈடுபடுபவர்கள் கருணையின்பால் அவர்களை ஆதரிக்கவேண்டும்.
ஆசிரம விதிப்படி கர்மங்களை அனுசரிப்பவனுக்கு கர்ம பலனை பகவானுக்கு அர்ப்பணிப்பதால் பகவான் சுலபன் ஆகிறான்.
சிலரோ வேதம் படிக்கும் தகுதி இருப்பினும் படித்தாலும் அதில் கூறப்பட்டிருக்கும் கர்மகாண்டத்தில் மாட்டிக்கொண்டு அற்பபலனை எதிர்நோக்கி கர்மாக்களைச் செய்கிறான்.
எந்த கர்மாவானாலும் அதன் உட்பொருளை உணர்ந்து கர்வமோ, தாழ்வு மனப்பான்மையோ இன்றி அதைச் செவ்வனே செய்து பலனை பகவானுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும்.
சிலர் தமது கர்மம் உயர்ந்ததென்றும், சிலர் செவ்வனே செய்வதற்காகவும், குடிப் பிறப்பிற்காகவும் கர்வம் கொண்டு தம்மைத் தாமே அறிஞர் என்று நினைத்துக்கொள்கின்றனர். இவர்களுக்கு ரஜோ குணம் அதிகமாகிவிடுகிறது. அதனால் செய்வது சீரிய பணியானாலும் சிந்தனை பாழ்படுகிறது. காமம், கோபம், பகட்டு, ஆகியவற்றாலும் தம்மைத் தாமே புகழ்வது போன்ற இழிச்செயல்களாலும் தம் நிலையை விட்டுக் கீழே விழுகின்றனர். அதனால் இன்னும் மோசமாகி பக்தர்களை இகழவும் துணிவர்.
பெண்ணாசை கொண்டவர்கள், வீடு, குடும்பம், பொழுதுபோக்கு காமம் இவற்றைப் பற்றியே எப்போதும் நினைத்துக்கொண்டும் பேசிக்கொண்டும் வீண் பொழுது போக்குகிறார்கள். ஆடம்பர செலவுக்கு சற்றும் அஞ்சாதவர்கள், வேதியர்க்கு தக்ஷிணை கொடுக்கக் கணக்கு பார்ப்பார்கள். அதனால் முறைகள் தவறி, வேதகர்மாக்களைச் செய்வார்கள்.
கால்நடைகளைக் கொல்லும் தொழிலை விரும்பிச் செய்வார்கள்.
இவர்களுக்குத் தமது அழகு, கல்வி, பணம், தானம், உடல்பலம், மனோபலம் ஆகியற்றால் மலையளவு அகந்தை பெருகிநிற்கும்.
அறிவுக்குருடர்களான இவர்களுக்கு ஸாதுக்கள் மீதும் பக்தர்கள் மீதும் ஒரு அலட்சியம் இருக்கும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவமானப்படுத்தி மகிழ்வார்கள்.
பெண்ணுறவு, மாமிசம், சுராபானம் ஆகியவை சாஸ்திரங்களில் சில சமயங்களில் சிலருக்கு அனுமதிக்கப்படுகிறதுதான். ஆனால், அவை கட்டாயமில்லை. இயல்பாக இருக்கும் வேட்கையை நெறிப்படுத்தவே அவை அனுமதிக்கப்படுகின்றன. ஞானத்தை அடைய விரும்புபவன் அவற்றிலிருந்து விலகி இருப்பதே நன்மை பயக்கும்.
தர்ம வழியில் பொருளைச் செலவிட்டால் ஞானம் பிறக்கும். ஞானத்திலிருந்து ஆத்ம ஸ்வரூபத்தின் அனுபவமும் சாந்தியும் கிடைக்கும்.
புலனுகர் வழிச் செல்பவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் திடீரென்று வரும் காலனை மறந்துவிடுவது விந்தையிலும் விந்தை.
நன்னெறியற்ற அறிவிலிகள் தங்கள் பாதையே சிறந்ததென்று வாதிட்டு விலங்குகளைக் கொல்வதோடு அது சரியென்று சாஸ்திரத்திலிருந்து ப்ரமாணம் காட்டுவார்கள். மரணத்திற்குப் பின் காலனால் அவர்கள் வேறு உலகம் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கே இவர்களால் கொல்லப்பட்ட விலங்குகள் இவர்களை உண்ணக் காத்திருக்கின்றன என்பதை அறியமாட்டார்கள்.
புழுவானது முன் பக்க உடலை நகர்ந்தி அதை ஆதாரமாக வைத்து உடலை நகர்த்தும். பின்பக்க உடலை ஆதாரமாக வைத்து முனபக்க உடலை நகர்த்தும். ஒரு கணம்கூட புவியின் தொடர்பின்றி அதனால் நகர இயலாது.
அது போலவே ஜீவனும் யாதனா சரீரம் என்ற ஒரு உடலைப் பிடித்துக்கொண்ட பின்பே பாஞ்சபௌதிகமான இந்த உடலை விடுகிறான். காலதேவனால் யாதனா சரீரத்தில் கட்டப்பட்ட ஜீவனுக்கு சுதந்திரம் என்பதே இல்லை. மனிதப்பிறவியில் மட்டுமே பிறவிச்சுழலிலின்று விடுபட அவனுக்கு சுதந்திரத்தின் பாதை திறக்கப்படுகிறது.
மனிதப்பிறவியில் முக்தியின் வழியை பிடித்துக்கொள்ளாவிட்டால் பேரண்டத்தின் இருளில் காலதேவனால் பல்வேறு லோகங்களுக்கு கட்டி இழுத்துச் செல்லப்படுவார்கள். முக்திப்பாதையை தேர்ந்தெடுக்காதவர்கள், மற்றும் பகவானிடம் பக்தி கொண்டு பிறவிச் சுழலினின்று விடுபட முயற்சி எடுக்காதவர்களின் நிலை இதுவே.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment