முன்பொரு சமயம் நர நாராயணர்கள் இருவரும் தீவிரமான தவத்தில் ஈடுபட்டிருந்தனர். அதைக் கண்டு தேவேந்திரனுக்கு பயம் வந்தது. அவர்களது தவத்தைக் கலைக்க உத்தரவிட்டு மன்மதனைத் தன் பரிவாரங்களோடு அனுப்பினான். அவன் ஏராளமான தேவமாதர்களோடு நரநாராயணர்கள் தவம் செய்யும் இடத்திற்கு வந்தான்.
தவம்செய்துகொண்டிருந்த நர நாராயணர்கள் மீது தென்றலை வீசச் செய்தான். மனம் மயக்கும் தேவமாதர்களுடன் சேர்ந்து மன்மதன் காமத்துடன் ரிஷிகளைப் பார்த்து ஆடத் துவங்கினான்.
தவம் கலைந்த நாராயணர் அச்செயலுக்கு தேவேந்திரனே காரணம், மன்மதன் வெறும் ஏவப்பட்ட அம்பு என்று புரிந்து கொண்டார்.
காமக் கணைகளால் நாராயணர் பாதிக்கப்படாமல் இருப்பதையும், அவரது தோற்றத்தையும் கண்ட மன்மதனும் தேவமாதர்களும் அவரது மஹிமையை உணர்ந்துகொண்டனர். அவ்வளவுதான் அவர்களை பயம் பிடித்துக்கொண்டது. பயத்தினால் முகம் வெளிறி என்ன சொல்வாரோ என்று நடுங்கிக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்து நாராயணர் சிரித்தார்.
பின்னர், பயப்படாதீர்கள் என்று அபயம் கொடுத்தார். நீங்கள் எங்கள் இடத்திற்கு விருந்தினராக வந்திருக்கிறீர்கள். இவ்வாசிரமம் விருந்தினரைக் கௌரவிக்காத இடம் என்று இகழப்பட்டுவிடக்கூடாது. என்றார்.
அவர்கள் அனைவரும் அதைக் கேட்டு பயம் நீங்கினாலும், மிகவும் கூச்சத்துடன் தலையைக் கவிழ்ந்துகொண்டார்கள்.
மன்மதன் மெதுவாகத் தழுதழுக்கும் குரலில் பேசினான்.
ப்ரபோ! தாங்கள் ப்ரும்ம ஸ்வரூபமாக விளங்குகிறீர்கள். மாறுபாடு இல்லாத ஆத்மாராமர்கள் தங்கள் திருவடிகளை வணங்குகிறார்கள். எங்களைப் போன்ற அறிவிலிகளின் சாகசங்களுக்கு மயாங்காததோடு எங்களை மன்னிப்பதும் தங்களுக்கு சுபாவமாகும்.
மற்ற தெய்வங்களை உபாசனை செய்பவர்கள் வேள்விகளில் அவியுணவின் மூலம் அந்தந்த தெய்வங்களை த்ருப்தி செய்து விடுவார்கள். இந்த மாதிரியான சாதனைகளில் தேவர்கள் இடையூறு செய்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கும் பங்கு வந்துவிடும். ஆனால் தங்களின் பக்தர்கள் தேவ லோகத்தைக் கடந்து பரமபதம் போய்விடுவர். சுலபமான மார்கத்தினால் தங்கள் அருளைப் பெற்று அனைவரும் மோக்ஷம் போய்விட்டால் தேவர்களுக்கு அவியுணவு கொடுக்க எவர் கிடைப்பார்? என்ற பயத்தினால், தொந்தரவு செய்ய எண்ணுகிறார்கள். ஆனால் தாங்களோ, தங்கள் தேவர்கள் துன்பம் தர இடம் கொடாமல் பக்தரின் இடத்தில் தங்கள் பாதங்களைப் பதித்துவைத்திருக்கிறீர்கள்.
சிலர் பசி, தாகம், கோபம், இயற்கை, சுவை, காமம் அனைத்தையும் அடக்கிப் பொறுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சிலரோ சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு பசுமாட்டின் குளம்படி அளவு உள்ள நீரில் மூழ்கித் தவிக்கிறார்கள்.
அதனால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செய்த தவத்தின் சக்தியை இழந்துவிடுகிறார்கள்.
இவ்வாறு மன்மதன் கூறியதும், பகவான் நாராயணர் பகவானுக்குச் சேவை செய்து கொண்டிருக்கும் சில பேரழகுப் பெண்களைக் காட்டினார். அவர்களின் அழகில் வந்திருந்த அனைவரும் மயங்கித் தத்தம் வனப்பை இழந்தனர்.
இவர்கள் வைகுண்டத்தில் பகவானுக்கு சேவை செய்யும் பெண்கள். நீங்கள் விரும்பி அவர்களுள் ஒருவரை உங்கள் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறினார்.
காமதேவன் முதலான தேவர்கள் நாராயணரை வணங்கி ஊர்வசியை அழைத்துக்கொண்டு தேவலோகம் சென்றனர்.
நடந்தவை அனைத்தையும் அவர்கள் வாயிலாகக் கேள்விப்பட்ட தேவேந்திரன் பயந்து நடுங்கினான். அங்கிருந்தவாறே மானசீகமாக நாராயணரை வணங்கினான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment