கண்ணன் சாந்தீபனியின் இறந்த பிள்ளையை மீட்டுத் தந்த விஷயத்தை தேவகி அப்போதுதான் கேள்வியுற்றாள் போலும். அவள் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது. கம்சனால் கொல்லப்பட்ட தன் ஆறு புதல்வர்களை எண்ணினாள்.
அவர்கள் இருந்திருந்தால் கண்ணனுக்கு ஏழு அண்ணன்கள் இருந்திருப்பார்களே.
கண்ணன் பிறக்கும்போதே கம்சனால் ஆபத்து இருந்தது என்று பார்த்தால், வளர்ந்த பின்னும் ஒவ்வொரு நாளும் அசுரர்கள் தொடர்ந்தனர். கம்சனின் அழிவுக்குப் பின்னரும் யாராவது ஒரு அரசன் அல்லது அசுரன் மூலம் கண்ணனுக்கு ஆபத்து வந்துகொண்டுதான் இருக்கிறது. பலகாலம் வாழ்ந்த மதுராவை விட்டு துவாரகை வந்து அப்பப்பா..
ஆறு அண்ணன்களும் இருந்திருந்தால் தம்பியான கண்ணனுக்கு அரணாய் இருந்திருப்பார்களே. எந்தப் போர் வந்தாலும் இவன் ஓடவேண்டாம்.
பெற்ற குழந்தைகளுக்கு ஒரு வேளை பாலூட்டக்கூட இயலாமல் போனதே.
எண்ணி எண்ணி நெஞ்சம் விம்மினாள். தாயின் வருத்தமதைத் தனயன் அறியானா?
அன்னையைக் காண வந்தான்.
இறந்த குழந்தைகளைக் கேட்பது விதிக்கு விரோதமல்லவா..
குருவென்பதால் குழந்தையை மீட்டான். தன் சகோதரர் என்றால் என்ன சொல்வானோ என்று யோசித்தாள். எனவே
மெதுவாக தயங்கி தயங்கிக் கேட்டாள் தேவகி.
கண்ணா! நீயும் பலராமனும் உலகின் பாரம் நீக்கத் தோன்றியவர்கள். உலகின் தலைவர்கள். அசுரர்களை அழிப்பதற்காகவே வடிவம் எடுத்தீர்கள்.
உன் ஆற்றலின் சிறு வடிவமே மாயை. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவற்றைத் தன்னிச்சையாகச் செய்கிறாய். உன்னை முழுமையாகச் சரணடைந்தேன்.
குருதட்சிணை செலுத்த குருதேவர் சாந்தீபனியின் புதல்வனை எமலோகத்திலிருஎது மீட்டு வந்தாயல்லவா? அதேபோல என் விருப்பத்தையும் நிறைவேற்றுவாயா? கம்சனால் கொல்லப்பட்ட என் ஆறு புதல்வர்களையும் நான் மீண்டும் ஒருமுறையாவது காண விரும்புகிறேன். என்றாள்.
உதரத்தில் சுமந்த தாயின் கண்ணீரைத் துடைக்க எண்ணினான் கண்ணன். அவன் நினைத்தால் ஆகாததென்ன?
பலராமனையும் அழைத்துக்கொண்டு ஸுதலலோகம் சென்றான்.
அங்கே தலைவனாக கொலுவிருப்பது பரம பக்தனான பலிச் சக்ரவர்த்தி. தன் லோகத்திற்குக் கண்ணன் வந்திருப்பதை அறிந்து ஓடோடி வந்தான். மனைவி மக்களுடன் தடியைப்போல் விழுந்து வணங்கினான்.
கண்ணனையும் பலராமனையும் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி, பாத பூஜை செய்தான்.
ப்ரும்மா முதல் அனைத்து தேவர்களும் ரிஷிகளும் தலையில் தரிக்கின்ற பாத தீர்த்தத்தை மனைவி மக்களுக்குத் தெளித்து தானும் சிரசில் ஏற்றான்.
உயர்ந்த காணிக்கைகளைக் கொண்டு வந்து திருவடிகளில் ஸமர்ப்பித்து நா தழுதழுக்க கண்ணீர் மல்கத் துதி செய்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment