ஒரு சமயம் பலராமன் மட்டும் ரதத்தில் ஏறி கோகுலம் சென்றான்.
வெகுநாள்களாக அவனைக் காணாததால் நந்தனும், மற்ற உறவினர்களும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். யசோதையும் நந்தனும் அவனை மிகவும் கொண்டாடினர். நந்தர் அவனை மடியில் இருத்திக்கொண்டு கண்ணீர் உகுத்தார்.
கோபர்கள் அனைவரும் பலராமனைக் கட்டித் தழுவிக்கொண்டனர். அவன் கையைப் பிடித்துக்கொண்டு மனத்திற்கினிய கதைகளைப் பேசத் துவங்கினர்.
முதியவர்கள் அனைவரையும் போய்ப் பார்த்து வணங்கினான் பலராமன்.
அனைவரும் அவனிடம் கண்ணனைப் பற்றி விசாரித்தனர்.
நம் உறவினர்கள் அனைவரும் நலமா? கண்ணன் எப்படி இருக்கிறான்? நீங்கள் எல்லாரும் எங்களை எப்போதாவது நினைப்பீர்களா?
நல்லவேளையாக கம்சன் ஒழிந்தான். தேவகியும் வசுதேவரும் துயரங்களிலிருந்து மீண்டனர்.
காலயவனன், ஜராசந்தன் போன்றவர்களின் தொல்லைகளையும் ஒழித்துவிட்டீர்கள்.
இப்போது துவாரகையில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். மதுராவில் இருந்தால் தயிர் பால் விற்கும் சாக்கில் அவ்வப்போது வந்து உங்களைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வோம். துவாரகையிலிருப்பதால் எங்களுக்கு எந்தச் செய்தியும் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. என்றனர்.
பலராமனுக்கென்று ஒரு கோபியர் கூட்டம் இருந்தது. அவர்கள் அனைவரும் பலராமனைக் கண்டதும் பேரானந்தம் அடைந்தனர்.
பலராமன் வந்ததைக் கேள்வியுற்று எல்லா கோபிகளும் அவனைக் காண வந்தனர்.
அவனைப் பார்த்ததும் மகிழ்ச்சியால் சிரித்துக்கொண்டே கேட்டனர்.
நகரத்துப் பெண்களின் பிரியனான கண்ணன் சௌக்கியமா? ஒரு முறையாவது இங்கு வருவானா? அவனுக்காக நாங்கள் எங்களது உறவுகள் அனைத்தையும் துறந்தோம். உங்கள் அன்பிற்கு ஈடு செய்யவே இயலாதென்று இனிக்க இனிக்கக் கூறினான். இப்படிப் பட்ட பேச்சை யார்தான் நம்பாமல் இருப்பார்கள்? அந்த நகரத்துப் பெண்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
இன்னொருத்தி இடைமறித்தாள், அவன் என்ன நம்மை நினைத்துக் கொண்டா இருக்கிறான்? நாமும் அவனைப் பற்றிப் பேசாமல் நம் பொழுதைப் போக்குவோம். என்றாள்.
அவ்வாறு நம்மால் இருக்க இயலாதடி என்று இன்னொருத்தி கூற அனைவரும் அழத் துவங்கினர்.
சமாதானப் படுத்தும் கலையில் வல்லவனான பலராமன் அவர்கள் அனைவரும் மகிழும் வண்ணம் பேசினான். பின்னர் அவர்களுக்கு கண்ணன் பற்றிய விஷயங்களைக் கூறினான்.
கோகுலத்திலேயே சித்திரை மற்றும் வைகாசி ஆகிய இருமாதங்கள் தங்கி அவர்கள் அனைவருக்கும் ஆனந்தத்தைக் கொடுத்தான். தன்னுடைய கோபியருடன் வனங்களில் சுற்றித் திரிந்தான்.
ஒரு முறை அவர்களுடன் யமுனைக்குச் சென்றான். தான் நிற்குமிடத்திற்கு யமுனையை அழைக்க அவள் வரவில்லை. அதைக்கண்டு கோபமுற்று உன்னைப் பிளக்கிறேன் பார். என்று சொல்லி கலப்பையால் யமுனையைப் பிடித்து இழுக்க, அவள் பயந்துபோய் சரணாகதி செய்தாள்.
பலராமா! உன் ஆற்றல் பற்றி நான் அறியவில்லை. ஆதிசேஷனான நீதான் இவ்வுலகத்தைத் தாங்குகிறாய். உன் பெருமையை அறியாமல் அலட்சியம் செய்துவிட்டேன். மன்னிப்பாயாக. என்று வேண்டினாள்.
இன்றும் பலராமன் கலப்பையால் இழுத்துத் திருப்பிய வழியிலேயே யமுனை ஓடிக்கொண்டிருக்கிறது.
பின்னர் பலராமன் அந்தப் பெண்களுடன் யமுனையில் இறங்கி ஜலக்ரீடை செய்தான். அவன் கரையேறும் சமயம், லக்ஷ்மிதேவி அங்கு வந்து கடலின் நீலநிறமுள்ள இரண்டு பட்டாடைகளையும், நிறைய ஆபரணங்களையும், வாடாத தாமரை மலர் மாலையையும் அவனுக்குக் கொடுத்தாள்.
அவையனைத்தையும் அணிந்த பலராமன் மிகவும் அழகாக விளங்கினான்.
அனைவர்க்கும் அவ்விரண்டு மாதங்களும் ஒரே இரவுபோலக் கழிந்தன.
பலராமன் கோகுலம் சென்றிருந்த வேளையில் கண்ணன் இன்னொரு லீலை செய்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment