பேத்தியின் திருமணம் முடிந்ததும் நண்பர்களின் தூண்டுதலால் ருக்மி பலராமனை சொக்கட்டான் ஆட அழைத்தான்.
பலராமன் ருக்மியின் அழைப்பை ஏற்று சொக்கட்டான் ஆட வந்தார். ஒவ்வொரு முறையும் பணயப் பணம் முழுவதையும் ருக்மியிடம் தோற்றார். அவ்வமயம் ருக்மியின் நண்பர்களான கலிங்க மன்னன் முதலானோர் பலராமனைப் பலவாறு இழித்தும் பழித்தும் பேசினர். அவர்களோடு சேர்ந்து ருக்மியும் சிரித்தான்.
அடுத்த ஆட்டத்தில் ருக்மி ஒரு லட்சம் பொட்காசுகளைப் பணயம் வைத்தான். அதை பலராமன் வென்றான். ருக்மி ஆட்டத்தை ஏமாற்றி நான் தான் வென்றேன் என்று சாதித்தான். அவனது நண்பர்கள் அதற்கு சாட்சி சொல்லி கேலி செய்தனர்.
ஏற்கனவே பலராமனுக்குக் கோபம் அதிகம். இப்போது அவர்கள் ஏமாற்றியது அவரது கோபத்தை அதிகமாக்கிற்று.
கண்கள் சிவக்க பத்துகோடி பொற்காசுகளை வைத்து ஆடினார்.
இம்முறையும் சூதாட்ட நெறிப்படி பலராமனே வென்றார். ஆனால் ருக்மி நான்தான் ஜெயித்தேன் என்று கூறி, நடுவர்கள் சொல்லட்டும் என்றான்.
அப்போது பலராமனுக்கே ஜெயம், ருக்மி சொல்வது பொய் என்று அசரீரி கேட்டது.
அதைக் கேட்ட ருக்மி, அசரீரி வாக்கைப் பொருட்படுத்தாமல் தன் பழைய சுபாவத்தினால் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பலராமனை ஏசத் துவங்கினான்.
நீங்கள் இடையர்கள், மாடு மேய்ப்பவர்கள், காட்டில் அலையும் பரதேசிகள், சொக்கட்டான் ஆட்டம் அரசர்களுக்குரியது. காட்டுவாசிகளுக்கு இந்த ஆட்டம் எப்படித் தெரியும்? என்று கத்தினான்.
அதைக் கேட்ட பலராமன் மிகவும் சினம் கொண்டு அங்கிருந்த இரும்புத் தடியை எடுத்து திருமண மேடையிலேயே அவனை அடித்துக் கொன்றார்.
கலிங்க மன்னன் பற்களைக் காட்டி காட்டி கேலி செய்தான். இப்போது பயந்து தப்பி ஓடிய அவனைப் பிடித்து பற்களைத் தட்டினார்.
மீதி அரசர்கள் இரும்புத் தடியின் அடி தாங்காமல் ரத்தம் வழியச் சிதறி ஓடினர்.
இதைக் கண்ட கண்ணன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ஏனெனில் ருக்மியைக் கொன்றதற்கு பலராமனைப் பாராட்டினால் ருக்மிணி வருந்துவாள். பலராமனை அச்செயலுக்காக இகழ்ந்தால் அவன் வருத்தப்படுவான்.
எனவே அமைதியாக அடுத்த வேலைக்குத் தூண்டினான்.
அனைவரும் மணமக்களைத் தேரிலேற்றிக்கொண்டு துவாரகைக்கு வந்தனர்.
அப்போது பரிக்ஷித், மஹரிஷி, அநிருத்தன் பாணாசுரனின் மகள் உஷாவை மணந்தார் என்று கேள்வியுற்றேன். அப்போது பரமேஸ்வரனுக்கும் கண்ணனுக்கும் யுத்தம் நிகழ்ந்ததாமே. அதை விளக்கமாகக் கூற இயலுமா? என்றான்.
ஸ்ரீ சுகர், பதிலுரைக்கத் துவங்கினார்.
ஆமாம் அரச குலத் திலகமே! வாமன வடிவில் வந்த பகவானுக்கு தான் உள்பட அனைத்தையும் தானம் வழங்கிய பலிச் சக்கரவர்த்தியின் கதையை முன்பு கூறினேன் அல்லவா? அந்த பலிக்கு நூறு புதல்வர்கள். அவர்களுள் மூத்தவன் பாணன். அவன் சிறந்த சிவபக்தன். மிகவும் மரியாதை க்குரிய வன். வள்ளல், பெரிய அறிவாளி, ஸத்யஸந்தன்.
அவன் சோணிதம் என்ற அழகிய நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்தான்.
பரமேஸ்வரனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிருந்த அவனுக்கு தேவர்களும் பணிவிடை செய்தனர்.
பரமேஸ்வரன் அவனுக்கு ஆயிரம் கரங்களை அருளியிருந்தார். ஒரு முறை பாணம் கைலாயத்தில் சிவன் தாண்டவமாடும் சமயத்தில் தன் ஆயிரம் கரங்களாலும் வாத்தியங்களை வாசித்து அவரை மகிழ்வித்தான்.
சரணடைந்தவர்களை அன்புடன் காக்கும் பரமேஸ்வரன், அவனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பாணன் அவரை விழுந்து வணங்கினான். பின்னர் நீங்கள்என் நகரத்தையும் என்னையும் காக்கவேண்டும். அங்கேயே இருக்கவேண்டும் என்றான்.
கொடுத்த வரத்தைக் காப்பதற்காக பரமேஸ்வரன் சோணிதம் என்ற நகரத்தைக் காவல் காத்து அங்கேயே வசித்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment