கண்ணன் செல்வம் கொழிக்கும் நரகாசுரனின் அரண்மனைக்குள் சென்றான். அங்கே ஆயிரக்கணக்கான பெண்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கண்ணன் தங்களை நோக்கி நடந்து வரும் காட்சியைக் கண்ட மாத்திரத்தில் அவர்கள் அனைவரும் கண்ணன் மீது காதல் கொண்டனர்.
இவரே எனக்குக் கணவராக அமைய ப்ரும்மதேவன் அருள் செய்யட்டும் என்று அவர்கள் அனைவரும் மனத்தினுள் வேண்டினார்கள்.
கண்ணன் அவர்கள் அனைவரையும் நீராடிப் புத்தாடை அணிந்தபின் அவர்களைத் தனித்தனிப் பல்லக்குகளில் ஏற்றினான். பெரும் செல்வத்தையும், தேர்களையும் குதிரைகளையும் அவர்களோடு சேர்த்து துவாரகைக்கு அனுப்பினான்.
ஐராவதத்தின் வம்சாவளிகளான நான்கு தந்தங்கள் கொண்ட அறுபத்து நான்கு வெள்ளை யானைகளையும் அவர்களுடன் அனுப்பினான்.
பின்னர் அங்கிருந்து ஸத்யபாமாவுடன் கருடன் மீதேறிக் கிளம்பினான். நேராக இந்திர லோகம் சென்றான்.
தேவேந்திரன் இந்திராணியுடன் சேர்ந்து கண்ணனையும் பாமாவையும் மிகுந்த மரியாதைகளுடன் வரவேற்றான். பாதபூஜைகள் செய்தான். நரகாசுரனிடமிருந்து கொண்டுவந்த அதிதியின் குண்டலங்களை தேவேந்திரனிடம் கொடுத்தான் கண்ணன்.
பின்னர் கிளம்பும் சமயம் பாரிஜாத மரத்தைக் கேட்டான் கண்ணன். தன் தாயின் குண்டலங்களை மீட்டுத் தரும்படி துவாரகைக்கு வந்து வேண்டிய இந்திரன் இப்போது கண்ணன் அதை நிறைவேற்றிக் கொடுத்ததும் தன் சுபாவத்தைக் காட்டினான். ஏற்கனவே இந்திரன் கண்ணனை எதிர்த்து மழையைப் பொழிவித்தான். அப்போது கண்ணன் கோவர்தனத்தை குடையாய்ப் பிடித்து இந்திரனின் கர்வத்தை அடக்கினான். இப்போது அனைத்தும் மறந்து கண்ணனிடம் பாரிஜாதமரத்தைத் தரமறுத்தான் இந்திரன்.
பாரிஜாத மரம் தேவர்களுக்குரியது. நீர் இறைவனே ஆனாலும் மனிதன். மனித உலகத்திற்கு பாரிஜாதமரத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க இயலாது என்றான்.
மிகுந்த கோபம் கொண்ட கண்ணன், மரத்தை வேருடன் பிடுங்கி கருடன் மீது வைத்துக்கொண்டு பாமாவுடன் கிளம்பினான். அப்போது அறிவற்ற இந்திரன் தேவர் படையுடன் கண்ணனை எதிர்த்தான்.
கண்ணன் தேவர் படையைச் சிதறடித்து தேவேந்திரனை வென்று பாரிஜாத மரத்தை துவாரகைக்கு எடுத்துவந்தான்.
ஸத்யபாமாவின் தோட்டத்தில் பாரிஜாதமரம் நிறுவப்பட்டது. பாரிஜாதமலரின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட வண்டுகள் தேவலோகத்திலிருந்து தொடர்ந்து வந்துவிட்டன.
தன் காரியம் நிறைவேறக் கண்ணனை வணங்கிய இந்திரன் காரியமானதும் சமருக்கு வருகிறான். பதவியால் வந்த ஆணவம்!
நரகனின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 16100 கன்னிகைகளையும் கண்ணன் ஒரே முஹூர்த்தத்தில் 16100 உருவங்கள் எடுத்து திருமணம் செய்துகொண்டான். பின்னர் அவர்களுடன் தனித்தனியாக மாளிகை அமைத்து வாழத் துவங்கினான்.
தேவாதிதேவனாகவோ, அரசனாகவோ இல்லாமல் ஒரு சாதாரண இல்லறத்தான்போல் அவர்களுடன் குடும்பம் நடத்தினான்.
அவர்கள் அத்தனை பேரும் அரசிளங்குமரிகள். ஒவ்வொருவர்க்கும் அவரவர் தேசத்திலிருந்து ஏராளமான செல்வங்களும் பணிப்பெண்களும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
ருக்மிணி உள்பட கண்ணனின் மனைவிமார்கள் அனைவரும் தங்களுக்கென்று
நூற்றுக்கணக்கான பணிப்பெண்களைக் கொண்டவர்கள். இருந்தபோதிலும் கண்ணனுக்கான பணிவிடைகளைத் தாமே முன்வந்து செய்தனர்.
வரவேற்பது, திருவடி பூஜை, கண்ணனுக்காக சமைப்பது, உணவு பரிமாறுவது, தாம்பூலம் கொடுப்பது, விசிறுவது, நீராட்டுவது அனைத்தையும் தங்கள் கண்ணனுக்குத் தாமே ஆவலுடன் செய்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment