சிலகாலம் சென்றதும் மறைந்திருந்த பாண்டவர்கள் திரௌபதியின் சுயம்வரத்தில் வெளிப்பட்டனர். அவர்களது பங்கு என த்ருதராஷ்ட்ரன் ஒரு வறண்டபூமியைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.
பாறைகளும் புதர்களும் நிறைந்து வெடித்துப்போன அந்த பூமியைக் கண்ணன் தன் அமுத கடாக்ஷத்தால் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றினான். அங்கு தேவ சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு ஒரு நகரம் அமைக்கப்பட்டது. அதற்கு இந்திரப் பிரஸ்தம் என்று பெயரிட்டான் கண்ணன். கண்ணன் உருவாக்கிய நகரமே தில்லி என்ற பெயர் பெற்று இன்றும் நம் தலைநகராக விளங்குகிறது.
இந்நிகழ்வுகள் கழித்து துவாரகை வந்த கண்ணன் சிலமாதங்கள் கழித்து பாண்டவர்கள் மேலிருந்த அன்பினால் மீண்டும் இந்திரப் பிரஸ்தம் சென்றான்.
கண்ணனைக் கண்டதும் பாண்டவர்களுக்குப் புதிய தெம்பு பிறந்தது.
அனைவரும் கண்ணனை வணங்கினர். புது மணப்பெண்ணான திரௌபதியும் கண்ணனை வணங்கினாள்.
குந்தியிடம் சென்று நலம் விசாரித்தான் கண்ணன். குந்தியோ கண்ணா நீ ஒருமுறை அக்ரூரரை நலம் விசாரிக்க அனுப்பினாயே. அப்போதே எங்களுக்கு எல்லா நலனும் வந்துவிட்டது. அதன் பிறகு எது நடந்தாலும் நான் பெரிதாகக் கவலை கொள்வதில்லை. கணவரை இழந்து நரிகளின் நடுவில் பசுவைப்போல் நின்றிருந்த எனக்கு ஆதாரமாக நீ தேடி வந்தாய். உனக்கு பேதங்கள் ஏதுமில்லை. ஆனாலும் உன்னை நினைப்பவரின் துயரங்களை நீ போக்குகிறாய். என்றாள்.
அப்போது மழைக்காலம் வந்துவிட்டதால் அந்த நான்கு மாதங்களும் கண்ணன் அங்கேயே தங்கினான்.
கண்ணனும் அர்ஜுனனும் ஒத்த வயதுடையவர்கள். இருவரும் உற்ற நண்பர்களாயினர். இருவரும் இணைந்து பொழுது போக்குவதற்காகத் தேரிலேறி நாடு நகரமெல்லாம் சுற்றிய பின் காட்டிற்கு வந்தனர்.
அர்ஜுனன் சில மிருகங்களை வேட்டையாடினான். நாவறண்டுபோகவே இருவரும் அருகிலிருந்த யமுனைக்குச் சென்றனர்.
முகம் கழுவி, நீர் அருந்தி உள்ளம் குளிர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு அழகிய பெண் தவமியற்றிக்கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும், கண்ணன் அவள் யாரென்று அறிந்துவரச்சொல்லி அர்ஜுனனை அனுப்பினான்.
அர்ஜுனன் அவளருகே சென்று கேட்டான்.
ஓ! அழகிய பெண்ணே! நீ யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறாய்?
அவள் தவம் கலைத்து அர்ஜுனனைக் கண்டு வணங்கினாள்.
நான் சூரியதேவனின் மகள். என் பெயர் காளிந்தி என்பதாகும். பகவான் விஷ்ணுவைத் திருமணம் செய்ய விரும்பித் தவம் இயற்றுகிறேன். அவர் வந்து என்னைக் கைப்பற்றும்வரை இங்கேயே இருந்து தவம் செய்வேன் என்றாள்.
அர்ஜுனன் இதைக் கண்ணனிடம் தெரிவித்ததும் கண்ணன் அவளையும் தேரிலேற்றிக்கொள்ளச் சொன்னான். காளிந்தியை அழைத்துக்கொண்டுபோய் திரௌபதியின் பொறுப்பில் விட்டார்கள்.
காண்டவ வனம் என்ற அடர்ந்தவனத்தை அக்னிபகவான் உணவாக்க விரும்பினார். அதற்கு உதவி செய்வதற்காக அர்ஜுனனுக்குத் தேரோட்டினான் கண்ணன். அர்ஜுனனின் பராக்ரமத்தால் காண்டவவனம் முழுதும் அக்னிக்கு உணவாயிற்று. அக்னி பகவான் மிகவும் மகிழ்ந்து காண்டீபம் என்ற வில்லையும், குறைவுறாத இரு அம்பறாத் தூணிகளையும், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேரையும், யாராலும் பிளக்க இயலாத கவசத்தையும் அர்ஜுனனுக்கு வழங்கினார்.
காண்டவத் தீயில் மாட்டிக்கொண்ட அசுர சிற்பியான மயனையும் காப்பாற்றினான் அர்ஜுனன். அவனும் மனம் மகிழ்ந்து ஒரு அழகிய மாயச் சபையை பாண்டவர்களுக்காக உருவாக்கித் தந்தான்.
தர்மபுத்திரர் ராஜஸூய யாகம் நடத்தினார். அதற்கு வருகை தந்திருந்த துரியோதனன் அந்த மாயச் சபையில் தடுமாறி விழுந்தான்.
வேள்வி முடிந்ததும் அனைவரின் அனுமதியையும் பெற்று காளிந்தியை அழைத்துக்கொண்டு துவாரகை திரும்பினான் கண்ணன்.
நல்லதொரு திருநாளில் பெற்றோரும் உற்றாரும் வாழ்த்த காளிந்தியை மணந்தான் கண்ணன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment