கோகுலத்தில் சில துர்நிமித்தங்கள் தோன்றின. வானில் கொள்ளிக்கட்டை விழுவது, பூமி நடுங்குவது, ஆண்களின் உடலின் இடப்புறம் துடிப்பது போன்ற மிகப்பெரிய உத்பாதங்கள் தோன்றின. அவற்றைக் கண்டு ஏதோ ஆபத்து என்று நந்தன் அஞ்சினான்.
கண்ணன் பலராமன் இன்றி தனியாக மாடு மேய்க்கச் சென்றிருப்பது நினைவு வர, பதைபதைத்துப் போனான்.
அனைவரும் கண்ணனைக் காணக் கிளம்பினர்.
வழியெங்கிலும் தாமரை, சங்கு, சக்ர ரேகைகள் கொண்ட கண்ணனின் பாதச் சுவடுகளைப் பின்பற்றினர். அப்போது எதிரே ஒருவன் வந்து காளியன் மடுவில் கண்ணன் குதித்ததைச் சொல்ல, அனைவரும் நேராக மடுக்கரைக்கு ஓடிவந்தனர்.
அங்கே கண்ணனை முழுதுமாக மறைத்துச் சுற்றிக்கொண்டிருந்தது காளியன்.
அதைக் கண்டதும் யசோதையும் பல பெண்களும் மூர்ச்சையாகி விழுந்தனர்.
கண்ணனின் பெருமையை மறந்து நந்தனும் மற்ற கோபர்களும் நீரில் இறங்கத் துணிந்தனர்.
அப்போது பலராமன் அவர்களைத் தடுத்தான்.
மூர்ச்சை தெளிந்து எழுந்த யசோதை மடுவில் இறங்க ஓடினாள். மற்ற கோபிகள் அவளைப் பிடித்து, கண்ணனின் பெருமைகளை நினைவு கூர்ந்தனர். கண்ணன் வந்துவிடுவான் என்று ஆறுதல் சொன்னாலும் அவர்களுக்கும் பயமாகத்தான் இருந்தது.
பலராமன் கண்ணனின் பெருமைகளைப் பலவாறு எடுத்துச் சொல்லி, கண்ணன் வந்துவிடுவான், அவனைப் பார்த்துக்கொள்ள அவனுக்குத் தெரியும். நாம் சென்றால் அவனுக்குத் தொந்தரவாகக் கூடும். என்று விளக்கினான்.
அனைவரும் தவிப்பதைப் பார்த்த கண்ணன், விளையாடியது போதும் என்றெண்ணினான்.
தன் உடலைப் பருக்கச் செய்தான். இறுக்கிச் சுற்றிக்கொண்டிருந்த காளியனுக்கு வலிக்கத் துவங்கியது. வலியினால் அவன் கண்கள் சிவந்தன.
வலி பொறாமல், வேறு வழியின்றித் தன் பிடியைச் சற்று தளர்த்தினான் காளியன். கண்ணன் ஜல்லென்று வழுக்கிக்கொண்டு மேலே வந்தான்.
மீண்டும் கண்ணனைப் பிடிக்கச் சுற்றி சுற்றி வந்தான் காளியன். கண்ணனும் சுற்றி சுற்றி நன்றாக ஆட்டம் காட்டினான்.
சுற்றி சுற்றிக் களைப்படைந்த காளியன் மீது லாவகமாகத் தாவி ஏறினான் கண்ணன். காளியன் ஒவ்வொரு தலையாகத் தூக்க தூக்க அவற்றின் மீது காலை வைத்து மாற்றி மாற்றிக் குதித்தான் கண்ணன். இவ்வாறு குதித்ததைத் தாள லயத்துடன் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடித் தள்ளியிருக்கிறார்.
தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கோபியர்க்கு அது நாட்டியம் போல் தோன்ற அவர்கள் கரதாளம் போட்டனர். அதற்கேற்பக் கண்ணனும் குதித்தான்.
கண்ணனுக்கு ஆபத்தில்லை என்றுணர்ந்த கோபர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள். அவர்களை நம்ப வைக்க, கண்ணன் தன் இடுப்பிலிருந்த குழலை எடுத்து இசைக்கத் துவங்கினான்.
தையத் திகுதிகு
தையத் திகுதிகு
தையத் திகுவென ஆடும்
கண்ணன் இவனிடம் மையல் கொண்டேன் தோழி நானே
-- மதுரகீதம்
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment