ப்ரும்மா சிறுவர்களையும் கன்றுகளையும் தூக்கிக்கொண்டுபோய் மறைத்து வைத்திருப்பதைத் தன் ஞானத்தினால் உணர்ந்தான் கண்ணன். உடனே ச்ருஷ்டியின் தலைவனான கண்ணன் கன்றுகளின் தாயான பசுக்களுக்கும், சிறுவர்களின் பெற்றோருக்கும் பெருமகிழ்ச்சி அளிக்கத் திட்டமிட்டான்.
அக்கணமே எத்தனை சிறுவர்களோ அத்தனை பேராகவும், எத்தனை கன்றுகளோ அத்தனையாகவும் தானே ஆனான்.
அவர்களது நிறம், கை கால்கள், நடை, உடை, பாவனைகள் அனைத்தும் அப்படியே இருக்கும்படி ஆனான். நெட்டைப் பையன் என்றால் நெட்டைப் பையன், குட்டையானவன் என்றால் அவனைப்போல.
கையில் ஆறு விரல் என்றால் ஆறு விரல், இழுத்து இழுத்துப் பேசுபவன் என்றால் அவனைப்போல, அவரவர்க்கு உடலில் எங்கே மச்சங்கள், தழும்புகள் எல்லாம் அப்படியே. இடதுகைப் பழக்கமுள்ளவன், பேசும்போது ர வராது என்றால் அதே போல, என்னென்ன உடைகள் அணிந்திருந்தார்களோ அத்தனையாகவும் கண்ணனே ஆனான். அவற்றில் எங்கெங்கு கிழிந்திருந்தாலும் அவ்வாறே. அவர்கள் காலையில் கொண்டுவந்த தூக்குச்சட்டி, அலுமினிய டப்பா, கூடை, கொம்பு, குச்சி, குழல், அழுக்குத்துண்டு எல்லாம் கண்ணனே.
கன்றுகளும் அப்படியே. அவைகளுக்கு காதுகள், வால், உடல்வாகு, அவற்றின் கழுத்திலிருந்த கயிறு, மணி, கிண்கிணிகள் அனைத்தும் கண்ணனே.
தானே கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் ஆகி, தன்னுடன் தானே விளையாடிக்கொண்டு, தன்னைத் தானே மேய்த்துக்கொண்டு குதித்துக்கொண்டு கோகுலம் திரும்பினான் கண்ணன்.
அங்கே வந்திருப்பது கண்ணன் என்றறியாமல், அன்னையர்க்கும் தாய்ப்பசுக்களுக்கும் என்றுமில்லாத திருநாளாக தத்தம் குழந்தைகள் மீதும், கன்றுகள் மீதும் அளவற்ற பாசம் பொங்கியது.
வழக்கமாக கன்று மேய்த்து திரும்பும் சமயம், தங்கள் குழந்தைகளையும் விட்டு, கண்ணனைக் கொஞ்சுவார்கள். இன்றோ, கண்ணனே தங்கள் குழந்தை என்றறியாவிடினும் தங்கள் குழந்தையைக் கொஞ்சினார்கள்.
தங்களது சிறிய குழந்தையையும் விட்டு கன்று மேய்த்துத் திரும்பிய மூத்த குழந்தையைக் கொஞ்சினார்கள்.
அதை அவர்கள் வித்யாசமாக உணரவும் இல்லை.
பசுக்களும் புதிதாகப் பிறந்த கன்றுகளுக்கு ஊட்டுவதை விட்டு, காட்டுக்குச் சென்று மேய்ந்து திரும்பிய கன்றை நோக்கி ஓடிவந்தன.
இவ்வாறே கண்ணன் சிறுவர்களாகவும், கன்றுகளாகவும் தானே ஒவ்வொரு வீட்டிலும் வாழ்ந்துகொண்டிருந்தான். விளையாட்டுப் போல் ஒரு வருடம் ஓடிவிட்டது.
ப்ரும்மா தான் ஒளித்து வைத்த குழந்தைகளும் கன்றுகளும் சத்யலோகத்தில் இருக்கின்றனவா அல்லது பூமிக்கு வந்துவிட்டனவா என்று குழம்பிப்போய் இரண்டு மூன்று முறை போய்ப் போய் பார்த்துவிட்டு வந்ததில் பூலோகத்தில் ஒரு வருடம் ஓடிவிட்டது.
நான்கு தலைகளில் இருந்த முடிகளையும் பிய்த்துக்கொண்டார் ப்ரும்மா. நான்கு தலைகளும் நான்கு திசைகளில் சுழன்றன.
சிறுவர்கள் கன்று மேய்ப்பார்கள். பெரிய கோபர்கள் மாடுகளை மேய்ப்பார்கள். அவைகள் ஒன்றையொன்று பார்த்தால் மேய்ப்பது கடினம் என்பதால் வெவ்வேறு இடங்களில் மேய்ப்பார்கள். ஒருநாள் மலைமீது சற்று உயரத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க, சிறுவர்கள் கன்றுகளை மேய்த்துக் கொண்டு மலையடிவாரத்தில் இருந்தார்கள். மேலிருந்து கன்றுகளைப் பார்த்த மாடுகள் கீழே கன்றுகளைப் பார்த்ததும் நாலு கால் பாய்ச்சலில் அவற்றை நோக்கி ஓடின. அவற்றைப் பிடிக்கப்போன கோபர்களின் கட்டுப்பாட்டை மீறின. ஒரு இடையனுக்கு தன் மாடுகள் அவனுக்கு அடங்கவில்லை எனில் அது பெருத்த அவமானமாகும். எனவே மிகுந்த கோபத்துடன் கோபர்கள், ஓடும் மாடுகளைப் பிடிக்கத் தொடர்ந்தனர்.
மாடுகள் கன்றுகளிடம் ஓடிச்சென்று கொஞ்சிப் பாலூட்டத் துவங்கின. துரத்திக்கொண்டு வந்த கோபர்கள் அவற்றை அடக்குவதற்கு பதிலாக தங்கள் குழந்தைகளைக் கொஞ்சத் துவங்கினர். அவர்களது கோபம் கணத்தில் பறந்தது.
இந்த விசித்ரமான காட்சியைக் கண்ட பலராமன் குழம்பிப் போனான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணனைத் திரும்பிப்பார்த்தான். அவன் ஒரு விஷமப் புன்னகையை வீசினான். மீண்டும் பலராமன் கன்றுகளை உற்றுப் பார்க்க, அவனுக்கு அனைத்தும் கண்ணனாகக் காட்சி கிடைத்தது. இது எப்போது நிகழ்ந்தது? உண்மையான கன்றுகளும் சிறுவர்களும் எங்கே? தினமும் இவனோடுதானே இருக்கிறோம். கவனிக்காமல் விட்டோமே?
கண்ணா! எப்போதிலிருந்து இவ்வாறாயிற்று கண்ணா? இது அற்புதக் காட்சி. கண்ணனைக் கேட்டான். கண்ணனோ இவையனைத்தும் விதி (ப்ரும்மா) யின் செயல் அண்ணா. தானே சரியாகும். வாருங்கள் போகலாம் என்று சொல்லி, அனைவரையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment