அன்று காலை எழுந்து கன்று மேய்க்கக் கிளம்பும் சமயத்தில் கண்ணன் பலராமனை சற்றே தொட, அவனுக்கு ஜுரம் மாதிரி வந்துவிட்டது. உடனே ரோஹிணி பலராமனை இன்றொருநாள் வனம் செல்லவேண்டாம் என்று தடுத்தாள். பலராமன் எவ்வளவு அழுது அடம் பிடித்தும் ரோஹிணி அனுப்ப மறுத்துவிட்டாள். அவன் ஏக்கத்துடன் கண்ணனைப் பார்த்தான். கண்ணன் ஏதாவது வக்காலத்து வாங்கி அழைத்துக்கொண்டு போவான் என்று நினைத்தான். ஆனால், அன்றைக்கு அவனை அழைத்துப்போக கண்ணனுக்குத் திருவுளம் இல்லை. எனவே விஷமமாகச் சிரித்துவிட்டு, இன்றைக்கு ஓய்வெடுங்கள் அண்ணா. அம்மா பேச்சை மீறலாமா என்று கேட்டுவிட்டுக் கிளம்பிவிட்டான்.
வேண்டுமென்றேதான் விட்டுச் செல்கிறான் என்று புரிந்ததும் பலராமன் அமைதியானான்.
கண்ணன் வழக்கம்போல் கன்றுகளை முன்னே செல்ல விட்டு, உற்சாகத்துடன் சிறார்கள் தொடரக் கானகம் கிளம்பினான்.
பல்வேறு விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டே சென்றனர். ஒருவனுக்குத் தெரியாமல் அவனது சோற்றுமூட்டையை எடுத்து அடுத்தவனிடம் கொடுப்பது, அவன் அதை அடுத்தவனிடம் கை மாற்றுவது, அவன் காணாமல் தேடி யாரிடம் இருக்கிறதெனக் கண்டுபிடிப்பது, கொம்பு, குழல் முதலியவற்றை ஊதுவது, தேன்வண்டுபோல் ரீங்காரம் செய்வது, ஆகியவற்றை விளையாடிக்கொண்டே சென்றனர்.
அங்கு யமுனைக் கரைக்குச் சென்றதும் அன்னத்துடன் இணைந்து அதைப்போலவே நடந்தனர். மயிலைப்போல் ஆடினர்.
தவளைபோல் கத்திக்கொண்டு தத்திக் குதித்தனர். தண்ணீருக்குள் குதித்து மீன்களைப் போல் நீந்தினர். மலையைப் பார்த்து ஒலி எழுப்பி, எழும் எதிரொலியை ரசித்தனர். குரங்குகளின் வாலைப் பிடித்துக்கொண்டு மரம் ஏறித் தாவினர்.
கண்ணனின் திருவடி தூளியின் ஒரு துகளுக்கு அனைவரும் ஏங்க, அவர்களோ கண்ணனுடன் இணைந்து தூசியில் புரண்டனர். அவர்களது பாக்யமே பாக்யம்.
அகன் என்ற அசுரன், பூதனை மற்றும் பகாசுரன் ஆகியோரின் சகோதரன். உடன் பிறந்தவர்களை அழித்த கண்ணனைக் கொல்வதற்காக வஞ்சம் கொண்டு தினமும் வனத்திற்கு வந்து சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.
இன்று பலராமன் இல்லாமல் கண்ணன் தனியாக வந்திருப்பதைப் பார்த்து இன்று கண்ணனைக் கொன்றுவிடத் தீர்மானித்தான். இருவரையும் தனித்தனியாக இருக்கும்போது கொல்வது சுலபம் என்று எண்ணினான்.
ஒரு யோஜனை நீளமுள்ள மலையைப் போல் பெருத்த மலைப்பாம்பு வடிவமெடுத்து குகை போல் வாயைப் பிளந்துகொண்டு, அவர்களை விழுங்குவதற்காக வழியில் படுத்துக் கிடந்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment